பெண்கள் தங்கள் வாழ்நாளில் 11,000 முதல் 17,000 சானிட்டரி நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதும் இப்போது அதிகரித்து வருகிறது. ஆனால், நாப்கின் மற்றும் டயப்பர் தயாரிப்பில், உடலுக்குத் தீங்கான பல்வேறு ரசாயனப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதாக, வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அய்யா குற்றம் சாட்டுகிறார்.

மேலும், சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் என்னென்ன பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன என்கிற விவரம் அதன் உறையில் எழுதப்பட்டிருப்பதில்லை. அதனால் அதில் பயன்படுத்தப்படும் பொருள்களின் விவரங்களைக் கொடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அய்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதில், ``பெண்கள் தங்கள் வாழ்நாளில் அதிகபட்சமாக 17,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார்கள். இவை, உடலுக்குத் தீங்கு விளைவிக்குமா என்பதில் சந்தேகம் இருக்கிறது. அதில் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருள்களால் பெண்களுக்குப் புற்றுநோய், மலட்டுத்தன்மை, கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
நாப்கின் மூன்று அடுக்கு கொண்டவையாக இருக்கிறது. அதன் நடுவில் பயன்படுத்தப்படும் எஸ்.ஏ.பி (SAP - Super-Absorbent Polymer Gel) திரவம் ஏற்படுத்தும் பக்க விளைவு காரணமாகத் தீராத தலைவலி, காய்ச்சல், தோல் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. தொடர்ந்து வருடக்கணக்கில் நாப்கினை பயன்படுத்தும்போது ரத்த அழுத்தம், மூளை தொடர்பான நோய்கள், பசியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இது போலவே குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் டயப்பரிலும் ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் குழந்தைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களுக்குத் தோல் நோய், ஒவ்வாமை, ஆஸ்துமா, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. அதனால் சானிட்டரி நாப்கின், டயப்பர் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் பொருள்கள் பற்றி அதன் உறையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசின் சுகாதார செயலாளர், துணைச் செயலாளர், தமிழக அரசின் சுகாதாரச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வழக்கு தொடர்ந்துள்ள வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அய்யாவிடம் பேசினோம். ``சானிட்டரி நாப்கின் மூலம் பெண்கள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்து வருகிறார்கள். நிறைய பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படக் காரணமாக இது இருக்கிறது. இதில் சேர்க்கப்படும் எஸ்.ஏ.பி திரவம் (SAP Gel) ஆபத்தானது. 1980-களிலேயே அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அந்தப் பொருள் நாப்கினில் சேர்க்கப்படுகிறது.

சாதாரண உணவுப்பொருள் முதல் மருந்து உள்ளிட்ட எந்தப் பொருளாக இருந்தாலும் பேக்கிங் செய்யும்போது அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்த தகவல்கள் உறையில் இடம்பெற வேண்டும் என்பது விதி. ஆனால், நாப்கினில் அதன் விலையையும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் தவிர எதுவும் இருப்பதில்லை.
இந்தியாவில் பொருள்களின் தரம், பி.ஐ.எஸ். (BIS - The Bureau of Indian Standards) தரச்சான்று அமைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அது நாப்கின், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் டயப்பர் ஆகியவற்றை ஆய்வு செய்வதில்லை. இதற்கான காரணத்தை மாநில அரசிடம் கேட்டால், அவர்களிடம் அதற்கான ஆய்வகம் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியானால், இந்தப் பொருள்களின் பி.ஐ.எஸ் தரத்தை யார் உறுதிப்படுத்துவது?
பொதுவாக, பருத்தியில் இருந்து கிடைக்கும் துணியானது பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், சானிட்டரி நாப்கின் வெள்ளையாக இருக்கிறது. அதற்காக அதை பிளீச் செய்கிறார்கள். அதன் காரணமாகவும் நோய் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது.

வழக்கமாக, 50 மைக்ரான் அளவுக்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை உள்ள நிலையில், சானிட்டரி நாப்கின், டயப்பர் ஆகியவற்றில் அந்தக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறதா? இந்த பிளாஸ்டிக் பொருள்கள் மக்காமல் நீண்டகாலம் மண்ணில் கிடந்து நிலத்துக்குள் தண்ணீர் செல்லவிடாமல் செய்துவிடுகின்றன.
பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை நிலத்தில் வீசும்போது மண்ணுக்குக் கேடாகிறது; எரித்தால் காற்று மாசு ஏற்பட்டு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நாப்கின் தூக்கி வீசப்படுவதால் நீர் மாசுபடுகிறது. இப்படி உடல்நலத்திலும் சுற்றச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் சானிட்டரி நாப்கின், டயப்பர் ஆகியவற்றுக்கு மாற்றாக இயற்கையான முறையில் மூங்கில் நார், பருத்தி நூல் கொண்ட நாப்கின் தயாரிப்புக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க முன்வர வேண்டும்.
ரசாயனத்தால் உருவாக்கப்படும் நாப்கின் தொடர்பான பிரச்னை, உலகம் முழுவதுமே இருக்கிறது. அதனால் இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் மனு அனுப்பியுள்ளேன். உலகம் முழுவதுமே விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் வழக்கு தொடர்ந்திருப்பதால் சர்வதேச நிறுவனங்கள் அச்சம் அடைந்துள்ளன. அதனால் என்னை பயமுறுத்தும் வகையில் சில தொலைபேசி அழைப்புகள் வந்தபோதிலும் நான் அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை” என்கிறார்.
நாப்கின் உருவாக்கத்தில் சேர்க்கப்படும் ரசாயங்கள், அதற்கான மாற்றுப் பயன்பாடு குறித்து நெல்லையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் மதுபாலா மாணிக்கவாசகத்திடம் பேசினோம். ``குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் டயப்பர், சானிட்டரி நாப்கின் ஆகியவை காட்டனால் தயாரிக்கப்பட்டதாக இருப்பது நல்லது.

10 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை அவர்கள் சிறுநீர் கழிப்பது, டாய்லெட் செல்வது என்று இருப்பதைக் கண்காணித்து அவர்களுக்கு டாய்லெட் ட்ரெயினிங் கொடுத்தாலே டயப்பர் பயன்பாட்டைக் குறைக்கலாம், தவிர்க்கலாம். கைக்குழந்தைகளுக்கு, க்ளாத் நேப்பி (Cloth Nappy) பயன்படுத்தலாம். என் அம்மா, என் பேத்திக்கு துணியாலேயே நேப்பி தைத்துக் கொடுத்திருக்கிறார். வெளியிடங்களுக்குச் செல்லும்போது அதையே பயன்படுத்துகிறோம்.
பெண்கள் பயன்படுத்தும் நாப்கினைப் பொறுத்தவரை, விலை அதிகமான பிரபல பிராண்ட் நாப்கின்களில் உதிரத்தை லாக் செய்யும் ஜெல், ஈரம் கசியாமல் தடுக்கும் பிளாஸ்டிக் உறை, நறுமணமூட்டி, ப்ளீச்சிங் ஏஜென்ட்கள், கம் மற்றும் பிற பொருள்கள் எனப் பயன்படுத்தப்படுகின்றன. விலை குறைவான மலிவு விலை நாப்கின்களில் இந்த ஆபத்துகள் இல்லை. எனவே அல்ட்ரா தின், அதிக நேர உலர்வுத் தன்மை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்து பிரச்னைகளை விலைகொடுத்து வாங்காமல், பாதுகாப்பான மலிவு விலை நாப்கின்களைப் பயன்படுத்த பெண்கள் முன் வர வேண்டும்.

மாதவிடாயின்போது நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கினை மாற்ற வேண்டும். ரசாயனப் பொருள்களால் உருவாக்கப்பட்ட நாப்கினை, நீடித்த நேரம், பல ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே சாதாரண காட்டன் நாப்கினையே பயன்படுத்தலாம். மேலும், இப்போது ஹெர்பல் நாப்கின்களும் கிடைக்கின்றன” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, அரசின் முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.