தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

மார்பகப் புற்றுநோய்... வருமுன் காப்போம்... வராமல் தடுப்போம்...

மார்பகப் புற்றுநோய்
பிரீமியம் ஸ்டோரி
News
மார்பகப் புற்றுநோய்

பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருக்கும். இந்த ஹார்மோன் சீரற்ற நிலையில் இருக்கும்போது மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்து உண்டாகும்

ஒரு விஷயம் குறித்த விழிப்புணர்வு இல்லாத போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. மார்பகப் புற்றுநோயும் அப்படித்தான். புற்று நோய் பற்றிய தெளிவு முன்கூட்டியே நமக்கு இருக்கும்பட்சத்தில் நோய் ஏற்படாமல் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ள முடியும். மார்பகப் புற்று நோய் தொடர்பாக நமக்கிருக்கும் சந்தேகங் களுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மார்பக சிகிச்சை மருத்துவரும் ஆன்கோபிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணருமான கீர்த்தி கேத்ரீன் கபீர் மற்றும் திருச்சி, காவேரி மருத்துவ மனையைச் சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் அனிஸ்.

மார்பகப் புற்றுநோய்... வருமுன் காப்போம்... வராமல் தடுப்போம்...

மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன?

மார்புக்குள் சில சுரப்பி களும் (Glands), சில கொழுப்புத் திசுக்களும் (Fatty tissues) இருக்கும். சுரப்பிகளில் உள்ள செல்கள் அசாதாரண முறையில் பெரி தாகும்போது, அந்த செல்கள் சேர்ந்து ஒரு கட்டியாக உருமாறும். இதைத்தான் மார்பகப் புற்றுநோய் என்கிறோம்.

யாருக்கெல்லாம் மார்பகப் புற்றுநோய் வரும்?

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் வரலாம். பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்தக் காலத்தில் 20 வயதிலிருந்தே பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் நிற்கும் 40 முதல் 50 வயது வரை உடலுக்குள் அதிகப்படியான ஹார்மோன் மாறுபாடுகள் இருக்கும். அவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகம்.

குடும்பப் பின்னணி இருப்பவர்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கான ரிஸ்க் அதிகமா?

அனைவருக்கும் கிடையாது. சில குடும்பங்களில் நிறைய பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருந்ததென்றால், ஏதாவது ஒரு பிறழ்வு (Mutation) அவர்களின் குடும்பத்தின் ஜீன்களில் இருந் தால், அடுத்த தலைமுறைக்கும் அந்த ரிஸ்க் இருக்கும். பொதுவாக நாம் பார்க்கும் மார்பகப் புற்றுநோய்களில் 75 சத விகிதம் குடும்பப் பின்னணி இருக்காது. 25 சதவிகிதம்தான் குடும்பப் பின்னணியில் பாதிக்கப்பட்ட நபர்கள் வருகின்றனர்.

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறையும் என்கிறார்கள்... அப்படியானால் திருமண மாகாத, குழந்தைபெறாத பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் ரிஸ்க் அதிகமா?

கொஞ்சம் ரிஸ்க் அதிகம்தான். பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருக்கும். இந்த ஹார்மோன் சீரற்ற நிலையில் இருக்கும்போது மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்து உண்டாகும். கர்ப்ப காலத்தின் போதும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் இந்த ஹார்மோன் குறைவாக இருக்கும். கர்ப்பம் தரிக்காமல், தாய்ப்பால் அளிக்காமலிருந்தால் அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிகம் இருக்கும். அதனால் இவர்களுக்கு ரிஸ்க் அதிகம்தான்.

 கீர்த்தி கேத்ரீன் கபீர்
கீர்த்தி கேத்ரீன் கபீர்

மார்பகப் புற்றுநோய், உடலின் மற்ற பாகங் களுக்கும் பரவுமா?

ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சைகள் அளிக்கும்போது, வேறு இடங்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருபவர்கள்தான் அதிகம். அதற்குள் அது உடலின் பல இடங்களுக்கும் பரவியிருக்கலாம். கல்லீரல், எலும்புகள், தலை என எங்கு வேண்டுமானாலும் பரவலாம்.

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியுமா?

ஓரளவு தடுக்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது, ஹார்மோனல் இம்பேலன்ஸ் நார்மலாகும். மசாலா, காரம் அதிகம் சேர்த்த உணவுகளையும், துரித உணவுகளையும், கொழுப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் ஹார்மோன் தூண்டுதலை உண்டாக்கி, வீக்கத்தை அதிகப்படுத்தும். இதைத் தடுக்க பச்சைக் காய்கறிகளை சாப்பிட வேண்டும். வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாமலிருக்க சூரிய ஒளி உடலில் படும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம். வருமுன் காப்போம் என்பது மார்பகப் புற்றுநோய்க்கு மிகவும் பொருந்தும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிய என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடம் ஒருமுறை கட்டாயமாக ஸ்க்ரீனிங் மேமோகிராம் (Screening Mammogram) செய்துகொள்ள வேண்டும். இந்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து எளிமையான முறையில் குணப்படுத்த முடியும். 25 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதமொருமுறை மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்டு சில தினங்களுக்குப் பிறகு இந்தப் பரிசோதனை செய்ய சிறந்த காலமாகும். மேமோகிராம் பரிசோதனையில் ஏற்படும் கதிர்வீச்சால் புற்றுநோய் வந்துவிடுமோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது. இது குறித்துப் பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மிகமிக குறைந்த அளவிலான கதிர்வீச்சுதான் வெளிப்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்துகின்றன அந்த ஆய்வுகள்.

 அனிஸ்
அனிஸ்

மார்பகப் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?

ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் மார்பகப் புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை, ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி என இதற்கான சிகிச்சை மூன்று நிலைகளில் தரப்படுகிறது. 2 அல்லது 3 செ.மீ அளவில் வளர்ந்துள்ள ஆரம்ப நிலையில் இருக்கும் புற்றுக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி சரி செய்யலாம். கட்டி 5 அல்லது 6 செ.மீ அளவில் உள்ளது; அது சருமம், மார்பு எலும்புகளை அரித்துள்ளது எனில் அக்கட்டியை அறுவை சிகிக்சை மூலம் நீக்கிவிட்டு, கட்டி மீண்டும் வளராமல் இருக்க அந்த இடத்தில் ரேடியேஷன் சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

மார்பகத்தில் உள்ள புற்று செல்கள் உடலின் மற்ற பகுதிகளில் பரவாமல் இருக்கவும், பரவியிருந்தால் குணப்படுத்தவும் கீமோதெரபி சிகிச்சை வழங்கப்படும். இந்த மூன்றும் சேர்ந்து வழங்கப்படும்போது நோயாளி முழுமையாகக் குணமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

சுய பரிசோதனை... ஸோ சிம்பிள்!

* கண்ணாடியின் முன் நின்று, மார் பகங்களின் பக்கவாட்டில் கைகளை வைக்க வேண்டும். ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும்.

* தலைக்கு மேலே கைகளை உயர்த்தி, ஏதேனும் மாற்றங்கள் தெரிகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

* நின்று கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ, கை விரல்களைச் சேர்த் தாற்போல வைத்துக் கொண்டு, நுனி விரல்களால் வட்ட வடிவில் அல்லது நீள்வடிவில் (line pattern) மார்பகம் மற்றும் காம்புகளில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்பதைத் தடவிப் பார்க்க வேண்டும்.

* இறுதியாக அக்குள் அடியில் பரிசோதிக்க வேண்டும். ஏதேனும் அசாதாரணமாகத் தெரியும்பட்சத்தில், மருத்துவரை அணுக வேண்டும்.