Published:Updated:

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

ஸ்ட்ரெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ரெஸ்

As I am suffering from stress... மனசு சொல்வதைக் கேட்போம்! - சென்ற இதழின் தொடர்ச்சி

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

As I am suffering from stress... மனசு சொல்வதைக் கேட்போம்! - சென்ற இதழின் தொடர்ச்சி

Published:Updated:
ஸ்ட்ரெஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ரெஸ்

ஆணோ, பெண்ணோ... உடல்நலத்தைப் போலவே மனநலமும் கவனிக்கப்பட வேண்டும், அது சரியில்லாதபோது சரியான நபர்களிடம் உதவி கேட்டு, மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த இதழில் கட்டுரை வெளி யிட்டிருந்தோம். ஸ்ட்ரெஸ் என்ன வெல்லாம் செய்யும், அதை எந்த அளவுவரை அனுமதிக்கலாம், சிகிச்சைகள் எப்படியிருக்கும் என மேலும் சில தகவல்கள் இந்த இதழில்...

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

உளவியல் ஆலோசகர் லட்சுமிபாய், சென்னை

ஸ்ட்ரெஸ் அதிகரிக்கும்போது தசைகள் இறுகும். தலைவலி, மைக்ரேன் மற்றும் உடல்வலி ஏற்படும். கவனிக்கப்படாத, கட்டுப்படுத்தப்படாத ஸ்ட்ரெஸ், ரத்த அழுத்தத்தையும் இதயத்துடிப்பையும் அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகரித்தால் பக்கவாதம் முதல் மாரடைப்புவரை பாதிக்கும் அபாயம் உண்டு. நீரிழிவும் வரலாம்.

ஸ்ட்ரெஸ் அதிகமாகும்போது சில பெண்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுப் பிரச்னைகள் வரும். நாளடைவில் அது வயிற்று உப்புசம், வாயுப் பிரச்னைகளை உள்ளடக்கிய ‘இரிடபுள் பவல் சிண்ட்ரோம்’ பிரச்னையில் முடியலாம். ஸ்ட்ரெஸ்ஸின் விளைவால் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து அதன் விளைவாக அதிகம் சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு, உடல், கொழுப்பைச் சேகரிக்கத் தொடங்கும். உடல் பருமன் அதிகரிக்கும்.

இனப்பெருக்க வயதிலுள்ள பெண்கள் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்தால் கர்ப்பம் தரிப்பது தள்ளிப்போகலாம். மாதவிடாய் சுழற்சியில் மாறுதல்கள் ஏற்படலாம். அளவுக்கதிமான ஸ்ட்ரெஸ், பெண்களின் இல்லற வாழ்வில் திருப்தியின்மை மற்றும் ஆர்வமின்மைக்கும் காரணமாவதாகச் சொல்கின்றன ஆய்வுகள்.

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

உதவி கேட்கத் தயங்காதீர்கள்!

என் பக்கத்து வீட்டுப் பெண் அவர்... கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கோவிட் தொற்று ஏற்பட்டு குணமாகி, அதைத் தொடர்ந்த கறுப்புப் பூஞ்சை பாதிப்புக்குத் தன் 35 வயது மகனைப் பறிகொடுத்தார். தினமும் காலையில் கண் விழித்ததும் நாங்கள் கேட்பது அந்தப் பெண்ணின் அழுகைச் சத்தத்தைத்தான். போன உயிர் திரும்ப வரப்போவதில்லை... மிச்ச காலத்தை வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் நடந்த சோகத்திலிருந்து அவர் மெள்ள மெள்ள மீண்டு வருவதுதான் சரியானது. ஆனாலும் அவர் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. இத்தனைக்கும் தன் பக்கத்து வீட்டில் உளவியல் ஆலோசகர் இருப்பது அவருக்குத் தெரியும். அவர் நினைத்தால் என்னிடம் உதவி கேட்டிருக் கலாம். இத்தனை மாதங்களில் ஓரளவு அதிலிருந்து மீண்டு வந்திருப்பார். நானாக வலியப் போய் அவருக்கு உதவ நினைத்தாலும் அதை அவர் அனுமதிப்பதில்லை. அவரை வற்புறுத்தி துயரத்திலிருந்து மீட்பது சரி யானதாக இருக்காது. உடல்நலம் சரியில்லை என்றால் அதை குணப்படுத்திக் கொள்ள மருத்துவரைப் பார்க்கிறோம். மனநலம் பாதிக்கப்பட்டால் மட்டும் ஏன் அலட்சியம்...அதிலிருந்து மீள உதவிகள் கேட்பதில் தயக்கமே தேவையில்லை. மனசு சரியில்லா விட்டால் முதலில் வீட்டிலுள்ள நம்பகமான நபர்கள், உறவினர்களிடம் மனம்விட்டுப் பேசலாம். அதில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் நிபுணர்களின் உதவியை நாட வேண்டும்.

சிகிச்சைகள்

மன அழுத்தம் என்ற நிலையில் இருக்கும் போதே நம்பிக்கையானவர்களிடம், குடும்பத் தினரிடம், நண்பர்களிடம் மனது விட்டுப் பேசினாலே பெரும்பாலும் பிரச்னை தீர்ந்து விடும். அப்படி நீங்கள் பேசும்போது எதிரிலிருப்பவர்கள் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். ‘உனக்கு வேற வேலையே இல்ல... எப்பவும் புலம்பிட்டே இருக்க’ என்பது போல அலட்சியப்படுத்தினால் அது பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும்.

மனம்விட்டுப் பேசியும் இயல்புக்கு வர முடியவில்லை என்றால் ஆலோசகர்களை அணுக வேண்டும். மன அழுத்தம் என்ற நிலையில் மட்டும் இருக்கிறதா அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டதா என்பதை அவர்கள் கண்டறிவார்கள்.

சிகிச்சை எப்படியிருக்கும்?

மனச்சோர்வால் ஏற்பட்டுள்ள பதற்றம், படபடப்பு போன்ற பிரச்னைகளைப் போக்கி உடலையும் மனதையும் இலகுவாக்க ரிலாக்ஸ்சேஷன் டெக்னிக் கொடுக்கப்படும்.

தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள், தவிர அறிவியல்பூர்வமான சில டெக்னிக்கு களையும் நிபுணர்கள் வழங்குவார்கள்.

அடுத்தபடியாக, அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavioural Therapy) வழங்கப்படும். நோயாளிகளுடன் பேசி, கவுன்சலிங் கொடுத்து, அவர்களுடைய பிரச்னையைப் புரியவைத்து, நடத்தையிலும் மாற்றம் கொண்டுவர இந்தச் சிகிச்சை உதவும்.

மேற்குறிப்பிட்ட விஷயங்களால் தீர்வு காண முடியவில்லை என்றால் மாத்திரைகள் கொடுக்கப்படும். பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து சிலருக்கு தெரபியும் தேவைப் படலாம்.

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

ஸ்ட்ரெஸ்ஸா... பதற்றமா?

சுனிதா மேனன், காக்னிட்டிவ் பிஹேவியரல் மற்றும் செக்ஸ் தெரபிஸ்ட், சென்னை

ஸ்ட்ரெஸ் என்பது நம் எல்லோருக்கும் இருப்பது. அது நம்மைவிட்டுப் போகாது. அதைக் கையாளக் கற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது தான் நிம்மதிக்கான சூட்சுமமே. மேலோட்டமாகப் பார்த்தால் ஸ்ட்ரெஸ், ஆங்ஸைட்டி எல்லாமே ஒன்றுபோலத் தெரியலாம். ஆனால், இரண்டும் வேறு வேறு.

நாளைக்கு நீங்கள் மும்பைக்கு ஃபிளைட் பிடிக்க வேண்டும். இந்த நிமிடம் வரை ஃபிளைட் டிக்கெட் வாங்கவில்லை. மும்பையில் எங்கே தங்கப் போகிறீர்கள் என்று தெரியாது. கொரோனா டெஸ்ட் செய்ய வேண்டுமா, வேண்டாமா என தெரியாது... இனிமேல்தான் இவற்றை பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும் என்ற நிலையில் உங்களுக்கு ஏற்படும் உணர்வுதான் `ஸ்ட்ரெஸ்'.

மும்பைக்குச் செல்கிற இன்னொரு நபர்... டிக்கெட் புக் செய்து, லக்கேஜை பேக் செய்து, காலையில் ஏர்போர்ட் செல்ல டாக்ஸிகூட புக் செய்து விட்டார். அத்தனைக்குப் பிறகும் படபடப்பாக உணர்கிறார் என்றால் அதுதான் `ஆங்ஸைட்டி' எனப்படும் மனப்பதற்றம்.

எல்லா விஷயங்களுமே நம் கட்டுப்பாட் டுக்குள் இருக்கும். எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும்போதும் ஏற்படுகிற அந்தப் படபடப்புதான் ஆங்ஸைட்டி. சில மனிதர்கள் இப்படித்தான்... அவர்களது மனது அளவுக்க திகமாக சிந்திக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் காரணமே இல்லாமல் பதற்றப்படுகிறேன் என்று சொல்லிக்கொண்டு சிகிச்சைக்கு அதிகம் வருபவர்கள். பதற்றத்துக்கான காரணங்கள் அவர்களிடம் இல்லாதபோதும், இயல்பான விஷயங்களைக்கூடச் செய்ய முடியாத நிலையில் அவர்கள் மனநல மருத்துவ சிகிச்சைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். அதையடுத்து உளவியல் தெரபியும் பரிந்துரைக்கப்படும்.

எந்த அளவு வரை அனுமதிக்கலாம்?

ஒரே சூழல்... அதை இருவேறு நபர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் ஸ்ட்ரெஸ் மேனேஜ் மென்ட் திறனை அறிய முடியும். ஒருவர் அந்தச் சூழலை எளிதாகக் கடந்துவிடக் கூடும். இன்னொருவர் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கலாம். சின்ன விஷயத்துக்குக் கூட ஸ்ட்ரெஸ் ஆவதால் அவர்கள் அந்த இன்னொரு நபரைவிட மோசமானவர் என்று அர்த்தமில்லை. ஸ்ட்ரெஸ்ஸை அளக்கவென அளவுகோல் எதுவும் கிடையாது. ஆனால், ஒருவர் பதற்றமான நபரா என்பதை அறிவதற்கான சைக்கோ மெட்ரிக் குறியீடுகள் உள்ளன. அந்த டெஸ்ட் அந்த நபர் எந்த மனநிலையில் உள்ள நாளில் எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. நல்ல மனநிலையில் உள்ளபோது எடுக்கும் போதும் மோசமான நாளில் எடுக்கும்போதும் ரிசல்ட் வேறுபடலாம். அதை கிளினிகல் சைக்காலஜிஸ்ட்டுகள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

4-6-8 டெக்னிக்

பிராணாயாமம் மிகப் பெரிய அளவில் உதவும். அதன் அடிப்படையில் உருவாக்கப் பட்டதுதான் 4-6-8 டெக்னிக். மூச்சை உள்ளிழுத்தபடி 1 முதல் 4 வரை எண்ணவும். 1 முதல் 6 வரை எண்ணி முடிக்கும்வரை மூச்சைப் பிடித்துக்கொள்ளவும். 1 முதல் 8 வரை எண்ணியபடி மூச்சை நிதானமாக வெளியே விடவும். மூச்சை உள்ளிழுப்பதைவிட, வெளியே விடும் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். இப்படிச் செய்வதால் அடுத்த முறை மூச்சை உள்ளிழுக்கும்போது நிறைய காற்றை சுவாசிப்பார்கள். மூக்கின் வழியே மூச்சை உள்ளிழுத்து, வாயின் வழியே அதை வெளியேற்ற வேண்டும். இதை பத்துமுறை செய்ய லாம். ஆக்ஸிஜன் உள்ளே போகும் போது பதற்றமும் படபடப்பும் தணிவதை உணரலாம். பதற்றம் தலைக்கேறிய நிலையில் அமைதியான ஓரிடத்தில் அமர்ந்தபடி இதைச் செய்தால் உடனடியாக மனம் அமைதிபெறும்.

சைக்யாட்ரிஸ்ட்டா... சைக்காலஜிஸ்ட்டா?

`சைக்யாட்ரிஸ்ட்' என்பவர் மருத்துவர். `சைக்காலஜிஸ்ட்' என்பவர் ஆலோசகர், தெரபிஸ்ட்.

உங்களுக்கு சளி பிடித்திருக்கிறது என்றால் நீங்கள் அருகிலுள்ள பொது மருத்துவரை அணுகுவீர் களா அல்லது நேரடியாக புற்றுநோய் மருத்துவரிடம் போவீர்களா? முதலில் பொது மருத்துவரைப் பார்ப்பீர்கள். அவர் பரிசோதித்து விட்டு, தேவைப்பட்டால் இ.என்.டி மருத்துவரிடம் அனுப்புவார். இ.என்.டி பரிசோதித்துவிட்டு, மேற்கொண்டு சந்தேகங்கள் வந்தால் அடுத்த ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்புவார்.

மனநலத்துக்கும் அப்படித்தான். முதலில் தெரபிஸ்ட் அல்லது உளவியல் ஆலோசகரை அணுகுங்கள். தெரபிஸ்ட்டால் மன நோய்களை உறுதிப்படுத்த முடியாது. நடத்தைக் கோளாறுகள் போன்ற வற்றுக்கு அவர்களால் தீர்வுகள் தர முடியும். அது தெரபிக்கு அப்பாற் பட்ட, மனநல மருத்துவம் தேவைப் படுகிற பிரச்னை என்று சந்தேகப்பட் டால் அவர்களே மனநல மருத்துவ ரைப் பார்க்கப் பரிந்துரைப்பார்கள்.

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

கட்டுப்படுத்துவது... கொட்டித் தீர்ப்பது... எது சரி?

உளவியல் ஆலோசகர் மினி ராவ், சென்னை

ஒரு பலூனில் அளவுக்கு அதிகமாக காற்றை அடைத்தால் என்னவாகும்? அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடும். அதுபோன்றதுதான் உணர்வுகளை அடைக்கிவைப்பதும். உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டே செல்லும்போது அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அதீத கோபம், சண்டை, வன்முறை, தற்கொலை எண்ணங்கள் போன்றவையாக வெளிப்படக்கூடும். எந்த உணர்வாக இருந்தாலும் அதை உடனுக்குடன் வெளிப்படுத்துவது தான் நல்லது. தற்காப்புக் கலைகள், பாக்ஸிங் போன்றவை கோபம், வன்முறை போன்ற உணர்வுகளைக் கையாள உதவும். அழுது தீர்த்து விடுவதும் மிகவும் ஆரோக்கியமானது. மனதுக்கு நெருக்கமானவர்கள், குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது, படம் பார்ப்பது. உடற் பயிற்சி செய்வது என உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

ஸ்ட்ரெஸ் என்னவெல்லாம் செய்யும்?

நமக்கான சந்தோஷத்தை நாமதான் உருவாக்கிக்கணும்!

கர்னாடக இசைக் கலைஞர் - சுதா ரகுநாதன்

``ஒரு பாடகியா தொடர்ந்து புகழ் வெளிச்சத்துல இருக்கிறதுங்கிறது சாதாரணமான தில்லை. நல்லா டிரஸ் பண்ணிக்கணும். மத்தவங்களுடைய விமர்சனங்களை ஏத்துக்கணும். மனசோ, உடம்போ ஒத்துழைக்கலை, இன்னிக்கு பாட விருப்பமில்லைனு எந்த எக்ஸ்கியூஸும் சொல்ல முடியாது. மீடியாவின் ஃப்ளாஷ், மக்களுடைய கவனம்னு பரபரப்பா ஓடிட்டிருந்த எனக்கு 2015-ல ஒரு பிரேக் வந்தது. திடீர்னு ‘ஆசிட் ரெஃப்ளெக்ஸ்'னு சொல்ற அமிலப் பின்னோட்ட பாதிப்பு வந்தது. அதாவது சாப்பாட்டுல உள்ள அமிலம் தொண்டையை நோக்கி வரும். அதனால என்னால வழக்கம்போல பாட முடியலை. ‘30 வருஷங்கள் பாடிட்டீங்க. இப்போ உங்களுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் அவசியம். அதை அனுமதியுங்க’னு சொன்னாங்க டாக்டர்ஸ். அந்த வருஷம் டிசம்பர் சீசனை, ரசிகர்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். ஆனாலும் அதை நான் ஸ்ட்ரெஸ்ஸா எடுத்துக்காம எனக்கான விடுமுறையா நினைச்சுக்கிட்டேன்.

‘சுதாவுக்கு வேற ஏதோ பிரச்னை... லண்டனுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப் போயிருக்காங்க... இனிமே பாட மாட் டாங்க’ன்னெல்லாம் பலரும் பலதையும் பேசினாங்க. எதையுமே நான் கண்டுக்கலை. என் பிரச்னையிலேருந்து வெளியே வர ஆறு மாசம் பிரேக் எடுத்தேன். ஒரு சீசன்ல பாடலைன்னா சுதா காணாமப் போயிடு வான்னு நான் நினைக்கலை. என் திறமை மேல, இந்தத் துறையில எனக்கிருக்குற இடத்தின் மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. சில பத்திரிகைகள்ல எனக்கு ஆசிட் ரெஃப்ளெக்ஸ் பாதிப்பிருந்ததையும் அதனால பிரேக் எடுத்திருந்ததையும் எழுதினாங்க. அதைப் பார்த்துட்டு பல பாடகர்களும் தங்களுக்கும் அதே பிரச்னை இருக்குனு வெளியே சொல்ல ஆரம்பிச்சாங்க. அதுலேருந்து வெளியே வர \என்கிட்டயே அட்வைஸ் கேட்டாங்க.

அடுத்தவங்க கன்னாபின்னானு பேசறாங்களேன்னு நான் பயந்து, முடங்கிடலை. என் மென்ட்டல் பேண்ட்வித்தை (Mental bandwidth) ஸ்ட்ராங்கா வெச்சுக்கிட்டேன். என் குடும்பத்தாரும் சப்போர்ட் பண்ணதால அந்தத் தற்காலிக பிரேக், டிப்ரெஷனா மாறாம என்னால தப்பிக்க முடிஞ்சது. தலைவலி, வயிற்றுவலி, தூக்கமின்மையை யெல்லாம் ஏத்துக்கிற நாம ஸ்ட்ரெஸ் இருக்குறதை மட்டும் ஏன் மறைக்கணும்? தனிமை, சோர்வு, தூக்கம் வராதது அல்லது எப்போதும் தூக்கம், யார்கூடவும் பேசப் பிடிக்காதது, யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, அடுத்தவங்க நல்லா இருக்கிறதே பிடிக்காத மாதிரி ஃபீல் பண்றது... இதெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டதன் அறிகுறிகள். இதெல்லாம் இருந்தா சைக்காலஜிஸ்ட்டையோ, சைக் யாட்ரிஸ்ட்டையோ சந்திக்கிறதுல தப்பில்லை. நமக்கான சந்தோஷத்தை நாமதான் உருவாக்கிக்கணும். அப்படி நம்மால உருவாக்க முடியாத நிலையில மத்தவங்களுடைய உதவியை நாடறதுல தப்பே இல்லை. வாழறது ஒருமுறை... அதை பெஸ்ட்டா வாழ்வோமே!’’