Published:Updated:

கோவிட் 19: `6 முதல் 8 வாரங்களில் மூன்றாம் அலை இந்தியாவைத் தாக்கும்!' - எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை

India Covid Outbreak
India Covid Outbreak ( AP Photo / Channi Anand )

நாம் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது. அது 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவைத் தாக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும், ``மூன்றாம் அலையைத் தவிர்க்க முடியாது, அது 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவைத் தாக்கும்" என்றும் எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார். பல வார கால கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, நாட்டின் சில பகுதிகளில் இப்போதுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமானோருக்குத் தடுப்பூசி போட வேண்டியிருப்பது நாட்டின் முக்கிய சவாலாக உள்ளது.

ரன்தீப் குலேரியா- எய்ம்ஸ் இயக்குநர்
ரன்தீப் குலேரியா- எய்ம்ஸ் இயக்குநர்
மகாராஷ்டிராவில் முன்கூட்டியே கொரோனா 3-வது அலை?! - நிபுணர்கள் எச்சரிக்கை

இந்நிலையில் புதிய டெல்டா பிளஸ் வேரியன்ட் பற்றி பேசியிருக்கும் டாக்டர் குலேரியா, ``வைரஸின் பிறழ்வை மேலும் ஆய்வு செய்யும் வகையில் கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் ஒரு புதிய குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார். மேலும், ``கோவிட் -19 வைரஸின் டெல்டா வேரியன்ட் உருவாகி, அதிலிருந்து புதியதாகத் தூண்டப்பட்டிருக்கிற திரிபுதான் டெல்டா பிளஸ் வைரஸ். இந்தப் புதிய திரிபை இப்போதுள்ள தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்புத் திறனானது எந்த அளவுக்கு எதிர்க்கும் என்பது ஆராய்ச்சிக்குரியது.

முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போது என்ன நடந்தது என்பதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. ஊரடங்கைத் தளர்த்தத் தொடங்கியவுடன், கோவிட் சூழலுக்கு ஏற்ற நடவடிக்கைகளை நாம் பின்பற்ற மறந்துவிட்டோம். மீண்டும் கூட்டங்கள் அதிகரிக்கின்றன. மக்கள் நெரிசல் கூடுகிறது. தொற்றுகளின் எண்ணிக்கை தேசிய அளவில் உயரத் தொடங்க இன்னும் சிறிது காலம் ஆகலாம். ஆனால், மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் அது நாட்டைத் தாக்கும். அல்லது இன்னும் கொஞ்சம் தாமதமாகலாம்" என்று டாக்டர் குலேரியா கூறியுள்ளார்.

ஊரடங்கு தளர்வு
ஊரடங்கு தளர்வு

மேலும், ``இதன் வீரியமும் கால அளவும் இப்போதைய கோவிட் காலகட்டத்தில் நமது நடத்தை எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து அமையும். கூட்டத்தைத் தடுப்பது போன்ற அவசியங்களின் அடிப்படையில் நாம் எவ்வாறு முன்னேறுகிறோம் என்பதைப் பொறுத்ததும்கூட மாறும்" என்று அவர் கூறினார்.

நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் பேர்தான் இதுவரை இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் 130 கோடிக்கு மேற்பட்ட மக்களில் 108 கோடி பேருக்கு தடுப்பூசி போட அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இது அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

``ஒரு புதிய அலை வழக்கமாக மூன்று மாதங்கள்வரை இருக்கக்கூடும். ஆனால், இது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. கொரோனாவுக்குப் பொருத்தமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும். இதற்கான கடுமையான கண்காணிப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இப்போது, நாம் வைரஸின் ஒரு புதிய மாறுபாட்டைக் கண்டிருக்கிறோம். இது வெளியில் இருந்து வந்து இங்கு உருவாகியிருக்கிறது. அதோடு, தொற்றுகளின் எண்ணிக்கையில் பெரும் எழுச்சிக்கு வழிவகுத்திருக்கிறது. வைரஸ் தொடர்ந்து உருமாறும் என்பதை நாம் அறிவோம். அதனால் கோவிட் ஹாட்ஸ்பாட்களில் அதிக கண்காணிப்பு தேவை" என்றும் எய்ம்ஸ் தலைவர் கூறியுள்ளார்.

``5 சதவிகிதத்தைத் தாண்டி தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அனைத்துப் பகுதிகளிலும் மினி லாக்டௌன் மிக அவசியம். அதோடு, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், வரும் மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். ``சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை' என்கிற 3T-ல் (Testing-Tracking-Treating) நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று டாக்டர் குலேரியா வலியுறுத்தியுள்ளார்.

Britain
Britain

இப்போது மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்தில் டெல்டா மாறுபாட்டின் பரவல் குறித்தும் பேசிய அவர், ``வைரஸ் இன்னும் பிறழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

புதிய அலைகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து வருவதும் கவலை அளிக்கிற விஷயம் என்றும் டாக்டர் குலேரியா குறிப்பிட்டுள்ளார். ``முதல் அலையின்போது, இந்தியாவில் வைரஸ் அவ்வளவு வேகமாகப் பரவவில்லை. இரண்டாவது அலையின்போது அது மாறியது. மிக வீரியமான தொற்றுநோயாக மாறியது. இப்போது பரவும் டெல்டா மாறுபாடு மிக வேகமாகத் பரவக்கூடிய நோயாகும்'' என்று டாக்டர் குலேரியா கவலை தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான 12-16 வார இடைவெளியை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்கிற கேள்விக்கு, ``நாம் புதிய உத்திகளைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆனால், எந்த முடிவை எடுக்கவும் வலுவான தரவு இருக்க வேண்டும்" என்று எய்ம்ஸ் தலைவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட மிகவும் பரவக்கூடிய திரிபு வைரஸ்தான் இப்போது இங்கிலாந்தில் புதிய கோவிட்-19 தொற்றுகளில் 99 சதவிகிதத்தை உருவாக்கியுள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வியட்நாமில் பரவி வரும் இந்திய-இங்கிலாந்து வைரஸ்களின் கூட்டுத் திரிபு மிக வீரியமாகவும் காற்றில் மிக விரைவாகவும் அதிக அளவில் பரவக்கூடியதாகவும் உள்ளதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

Indians wearing face masks
Indians wearing face masks
AP Photo/Channi Anand
கோவிட்19: `3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்காது!' - WHO-வின் புதிய ஆய்வு சொல்வது என்ன?

இரண்டாவது அலை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் மருத்துவப் பொருள்கள் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. சமூக ஊடகங்களில் SOS செய்திகள் பரவின. பல நாடுகள் உதவ முன்வந்ததால் உலகின் கவனத்தை ஈர்த்தன. பல மாநிலங்கள் பல வாரங்களுக்கு கடுமையான தடைகளுக்குப் பிறகு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. இருப்பினும், மூன்றாவது அலைக்கு எதிராக நாம் என்ன செய்யப்போகிறோம்? எந்த அலையில் நாம் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறோம்?

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு