Published:Updated:

வுகான் நகரில் 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள்...சீனாவுக்கு விரையும் ஏர் இந்திய விமானம்!

சீனா செல்லும் ஏர் இந்தியா விமானம்
சீனா செல்லும் ஏர் இந்தியா விமானம்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனாவின் வுகான் நகரிலிருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்காக ஏர்- இந்தியாவின் ஜம்போ விமானம் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. 4,500 க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். சீனாவில் மட்டுமல்லாது, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட 15 நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உலகம் முழுக்க ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, இதுவரை மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள், அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுமானத்தில் கோரோனா வைரஸ் மருத்துவமனை
கட்டுமானத்தில் கோரோனா வைரஸ் மருத்துவமனை
daikintimes

உலகம் முழுக்க விஞ்ஞானிகளிடமிருந்து உதவியும் கேட்கப்பட்டுள்ளது. பாம்பிலிருந்து இந்த வைரஸ் உருவானதாகவும் முதன்முதலாக வுகான் சந்தைப் பகுதிகளிலிருந்து இந்த வைரஸ் பரவியதாகவும் தகவல் இருக்கிறது. எனவே, அசைவ உணவுகளைத் தவிர்க்க சீன மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விலங்குகளை வெட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து மீன் இறக்குமதிக்கும் சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவில் தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை பல நாட்டு அரசுகள் மீட்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த வுகான் நகரில் 250-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக, 747- 400 போயிங் ரக விமானத்தை ஏர்- இந்தியா நிறுவனம் தயாராக வைத்துள்ளது. இந்த விமானத்தில் 423 பேர் பயணிக்க முடியும். மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகங்களின் அனுமதி கிடைத்தவுடன் இந்த விமானம் மும்பையில் இருந்து வுகான் செல்லும் என்று சொல்லப்படுகிறது.

corona virus
corona virus
pixabay

வைரஸ் பாதித்த பகுதிக்கு விமான பைலட்டுகள், சிப்பந்திகள் செல்ல வேண்டியது உள்ளதால், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பிரத்யேக அனுமதி தேவைப்படுகிறது. வுகானில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து கேபினட் செயலாளர்களின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வுகானில் சீன அதிகாரிகளிடத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உளவுத்துறையிடம் இருந்து வந்த அறிக்கை... அமைச்சர்களைக் காய்ச்சி எடுத்த எடப்பாடி!

வுகான் உள்ளிட்ட 12 நகரங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. பல நகரங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வுகான் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது. சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட வுகான் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் இந்தியாவைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்னரே, சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அநேக இந்திய மாணவர்கள் தாய்நாடு திரும்பிவிட்டார்கள். தாய்நாடு திரும்பிய மாணவர்கள் வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பித்தாலும், மீண்டும் அந்த மாணவர்கள் சீனா சென்று படிப்பைத் தொடர அச்சம் தெரிவித்துள்ளனர்.

Corona Hospital, Wuhan
Corona Hospital, Wuhan
Electro deal pro

கடந்த ஜனவரி 23-ம் தேதி வுகான் நகரம் முற்றிலும் மூடப்பட்டது. தனியார் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 46-க்கும் மேற்பட்ட கேரள மாணவ- மாணவிகள் அங்குள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தவித்து வருகின்றனர். இதனால், தனி விமானத்தை வுகான் நகருக்கு அனுப்பி இந்தியர்களை மீட்க வேண்டுமென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, பயணிகளுக்குப் பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், சீனாவுக்குத் தனி விமானத்தை அனுப்பி இந்தியர்களை மீட்கும் விஷயத்தில் மத்திய அரசு குழப்பத்தில் இருப்பதாகவும் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனெனில், விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு இந்த வைரஸ் இருந்தாலும் 400 பயணிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுமென்பதால், அரசு இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை, சீனாவிலிருந்து 155 விமானங்களில் 33,552 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு