Published:Updated:

`கொரோனா கட்டுக்குள் வரும் வரை சத்தான காய்கறி சூப் ஃப்ரீ..!’ -ஜூஸ் கடை இளைஞரின் வாவ் முயற்சி

சூப் தயாரிக்கும் பணியில் சிவா
சூப் தயாரிக்கும் பணியில் சிவா ( ம.அரவிந்த் )

நெல்லிக்காய்,கேரட்,சின்ன வெங்காயம், கருஞ்சீரகம்,மிளகு,பூண்டு,மஞ்சள் தூள்,இஞ்சி,வேப்பிலை , நாட்டு மூலிகைகள் உள்ளிட்ட பல பொருள்களைச் சேர்த்து சூப் தயார் செய்து, அதைப் பொது மக்களுக்கு இலவசமாகத் தருகிறேன்.

பட்டுக்கோட்டையில், இளைஞர் ஒருவர் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தக் கூடிய வகையில் காய்கறி சூப் தயார்செய்து பொதுமக்களுக்கு இலவசமாகத் தருவதுடன், இதுபோன்ற இக்கட்டான சூல்நிலை ஏற்படும் நேரத்தில், மனிதனுக்கு மனிதன்தான் உதவியாக இருக்கு வேண்டும் என்பதை மக்களிடம் விதைக்கும் விதமாகச் செய்வதாகத் தெரிவிக்கும் இவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கொரோனா சூப்
கொரோனா சூப்

பட்டுக்கோட்டை நீதிமன்றத்திற்கு எதிரே, சிவா என்கிற இளைஞர் ஜூஸ் கடை நடத்திவருகிறார். இவர், கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வகையிலும் காய்கறி சூப் தயார்செய்து, அதை இலவசமாக பொது மக்களுக்கு வழங்கிவருகிறார்.

இதுகுறித்து சிவாவிடம் பேசினோம், ``இன்றைக்கு உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்திவருகிறது, கொரோனா. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிற்குள்ளும் வந்துவிட்டது. இதைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கம்மியாக இருப்பவர்கள், கொரோனா தாக்கத்திற்கு அதிக அளவில் ஆளாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளக்ஸ் போர்டு
பிளக்ஸ் போர்டு

இதனால் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கொரோனாவால் பாதிக்கக் கூடாது என முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டு வருகிறோம். இந்த நிலையில், கொரோனாவைத் தடுக்கும் வகையில் நானும் என்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்தேன். அதனால் நான், பல வருடங்களாக நடத்திவரும் ஜூஸ் கடையில், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படக்கூடிய பொருள்களைக் கொண்டு தயார்செய்யப்பட்ட சூப்பை கொடுக்க நினைத்தேன்.

அதன்படி நெல்லிக்காய், கேரட், சின்ன வெங்காயம், கருஞ்சீரகம், மிளகு, பூண்டு, மஞ்சள் தூள், இஞ்சி, வேப்பிலை, நாட்டு மூலிகைகள் உள்ளிட்ட பல பொருள்களைச் சேர்த்து சூப் தயார் செய்வதுடன், அதைப் பொது மக்களுக்கு இலவசமாகத் தருகிறேன். இதற்காக, கடையின் முன்பகுதியில் பிளக்ஸ் போர்டு ஒன்றும் வைத்துள்ளேன். தற்போதைக்கு சுமார் 300 பேருக்கு இந்த சூப் கொடுக்கப்படுகிறது. இதைக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதனால் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

சூப் கொடுக்கும் சிவா
சூப் கொடுக்கும் சிவா

நாம், நல்ல பலன் தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொண்டால், நம் உடல் எதையும் தாங்கக்கூடிய வகையில் எப்போதும் இருக்கும். அதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சூப் தருகிறேன்.

இதுவரை இந்த உலகம் பல்வேறு நோய்களைக் கண்டுள்ளது. அப்போதெல்லாம் மனிதர்களுடைய முயற்சிகளாலேயே அவை முறியடிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இதுபோன்ற இக்கட்டான சூல்நிலை ஏற்படும் நேரத்தில், மனிதனுக்கு மனிதன் உதவியாக இருக்கு வேண்டும்.

சிவா
சிவா

அதை மக்கள் மனத்தில் விதைக்கும் விதமாகவும், கொரோனாவிலிருந்து காக்கும் விதமாகவும் இதைச் செய்கிறேன். கொரோனா கட்டுக்குள் வரும் வரை என் கடையில் எப்போதும் இந்த காய்கறி சூப் கொடுக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு