Published:Updated:

`காற்று மாசுபாடு மனச்சிதைவு நோய்க்கு வழிவகுக்கும்!' - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு

மரபுரீதியாக மனச்சிதைவு நோயின் கூறுகள் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு மற்றவர்களைவிட இன்னும் அதிகமாக இருக்கும்.

Air Pollution
Air Pollution

குழந்தைப் பருவத்தில் காற்று மாசுபாட்டால் பாதிப்படைந்தவர்களுக்கு, எதிர்காலத்தில் மனச்சிதைவு (schizophrenia) நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது என, சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. காற்று மாசுபாடு பெரியவர்களைவிட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

air pollution
air pollution

எண்ணம், உணர்வு, செயல் இவை ஒன்றோடொன்று முரண்பட்டு, கற்பனை உலகையும் மெய் உலகையும் ஒன்றை மற்றொன்றாகக் கருதும் மாயத் தோற்றங்களுக்கு மனிதமூளை ஆட்படுதல்தான் ஸ்கிஸோஃபெர்னியா (schizophrenia) என்னும் மனச்சிதைவு நோய்.

குழந்தைகள் வளரும் சூழலின் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, எதிர்காலத்தில் மனச்சிதைவு நோயின் ஆபத்து அவர்களைச் சூழும் வாய்ப்பு அதிகமாகும் என்று ஆய்வு கூறுகிறது. தினசரி, ஏறக்குறைய 10kg/m3 (ஒரு கன மீட்டருக்கு காற்று மாசுபாட்டின் செறிவு) அளவுக்கு மாசு அதிகரிப்பால், ஸ்கிஸோஃபெர்னியாவின் ஆபத்தும் 20% அதிகரிக்கிறது என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் ஹென்றிட் திஸ்டட் ஹார்ஸ்டல் கூறுகிறார். அதுவே 25 kg/m3-க்கு மேல் காற்றின் மாசுபாடு இருக்கும் இடங்களில், குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு 60% அதிகம் ஆகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

kids and air pollution
kids and air pollution

23,355 பேர் உட்படுத்தப்பட்ட ஆய்வில் 3,531 பேர் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று ஆய்வு கூறுவதாக ஜாமா நெட்வொர்க் ஓபன் பத்திரிகை கூறுகிறது. மேலும், மரபுரீதியாக (genetic) மனச்சிதைவு நோயின் கூறுகள் உள்ளவர்களுக்கு இதன் பாதிப்பு மற்றவர்களைவிட இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

ஆய்வின் முடிவில், iPSYCH லிருந்து மரபணு தரவை சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் காற்று மாசு தரவுகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இணைத்தனர். குழந்தைப் பருவத்தில் அதிகளவு காற்று மாசுபாட்டுக்கு ஆளானவர்களுக்கு, ஸ்கிஸோஃபெர்னியாவின் ஆபத்தும் அதிகரிப்பதை முடிவுகள் நிரூபிக்கின்றன. என்றாலும், இதற்கான சரியான காரணிகளை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை.