Election bannerElection banner
Published:Updated:

`மகனின் விந்தணு மீது பெற்றோருக்கே உரிமை கிடையாது!' - கொல்கத்தா நீதிமன்றத் தீர்ப்பும் அலசலும்

Court (Representational Image)
Court (Representational Image)

வழக்கை விசாரித்த நீதிபதி சபயசாச்சி பட்டாச்சார்யா, உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதால் அவரின் மனைவியைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதைப் பெற உரிமை இல்லை; மகனின் சந்ததியினர் மீது தந்தைக்கு உரிமை கிடையாது என்று தீர்ப்பளித்துள்ளார்.

``கணவனின் விந்தணு மீது மனைவிக்கு மட்டுமே உரிமை. அவரின் பெற்றோருக்குக்கூட உரிமை இல்லை" என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வரும் இறந்துபோன தன் மகனின் விந்தணுவை தன்னிடம் வழங்கக்கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்திருந்தார். அவருடைய மனுவை நிராகரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. மனுதாரரின் மகன் தலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திருமணம் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாத நிலையில் நோயின் தாக்கத்தால் மகன் இறந்துவிட்டார்.

sperm
sperm

இறந்தவரின் விந்தணு டெல்லியில் ஒரு மருத்துவமனையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் மனைவி விந்தணுவைப் பெற முன்வராத நிலையில் மருத்துவமனையை அணுகி அதைப் பெறுவதற்கு இறந்தவரின் பெற்றோர் முயன்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகமோ இறந்தவரின் மனைவியிடம் மட்டுமே அதைத் தர முடியும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. விந்தணுக்களைச் சேமித்து வைக்கும் மருத்துவமனை விந்தணு வங்கியுடனான ஒப்பந்தம் அழிக்கப்பட்டாலோ, நாள்கள் செல்லச் செல்ல விந்தணுவின் வீரியம் குறைந்தாலோ, தங்கள் குல வாரிசைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று அஞ்சி உயர் நீதிமன்றத்தை நாடினார் தந்தை.

வழக்கை விசாரித்த நீதிபதி சபயசாச்சி பட்டாச்சார்யா, உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதால் அவரின் மனைவியைத் தவிர வேறு எந்த நபருக்கும் அதைப் பெற உரிமை இல்லை. மகனின் சந்ததியினர் மீது தந்தைக்கு உரிமை கிடையாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

பெற்றோருக்கு உரிமை கிடையாது என்ற தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் மும்தாஜ் சூர்யாவிடம் பேசினோம்.

``கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு பின் வரும் ஆண்டுகளில் ஏற்படும் சில நடைமுறை சிக்கல்களை முன்கூட்டியே களைய உதவியாக இருக்கும். சில வழக்குகளில் அதற்கென்று தனியாக சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஏற்கெனவே அளித்த தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படும். இவ்வழக்கில் பெற்றோருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தால், மருமகளைக் கொடுமை செய்யவும், அவரை ஒதுக்கி வைத்துவிட்டு தங்களுக்கு விருப்பமான பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாரிசை உருவாக்கும் வாய்ப்புகளும், சொத்து விவகாரத்தில் பிரச்னை செய்யவும் வாய்ப்புள்ளது.

மும்தாஜ் சூரியா
மும்தாஜ் சூரியா

இந்த வழக்கைப் பொறுத்தவரை உணர்வுரீதியாக அந்தத் தந்தை கேட்பது சரி என்றாலும், சட்டத்தின்படி தந்தைக்கு எதிராகவே செயல்பட முடியும். தந்தை ஒருவேளை இறந்த தன் மகனின் மற்ற உடல் உறுப்புகளுக்காக உரிமை கோரினால் அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. விந்தணு என்பதால் இது போன்றே செயல்பட முடியும்" என்றார்.

சட்ட ரீதியாக இந்த வழக்கை அணுகும் அதே நேரத்தில் மருத்துவ அறிவியல் உண்மையையும் உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சில ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட விந்தணுக்களைப் பெற்றால் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா என்றும் இந்தத் தீர்ப்பு குறித்து குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவிடம் கேட்டோம்.

``விந்தணுக்கள், உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள், உறைய வைக்கப்பட்ட கரு உள்ளிட்ட செயற்கை கருத்தரிப்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. ஐரோப்பிய நாடு ஒன்றில் உயிலில் யாருக்கு உரிமை என்று எழுதப்பட்டுள்ளதோ அவரே கருமுட்டை, விந்தணு ஆகியவற்றின் மீது உரிமை கோர முடியும் என்ற சட்டமுள்ளது.

பொதுவாக, செயற்கை முறையில் கருத்தரிக்கும் தம்பதிகள் விந்தணுக்களை வங்கியில் சேமித்து வைப்பார்கள். புற்றுநோயாளிகள், கதிரியக்க சிகிச்சை மற்றும் செல்களைப் பாதிக்கக்கூடிய மருந்துகளை எடுப்பதற்கு முன்பாக சேமிக்கலாம். விந்தணு தானம் செய்பவர்கள் சேமிக்கலாம். அணுக்களை உறைய வைக்கத் தேவையான ரசாயனத்தோடு (cryo mixture) 1:1 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு லிக்விட் ஹைட்ரஜன் பயன்படுத்தி உறைய வைக்கப்படுகின்றன. விந்தணுக்களை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் சேமிக்க முடியும்.

உறைநிலையிலிருந்து அவற்றை அறை வெப்பநிலைக்கு மீண்டும் கொண்டுவரும்போது 30 - 50% அதன் நகரும் சக்தி குறையும். ஏற்கெனவே பிரச்னை உள்ள விந்தணுக்களாக இருக்கும்பட்சத்தில் நகரும் சக்தி 50 சதவிகிதத்துக்கும் மேல் குறையும். இதுவரை உள்ள தரவுகளின்படி உலக அளவில் அதிகபட்சமாக 23 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட விந்தணுவிலிருந்து செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களில் இருந்து உருவாக்கப்பட்ட குழந்தை பிறந்துள்ளது.

வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ  ஷர்மா
வைராலஜிஸ்ட் ஜெயஸ்ரீ ஷர்மா

சாதாரணமாக (டெஸ்ட் டியூப் பேபி) செயற்கை முறையில் கருத்தரித்தல் முறையில் வெற்றி வாய்ப்பு 30% - 40% மட்டுமே. இந்த வழக்கைப் பொறுத்தவரை மருத்துவ ரீதியாக நோக்கும்போது, தன்னுடைய மகனின் சந்ததியைப் பெற வேண்டுமென்றால் பல்வேறு படிகளைப் பெற்றோர் தாண்ட வேண்டியிருக்கும்.

1. உறைநிலையில் இருந்து மாற்றும்போது அந்த விந்தணுக்கள் ஒரு குழந்தையை உண்டாக்கக்கூடிய அளவுக்குத் தரமானதாக இருக்க வேண்டும்.

2. கருமுட்டையைத் தானம் பெற வேண்டும்.

3. உண்டாகும் கருவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

4. அவ்வாறு உருவாகும் கருவுக்கு மகனுடைய தலசீமியா பிரச்னை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

5. பொருத்தமான வாடகைத் தாயைத் தேர்வு செய்ய வேண்டும்.

6. கருவை வாடகைத் தாய்க்குச் செலுத்தி அது குழந்தையாக வளர வேண்டும்.

இந்த ஒவ்வொரு படியிலும் வெற்றி வாய்ப்பு 30% - 40% மட்டுமே. அனைத்து விஷயங்களையும் வைத்துப் பார்க்கும்போது ஒட்டுமொத்தத்தில் 5% -10% மட்டுமே குழந்தை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதற்கான மொத்த செலவு ரூ.20 லட்சம் வரை ஆகலாம். என்னுடைய அனுபவத்தில் 25 வயது மகன் இறந்துபோன பின்பு குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதியைப் பார்த்திருக்கிறேன். மேலை நாட்டில் கணவர் இறந்து ஆறு வருடங்கள் கழித்து சேமித்து வைக்கப்பட்ட விந்தணுக்களின் மூலம் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

sperm
sperm
`புகைப்படத்துடன் ஏன் வெளியிட மறுக்குறீர்கள்?' - குடிமராமத்து திட்டம் குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி

இந்த வழக்கில் இறந்துபோன மகனுடைய சந்ததியைக் காண்பதற்கு பெற்றோர் ஆவலாக உள்ள நிலையில் மனைவி அதற்கு விருப்பப்படாத சூழ்நிலை நிலவுகிறது. வழக்கைப் பொறுத்தவரை பெற்றோர் ஏன் அதைப் பெற விரும்புகிறார்கள், மனைவி ஏன் மறுக்கிறார் என்பது பற்றி முழுமையாக விசாரித்து தீர்ப்பளித்திருக்க வேண்டும். பேரப்பிள்ளைகளுக்கு தாத்தாவின் சொத்தில் உரிமை உண்டு என்பதைச் சட்டம் ஏற்றுக் கொள்கிறது. தன் மகனுடைய வருங்கால சந்ததி மீது ஒருவருக்கு உரிமை இல்லை என்பது எப்படிச் சரியாக இருக்கும்? இதுபோன்ற வழக்குகளில் பல்வேறு சட்டங்கள் இருந்தாலும் ஒவ்வொரு வழக்கும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும்" என்கிறார்.

- கெளசல்யா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு