Published:Updated:

`கொரோனாவை விரட்ட தன்னம்பிக்கைதான் ரொம்ப முக்கியம்!' - அவள் வாசகியின் அனுபவ பகிர்வு #SpreadPositivity

நாகராஜகுமார்
Representational Image
Representational Image

ஆதிரை நம்மிடம் பேசிய நிமிடங்கள் தன்னம்பிக்கை அளிப்பவை... கொரோனாவை விரட்டும் தாரக மந்திரங்கள்... அந்த அனுபவங்கள் இங்கே...

அவள் விகடன் வாசகிகளுக்கு 32 பக்க இணைப்பு ரெசிப்பிகளின் மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர் சென்னையைச் சேர்ந்த ஆதிரை வேணுகோபால். சமீபத்திய இரண்டாவது கொரோனா அலை இவரின் 57 வயது கணவரைத் தாக்கியபோது, கலங்கிவிடவில்லை 52 வயதான ஆதிரை.
கூட்டுக்குடும்பத்தில் வசித்தாலும் உறுதியான மனநிலையுடன் தன்னந்தனியாக நின்று கொரோனா அரக்கனை வீட்டைவிட்டு விரட்டியிருக்கிறார்.
இவர் நம்மிடம் பேசிய நிமிடங்கள் தன்னம்பிக்கை அளிப்பவை... கொரோனாவை விரட்டும் தாரக மந்திரங்கள்... அந்த அனுபவங்கள் இங்கே...

கொரோனாவின் இரண்டாவது அலை

ஏப்ரல் 24 சனிக்கிழமை அன்று இரண்டாவது தடுப்பூசியை நானும் என் கணவரும் எடுத்துக்கொண்டோம். அன்று மாலையே கணவருக்கு லேசான உடல்வலியும் காய்ச்சலும் வந்தது. சரி, ஊசி போட்டுக்கொண்டதால் இருக்கும் என்று நினைத்தோம். மறுநாள் ஞாயிறு அன்றும் உடல் அசதி தொடர்ந்தது. இருமலும் சேர்ந்து கொண்டது. காய்ச்சல் மாத்திரை கொடுத்தேன். சரியாகவில்லை. அன்று இரவு, உணவில் வாசனை தெரியவில்லை என்றார்.

மீள்வோம் மீட்போம்
மீள்வோம் மீட்போம்

மறுநாள் திங்கள் அன்று டெஸ்ட் எடுத்துப்பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இத்தனைக்கும் கடந்த ஒரு வருட காலமாக அவர் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் கைகளை கழுவிக்கொண்டும் அலுவலகம் சென்று வந்தார். வெளியில் எங்கும் சாப்பிட மாட்டார். அலுவலகம் விட்டால் வீடு. வீடு விட்டால் அலுவலகம் என்று இருந்தவர்.

எப்படி வந்தது இந்த கொரோனோ?

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை அன்று சிடி ஸ்கேன் எடுக்கலாம் என்று முடிவெடுத்தோம். அவர் மட்டும் சென்று ஸ்கேன் எடுத்து வந்தார்.

மருத்துவமனைக்குச் சென்றால் படுக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம். குடும்ப மருத்துவரைச் சந்தித்தோம். அந்த ஸ்கேன் ரிப்போர்டைப் பார்த்தவர், ``முதலில் பயத்தை விடுங்கள். சில விஷயங்களைப் பின்பற்றி உங்களை நீங்கள் தனிமைப் படுத்திக்கொண்டால்... 14 நாள்களில் நிச்சயம் குணமாகலாம்" என்று தைரியப்படுத்தினார்.

மாத்திரைப் பட்டியலை எழுதிக்கொடுத்து, `இந்த இந்த மாத்திரைகளை இந்த இந்த நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். மூன்று முறை உப்புத் தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரண்டு முறை ஆவி பிடிக்க வேண்டும். குப்புறப் படுத்துக்கொண்டு உறங்க வேண்டும். ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை ஆக்ஸிமீட்டரைக் கொண்டு பல்ஸ் பார்த்துக் கொள்ளுங்கள். பல்ஸ் குறைந்தால் உடனே என்னைக் கூப்பிடுங்கள்" என்றார்.

என் நம்பிக்கைக்கு, உடனடியாக அந்த மருத்துவ ரிப்போர்ட்டுகளை எனக்குத் தெரிந்த இன்னொரு மருத்துவருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, ``டாக்டர் இந்த மாதிரி இருக்கு என்ன பண்ணலாம்" என்றேன்.

அவர், ``தைரியம் முக்கியம். பயப்படுவதற்கு ஒண்ணுமில்லை. அவரைத் தனியாக இருக்கச் சொல்லுங்க. கூடவே நல்ல புரோட்டின் உணவுகளை நிறைய கொடுங்க. சூப் தயாரித்துக் கொடுங்க. மூச்சுப்பயிற்சி மேற்கொள்வது நல்லது" என்றார். அத்துடன் ``நீங்களும், முகக்கவசம் அணிந்துகொண்டு சற்று தூரமாக இருந்தே அவருக்கு உணவு தயாரித்துக் கொடுங்கள்" என்றார்.

Representational Image
Representational Image
Emilio Morenatti

இந்த நேரத்தில் சில உறவுகள் விஷயத்தைத் தெரிந்துகொண்டு இதைக் கொடு... அதைக் கொடு என்று ஆளாளுக்கு அட்வைஸ் செய்தார்கள். அவர்களுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது?

ஆனால், முதல் ஒரு வாரம் அசதி அவரை வீழ்த்தியது. `எதுவும் சாப்பிடப் பிடிக்கவில்லை' என்றார். இதை யாரிடமும் சொல்ல எனக்கு விருப்பமில்லாததால் முதலில் தொலைபேசி அழைப்புகளை நிறுத்தினேன். எந்த அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை. டிவி நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் குறைத்தேன்.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகச் சொல்லியே ஆக வேண்டும் கொரோனா பாசிட்டிவ் என்றவுடன் அது மாநகராட்சிக்குத் தெரிந்து அவர்கள் அடுத்த நாளே வீட்டுக்கு வந்து ஒரு ஸ்டிக்கரை ஒட்டிவிட்டார்கள். இந்த நாளில் இருந்து இந்த நாள்கள்வரை வெளியில் செல்லக் கூடாது என்றனர்.
அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள். இந்தத் தொலைபேசி எண்ணில் கூப்பிடுங்கள் என்றனர்.

நான் உடனடியாகத் தெரிந்த தம்பியின் உதவியுடன் காகிதக் கப்புகளையும், பாக்குமரத் தட்டையும் வாங்கினேன். காலை எழுந்தவுடன் வாய் கொப்பளிக்க வெந்நீரில் கல் உப்பையும் சிட்டிகை மஞ்சள் தூளையும் போட்டு வாய் கொப்பளிக்கச் சொன்னேன். பிறகு சூடான தேநீர் கொடுத்தேன். பிறகு ஆவிபிடிக்க வெந்நீர் கொடுத்தேன். அதில் கற்பூரவள்ளி, துளசி, லவங்கம் போன்ற பொருள்களைச் சேர்த்து ஆவி பிடிக்கச் செய்தேன். இதை காலை மாலை என இரண்டு வேளையும் தவறாது செய்யச் சொன்னேன்.

காலை உணவாக இட்லி, தோசை, வெஜ் ஊத்தப்பம், இடியாப்பம், உப்புமா இப்படி தினம் ஒன்றாகச் செய்து கொடுத்தேன். பிறகு 11 மணிவாக்கில் ஒரு சூப். என்ன காய் கிடைக்கிறதோ அந்தக் காயில் சூப் செய்து நிறைய மிளகுத்தூள் சேர்த்து ஒரு கால் டம்ளர் குடிக்க வைத்தேன்.

உணவு/ Representational Image
உணவு/ Representational Image

ஆனால், அவருக்கு சுவையும் தெரியவில்லை. வாசனையும் தெரியவில்லை. நான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நேரா நேரத்துக்குச் செய்தேன். `சாப்பிடவே பிடிக்கவில்லை வாயெல்லாம் கசக்கிறது' என்றார். `அதிகம் சாப்பிட வேண்டாம். சிறிதளவு சாப்பிடுங்கள். அப்போதுதான் பூரண குணமாகும்' என்று அவருக்கு ஆறுதல் கூறினேன்.

நானும் மனுஷிதானே சில நேரம் எனக்கும் கஷ்டமாக இருந்தது. என்ன, எது செய்து கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என்கிறார். எதுவுமே பிடிக்கல என்கிறாரே என்று வருத்தமாக இருந்தது. அப்போது என்னை நேசிக்கும் ஜெயசித்ரா திடீரென்று மதுரையில் இருந்து அழைத்தார்.

அவர் குரல் எனக்கு ஆறுதலாக இருக்கும் என்று பேசினேன். அவர் சாதாரணமாக நலம் விசாரிக்க... `கணவருக்கு உடம்பு சரியில்லை, எதுவும் சாப்பிட மாட்டேன் என்கிறார். பிடிக்கல பிடிக்கல என்கிறார்' என்றேன்.

உடனே அவர் சின்னச் சின்ன விஷயங்கள் சிலவற்றை ரொம்ப அருமையாகச் சொன்னார். ஓர் உணவைப் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உருவாகி உமிழ்நீர் சுரக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிடணும்னு ஆசை வரும். சுண்டலில் ஒரு மாங்காயைக் குட்டி குட்டியா கட் பண்ணிப் போடுங்க... கேரட்டை துருவிப் போடுங்க. தேங்காயைத் துருவிப் போட்டு கலர்ஃபுல்லா கொடுத்துப் பாருங்க' என்றார்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு மிகவும் பிடித்த உணவைக் கொஞ்சமாகச் சாப்பிட வையுங்கள். தினமும் இட்லி தோசை என்றால் போரடித்துவிடும். சப்பாத்தி பிடிக்குமென்றால் சப்பாத்தி செய்து நல்ல சப்ஜி செய்து கொடுங்கள். தவறு எதுவும் இல்லை. நல்லா சாப்பிட, சாப்பிடதான் உடம்பில் தெம்பு வரும் என்றார்.
அதேபோல் `எப்போதும் ரசம் சோறு என்று இல்லாமல் வெஜிடபிள் சாதம், சீரக சாதம், சாம்பார் சாதம்... இதற்கு எல்லாம் தொட்டுக்கொள்ள வித்தியாசமான பொரியல் என்று செய்து கொடுத்துப் பாருங்கள்.

சுண்டல்
சுண்டல்

எந்தச் சமையல் செய்தாலும் இறக்கும் தறுவாயில் மிளகுத்தூளை தூவி விடுங்கள். கண்டிப்பாக அவர் சாப்பிடுவார்' என்றார். நானும் அவர் சொன்னதற்கு எல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு அவர் சொன்னதையெல்லாம் கேட்டுச் செய்தேன்.

நாம் நல்லதையே நினைத்தால் யார் மூலமாக நமக்குண்டான நன்மை சரியான நேரத்தில் வந்துசேரும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த தருணம் அது.
அதுமட்டுமல்லாமல்... என்னுடன் அவ்வப்போது பேசி, தைரியம் சொல்லி... `ஆல்பகோடா பழம் என்று நம்ம சின்ன வயசுல நமக்கு காய்ச்சல் வந்தா கிராமப்புறங்களில் கொடுப்பாங்களே... அந்த ஆல்பகோடா பழத்தை வாயில் அடக்கிக் கொள்ளச் சொல்லுங்கள். அது உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்' என்றார்.

`வெறும் வாணலியில் ஓமத்தை வறுத்து அதனுடன் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்த்து ஒரு குட்டித் துணியில் முடிச்சு போட்டுக்கொண்டு அதை எப்போதும் சுவாசிக்கச் சொல்லுங்கள்' என்றார். `அப்படி அவர் செய்யத் தவறினால் தலையணை அடியில் வைத்து உறங்கச் செய்யுங்கள்' என்றார்.

அத்துடன் என் கணவருக்கு மிகவும் பிடித்த கண்ணதாசனின் பாடல்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்தராஜன் பாடியதைக் கேட்க வைத்தேன்.

இரவு சூடான அரை டம்ளர் பாலில் மிளகுத்தூள், மஞ்சள்தூள் கலந்து சாப்பிடச் செய்தேன். இப்படியாக முதல் 7 நாள்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையைக் கடந்தேன்...

அடுத்த ஏழு நாள்களில் மெனுவில் சற்று வித்தியாசம் கூட்டி சில பழங்களை எடுத்துக்கொள்ள வைத்தேன். 15 நாள்கள் ஓடி விட்டன. வெளியே வந்தார். டெஸ்ட் எடுத்தோம். நெகடிவ் ரிசல்ட்.

ஆதிரை வேணுகோபால்
ஆதிரை வேணுகோபால்

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கைதான் ரொம்ப முக்கியம். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்றார் திருவள்ளுவர், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே .

கொரோனாவுக்கு பயந்தால் அது நம் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். ஆகவே நம்மால் முடியும். நம்மால் எளிதில் இதிலிருந்து மீள முடியும்.. என்ற தன்னம்பிக்கை மிக மிக மிக அவசியம்.

இது ஒதுக்கப்பட வேண்டிய நோய் இல்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அலட்சியம், அறியாமையை விடுத்து லேசான காய்ச்சல், உடல்வலி இருந்தாலே ஆரம்பகட்ட சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம். சுலபமாக இந்த நோயின் பிடியிலிருந்து தப்பலாம். அதற்கு நானும் என் கணவரும் உதாரணம்.

- ஆதிரை வேணுகோபால்

அடுத்த கட்டுரைக்கு