Published:Updated:

அனந்தையாவின் ஆயுர்வேத லேகியத்திற்கு அனுமதி; கண் மருந்துக்கு தடை; ஆந்திர அரசு சொல்லியிருப்பது என்ன?

கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து மருத்துவ உலகை அதிர வைத்த ஆந்திர ஆயுர்வேத திண்ணை வைத்தியரின் `கொரோனா மருந்துகளில்' கத்திரிக்காய் கண் மருந்துக்குத் தடை விதித்தும், கொரோனா லேகியத்துக்கு ஒப்புதல் அளித்தும் உத்தரவிட்டிருக்கிறது ஆந்திர அரசு. 

கொரோனா நோய்த்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஒட்டுமொத்த தேசமும் நிலைகுலைந்து நிற்கும் இந்தத் தருணத்தில், நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டெழ மக்கள் ஆங்கில மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் எனப் பல வகையான மருத்துவ முறைகளை நாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் இதுவரையிலும் கொரோனா தொற்றைக் குணமாக்கும் மருந்து என எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சந்தைகளில் கொரோனா மருந்து என்ற பெயரில் பல போலி மருந்துகள் சுற்றலில் இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்தா என இயற்கை முறை மருத்துவங்களில் கொரோனா தொற்றைக் குணமாக்க முடியுமா என சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், மறுபுறம் சந்தைகளில் தங்களின் தயாரிப்புகளை உலாவ விட்டிருக்கின்றனர் சில வைத்தியர்கள்.

கொரோனா
கொரோனா

அந்த வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து மருத்துவ உலகை அதிர வைத்த ஆந்திர ஆயுர்வேத திண்ணை வைத்தியரின் `கொரோனா மருந்துகளில்' கத்திரிக்காய் கண் மருந்துக்குத் தடை விதித்தும், கொரோனா லேகியத்துக்கு ஒப்புதல் அளித்தும் உத்தரவிட்டிருக்கிறது ஆந்திர அரசு.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினத்தை அடுத்த மூலக்கூறு கிராமத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் போகினி அனந்தையா என்பவர், கடந்த சில வாரங்களாகக் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு ஆயுர்வேத முறையில் சில வகையான மருந்துகளைச் சொந்தமாகத் தயாரித்து விலையில்லாமல் வழங்கி வந்தார். அனந்தையாவின் ஆயுர்வேத மருந்துகள் ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு நல்ல முறையில் பலன் அளித்ததாகவும் கூறப்படுகிறது. மக்களின் கவனத்துக்கு அனந்தையாவின் மருந்துகள் குறித்த செய்திகள் சென்றடைய அவர் சில நாள்களிலேயே பிரபலமானார். ஊரடங்கு காலம் என்பதால் ஆந்திர மக்கள் மட்டும் முடிந்த அளவுக்கு முட்டி மோதி கிருஷ்ணபட்டினம் விரைந்து வரிசையில் காத்துக்கிடந்து அவரின் லேகியத்தையும் கத்திரிக்காய் கண் மருந்தையும் வாங்கிச் சென்றனர்.

வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்
வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்

தேன், வால் மிளகு, கத்திரிக்காய் கூழ் உள்ளிட்ட 6 விதமான மூலிகைப் பொருள்களைக் கொண்டு அனந்தையா கொரோனா மருந்துகளைத் தயாரித்து மக்களுக்கு வழங்கி வந்தார். ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் நோயாளிகளைக்கூட அனந்தையாவின் கொரோனா மருந்துகள் மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பச் செய்து விடுவதாகப் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், திண்ணை வைத்தியரின் மருந்து குறித்த தகவல்கள் மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் காதுகளுக்குச் சென்றது. கொரோனா தொற்றுக்கு பலன் அளிப்பதாகத் தகவல்கள் காற்றில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அனந்தையாவின் வைத்தியசாலைக்குக் குவிந்தது. ஆந்திர மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரும், அனந்தையாவின் மருந்துகள் உண்மையாகவே தொற்று பாதிப்பிலிருந்து மீண்டெழ உதவுவதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடமும் சிபாரிசு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனந்தையாவின் கொரோனா மருந்துகள் கொரோனாவை குணப்படுத்துமா என்பதை அறிந்துகொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார். அதேபோல், மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் குழுவினரும் அனந்தையாவின் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அனந்தையாவின் ஆயுர்வேத லேகியத்திற்கு அனுமதி; கண் மருந்துக்கு தடை; ஆந்திர அரசு சொல்லியிருப்பது என்ன?
ஆந்திராவையே பரபரக்க வைத்த மூலிகை மருந்து; கொரோனாவை குணமாக்குமா என ஆய்வு செய்யும் அரசு!

மேலும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு முடிவுகள் வரும் வரை மருந்துகளைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கத் தடை விதித்து உத்தரவிட்டார். அதனால் மருந்து விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயுர்வேதா மருத்துவர் அனந்தையாவும் அவரது வைத்தியசாலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அதையடுத்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அனந்தையாவின் மருந்துகளுக்குத் தடை விதிக்காமல் உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனந்தையாவின் இரண்டு மருந்துகளில் அவரின் கத்திரிக்காய் கண் மருந்துக்குத் தடை விதித்தும், கொரோனா லேகியத்துக்கு ஒப்புதல் அளித்தும் ஆந்திர அரசு உத்தரவிட்டிருந்தது. அனந்தையாவின் 2 மருந்துகளை ஆய்வு செய்த ஆயுஷ் அமைச்சகம், மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது என்றும், நோய்த்தொற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்றும் மாநில அரசுக்குப் பரிந்துரைத்ததின் பேரிலேயே ஆந்திர அரசு லேகியத்துக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இருப்பினும், அனந்தையாவின் கொரோனா லேகியம் பூரண குணமாக்கும் திறன் கொண்டது இல்லையென்றும், கொரோனா தொற்றுக்கு முழு தீர்வு இந்த லேகியம் இல்லையென்றும் மாநில அரசு மக்களை அறிவுறுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கத்திரிக்காய் கண் மருந்தை பயன்படுத்தி உயிரிழந்த கோட்டையா
கத்திரிக்காய் கண் மருந்தை பயன்படுத்தி உயிரிழந்த கோட்டையா

இதற்கிடையில், அனந்தையாவின் கத்திரிக்காய் கண் மருந்தை பயன்படுத்தி தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி விட்டதாக வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோட்டையா என்பவர் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கோட்டையாவை போலவே கத்திரிக்காய் கண் மருந்தைப் பயன்படுத்திய ஏராளமானோர் மருத்துவமனைகளில் மிக அதிக கண் எரிச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அனந்தையாவின் மற்றொரு மருந்தான லேகியம் எடுத்துக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் கொரோனா தொற்று பாதிப்பைக் குணப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அரசு லேகியத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஆயுர்வேத மருத்துவர் அனந்தையா தன்னிடம் தற்போது மிகக்குறைவான அளவிலேயே லேகியம் இருப்பு உள்ளதாகவும், விரைவில் அரசின் அனுமதியுடன் தயாரித்து மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், அனந்தையா தான் பல வருடங்களாகப் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவராகப் பணியாற்றி வருவதால் தன்னுடைய லேகியத்தை மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் தனியுரிமை பெறப்பட்ட மருந்தாக வகைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை மக்களுக்கு தன்னுடைய லேகியத்தை இலவசமாக வழங்கி வந்த அனந்தையா வரும் நாள்களிலும் வணிகரீதியாக இல்லாமல் சேவை ரீதியில் தொடர்ந்து இலவசமாக வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மீண்டும் மக்கள் மருந்தை வாங்க குவிந்து வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு