Published:Updated:

ஊரடங்கால் தவித்த ஆந்திர தொழிலாளர்கள்.. சொந்த ஊர் திரும்ப உதவிய கலெக்டர், ஒன்றியக்குழு தலைவர்!

ஆந்திர தொழிலாளர்கள்
ஆந்திர தொழிலாளர்கள்

மீன்பிடி வலைகளைப் பின்னுவதில் மிகவும் கைதேர்ந்த 15 தொழிலாளர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருந்து பழையாறு வந்து தங்கி வலை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் ஊரடங்கால் சிக்கித் தவித்த ஆந்திராவைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் இன்று சொந்த ஊருக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆந்திர தொழிலாளர்கள்
ஆந்திர தொழிலாளர்கள்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள பழையாறு துறைமுகத்திலிருந்து சுமார் 5,000 மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடி வலைகளைப் பின்னுவதில் மிகவும் கைதேர்ந்த 15 தொழிலாளர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலிருந்து பழையாறு வந்து தங்கி வலை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் தவித்து வந்தனர். மீன்பிடித் தடைக்காலம் என்பதால் வருமானமின்றி வாடினர்.

இந்த நிலையில், இவர்களின் பரிதாப நிலையை அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷ், நாகை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். உடனடியாக நாகை கலெக்டர் பிரவீன் பி நாயர், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் கலெக்டர் நிவாசை தொடர்புகொண்டு, ஆந்திர தொழிலாளர்கள் ஊர் திரும்பிச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, இன்று நாகை கலெக்டரிடமிருந்து பெறப்பட்ட உத்தரவு கொள்ளிடம் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயப்பிரகாஷிடம் வந்தடைந்தது.

ஆந்திர தொழிலாளர்கள்
ஆந்திர தொழிலாளர்கள்

உடனே பழையாறு துறைமுகம் சென்ற ஜெயப்பிரகாஷ், அங்கு தங்கியிருந்த 15 தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு நிதி உதவி மற்றும் உடைகள், உணவுப் பொருள்கள் வழங்கி வேன் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தார். இத்தனை நாள்களாக சிரமத்துடன் இருந்துவந்த தொழிலாளர்கள், அனைவருக்கும் நன்றி செலுத்தி மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு