Published:Updated:

அறிகுறி சிறுசு.... ஆபத்து பெருசு... பிரெயின் அட்டாக் பயங்கரம் அறிவீர்களா?

பிரெயின் அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
பிரெயின் அட்டாக்

முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக் பத்தி அதிகம் பேசிக்கிட்டிருந்தோம். இப்போ பிரெயின் அட்டாக்கை பத்தி பேச ஆரம்பிச் சிருக்கோம்.

அறிகுறி சிறுசு.... ஆபத்து பெருசு... பிரெயின் அட்டாக் பயங்கரம் அறிவீர்களா?

முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக் பத்தி அதிகம் பேசிக்கிட்டிருந்தோம். இப்போ பிரெயின் அட்டாக்கை பத்தி பேச ஆரம்பிச் சிருக்கோம்.

Published:Updated:
பிரெயின் அட்டாக்
பிரீமியம் ஸ்டோரி
பிரெயின் அட்டாக்

நந்தினிக்கு 49 வயது. கணவரின் கேட்டரிங் பிசினஸுக்கு அவர்தான் மூளையாக இருந்து இயக்குபவர். மெனு பிளானிங்கில் தொடங்கி, பிசினஸ் வளர்ச்சி உட்பட நந்தினியின் ஐடியாக்களால்தான் அவர்களின் பிசினஸ் ஐந்தே ஆண்டுகளில் உயரத்துக்குப் போனது. நந்தினிக்கு அடிக்கடி கைகால்கள் மரத்துப்போகும். எல்லாருக்கும் வர்றதுதானே... சத்துக் குறைவா இருக்கும் என ஒவ்வொரு முறையும் அவர் அதை அலட்சியம் செய்திருக்கிறார். ஒருநாள் ஒரு கையையும் ஒரு காலையும் அசைக்க முடியாத நிலையில் வாய் குழற, அவசர மாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நந்தினிக்கு பிரெயின் அட்டாக் என உறுதிசெய்தார் மருத்துவர். நல்லவேளையாகத் தாமதிக்காமல் மருத்துவரை அணுகியதால் சில நாள்கள் சிகிச்சையிலேயே அவர் இயல்புநிலைக்குத் திரும்பினார்.

50 வயது பிரேமாவுக்கு சிறு வயதிலிருந்தே உயர் ரத்த அழுத்த பிரச்னை உண்டு. பிபி அதிகரிக்கும்போதெல்லாம் தனக்குத் தெரிந்த சுய மருத்துவத்தைச் செய்து கொள்வதும், சற்று நேரம் ஓய்வெடுப்பதுமாகக் காலத்தைக் கடத்தியிருக்கிறார். ஒருநாள் பிபி அதிகரித்து மயங்கி விழுந்தவரை ஐசியூவில் அனுமதித்தார்கள். மண்டைக்குள் ரத்தக்குழாய் வெடித்த தில் பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகப் படுக்கையில் இருக்கிறார் பிரேமா.

ப்ரித்திகா
ப்ரித்திகா

மேற்குறிப்பிட்ட இரண்டுமே நிஜ சம்பவங்கள். இருவருக்கும் ஏற்பட்ட அறிகுறிகள் மிகச் சாதாரணமானவையாகப் பலராலும் அலட்சியப்படுத்தக்கூடியவை. ஆனால், ‘என்னையா அலட்சியப்படுத்துறே...’ என ஆவேசப்பட்டிருக்கிறது உடல். இருவருமே மரணம்வரை சென்று மீண்டாலும் இருவரில் ஒருவர் இன்றுவரை நடைப்பிணமாகவே வாழ்ந்துகொண்டிருப்பது அவலம்.

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு நிகழ்ந்ததும் இத்தகைய பாதிப்பில் ஒருவகைதான். இதயத்தை மட்டுமல்ல, இனி மூளையையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடுத்தடுத்து வலியுறுத்துகின்றன இந்தச் சம்பவங்கள்.

‘`முன்பெல்லாம் ஹார்ட் அட்டாக் பத்தி அதிகம் பேசிக்கிட்டிருந்தோம். இப்போ பிரெயின் அட்டாக்கை பத்தி பேச ஆரம்பிச் சிருக்கோம். ‘என்னை கவனி...’னு உடம்பு சில அறிகுறிகள் மூலமா அப்பப்போ உணர்த்திட்டு தான் இருக்கு. ஆனா, நாமதான் கண்டுக்கிற தில்லை. அந்த அலட்சியத்தோட விலை சாதாரணமா இருக்கிறதில்லை...’’ என்கிறார் நரம்பியல் மருத்துவர் ப்ரித்திகா சாரி. இந்தியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெருமைக்குரியவர். கடந்த சில வருடங்களில் பெண்களை அதிகம் தாக்கும் பிரெயின் அட்டாக் பற்றி விரிவாகப் பேசுகிறார் டாக்டர் ப்ரித்திகா.

ஹார்ட் அட்டாக்கும் பிரெயின் அட்டாக்கும்...

‘`ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு ஏற்படும் விகிதம் ஆண்களுக்கு அதிகம். ஆனால், மெனோபாஸ் வந்துவிட்ட பெண்களுக்கு ஆண்களுக்கு இணை யாக மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும்.

பிரெயின் அட்டாக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். ஈஸ்ட்ரோஜென் எனப்படும் பெண் ஹார்மோன் சுரக்கும்வரை மூளைக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பு கிடைக்கும். மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவதால் மாரடைப்பு மாதிரியே பிரெயின் அட்டாக் ஆபத்தும் பெண்களுக்கு அதிகரிக்கும். புகை, மதுப் பழக்கங்கள், கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்தம் மற்றும் ரத்தச் சர்க்கரை போன்ற விஷயங்கள் பிரெயின் அட்டாக் ஆபத்தை ஆண், பெண் பாகுபாடின்றி அதிகரிப்பவை.

மூளை பாதிப்பில் மூன்று விதங்கள்...

மூளையை பாதிக்கும் பிரெயின் அட்டாக் மூன்று விதங்களில் நடக்கலாம்.

1. ரத்தக் குழாய்கள் தாமாகவே பிரச்னைக் குள்ளாகி, அவற்றில் அடைப்பு ஏற்படலாம். கட்டுப்பாடில்லாத நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக இது வரும். அதற்குப் பெயர் `த்ராம்போசிஸ்' (Thrombosis).

இதயத்தில் இந்தப் பிரச்னை வந்தால் அதை `கொரோனரி த்ராம்போசிஸ்' (Coronary thrombosis) என்கிறோம். அதுவே மூளையில் வந்தால் `த்ராம்போட்டிக் ஸ்ட்ரோக்' (Thrombotic strokes).

இதில் ஏதோ காரணத்துக்காக ரத்தத்தின் அடர்த்தி அதிகமானால் அதற்குப் பெயர் `ஹைப்பர்விஸ்கோசிட்டி' (Hyperviscosity).

அதன் விளைவாக ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படலாம்.

ரத்தம் சம்பந்தப்பட்ட சில பாதிப்புகள் சிலருக்கு இருக்கலாம். உதாரணத்துக்கு

ரத்தம் உறைதலைத் தடுக்கும் `பிளேட்லெட்ஸ்' எனப்படும் தட்டணுக்கள் சிலருக்கு அதிகமாக இருக்கும். அதனால் அடைப்பு வரலாம். ரத்தம் தொடர்பான சிலவகை புற்று நோய் களும் அடைப்புக்குக் காரணமாகி, ஸ்ட்ரோக்கை ஏற்படுத்தலாம். அளவுக்கதிக கொலஸ்ட்ரால், ட்ரைகிளி சரைடு எனப்படும் கெட்ட கொழுப்பு இருந்தாலும் ரத்தக்குழாய் அடைப்பும் ஸ்ட்ரோக்கும் வரலாம்.

2. உடலின் வேறு பகுதிகளில் ஏற்பட்ட ரத்தக்குழாய் அடைப்பும் மூளையை பாதிக்கலாம். அதற்குப் பெயர் ‘எம்பாலிக் ஸ்ட்ரோக்’ (Embolic stroke). முறையற்ற இதயத் துடிப்பு, ரத்தத்தின் அடர்த்தி அதிகமாக இருப்பது போன்றவற்றால் இப்படி நிகழலாம். கழுத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் (Carotid artery) தழும்பு அல்லது பிசிறு போன்று இருக்கலாம். அதிலிருந்து ஒரு சிறு பகுதி உடைந்து மூளையிலுள்ள ரத்தக்குழாயை அடைக்கும்.

3. மூளையில் ரத்தம் கசிவதால் ஏற்படுவது ‘ஹெமராஜிக் ஸ்ட்ரோக்’ (Hemorrhagic Stroke). இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பிறவியிலேயே ரத்தக்குழாய்களின் சுவர்கள் பலவீனமாக இருக்கலாம். மூளைப்பகுதியில் குட்டி பலூன் போல ஒட்டிக்கொண்டிருக்கும். `அனியூரிசம்' (Aneurysm) எனப்படும் இது,

பல வருடங்களாக சைலன்ட்டாக இருந்து திடீரென வெடிக்கலாம். ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தாலும் ரத்தக்குழாய் வெடித்து மூளையில் ரத்தம் கசியலாம்.

மிக அரிதாகத் தலையில் அடிபடுவதால் இந்தப் பிரச்னை ஏற்படலாம். ஆனால், இது சற்றே வித்தியாசமானது. இதில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும்.

அறிகுறி முன்னே... ஆபத்து பின்னே...

இவை தவிர `ட்ரான்சியென்ட் இஸ்கெமிக் அட்டாக்' (Transient Ischemic Attack - TIA) என ஒரு வகை பாதிப்பும் உண்டு. `ட்ரான்சியென்ட்' என்றால் தற்காலிகம் என்று பொருள். `இஸ்கெமிக்' என்றால் ரத்த ஓட்டம் குறைவது. இதனால் சில நொடிகள் முதல் சில மணி நேரம்வரை பக்கவாதம், மரத்துப்போவது, தலைச்சுற்றல், ஒரு கை அல்லது காலில் உணர்ச்சியே இல்லாதது போன்றவை வந்து, தானாகச் சரியாகிவிடும். எம்பாலிக் ஸ்ட்ரோக்கில் குறிப்பிட்டது மாதிரி சின்ன பிசிறு ரத்தக்குழாயை அடைத்து, உடனே வெளியேறிவிட்டால் அந்த இடைப்பட்ட நேரத்தில் இப்படி வரும். இந்த வகை தற்காலிக ஸ்ட்ரோக், அடுத்து ஒருவருக்கு நிரந்தர ஸ்ட்ரோக் வரலாம் என்பதற்கான அறிகுறி. எனவே, இதை அலட்சியமாக நினைக்காமல் முறையான சிகிச்சை அவசியம்.

‘கொஞ்ச நேரத்துக்கு கைகால் மரத்துப் போச்சு... அப்புறம் சரியாயிடுச்சு’ என இதைச் சாதாரணமாகக் கடந்து போவார்கள். அப்படி அலட்சியப் படுத்தினால், பின்னாளில் அது நிரந்தர பக்கவாதமாக மாற வாய்ப்புகள் அதிகம். இந்த வகை ஸ்ட்ரோக் வந்தவர்கள், ரயிலிலோ, பஸ்ஸிலோ பயணம் செய்யும்போது, இறங்க வேண்டிய இடம் வந்தும் இறங்க மாட்டார்கள். தற்காலிக பாதிப்பு நிலையில் இருந்ததன் விளைவு இது. சில நிமிடங்களில் அடுத்த ஸ்டேஷன் அல்லது ஸ்டாப் வருவதற்குள் தெளிவாகிவிடுவார்கள். இந்த நிலை, பிற்காலத்தில் வரப்போகிற பெரிய பாதிப்பை உணர்த்தும் அறிகுறி என்பதை அறிய மாட்டார்கள்.

அறிகுறிகள்...

முகத்தில் திடீரென ஏற்படுகிற மரத்துப்போகிற உணர்வு. குறிப்பாக ஒருபக்கத்தில்.

பேசுவதில், புரிந்துகொள்வதில் ஏற்படுகிற திடீர் குழப்பம்.

பார்வையில் குழப்பநிலை.

நடப்பதில் சிரமம்... நிலைதடுமாறிய நிலையை உணர்தல்.

திடீரென ஏற்படும் காரணமற்ற தீவிர தலைவலி.

இவற்றை உணர்ந்தால் உடனடியாக அவசர சிகிச்சை மருத்துவரை நாட வேண்டும்.

சிகிச்சைகள்...

`த்ராம்போட்டிக்' மற்றும் `எம்பாலிக்' ஸ்ட்ரோக்குகளுக்கு டிபிஏ (TPA) எனும் ஒரு மருந்து இருக்கிறது. அதை ஸ்ட்ரோக் பாதித்த அடுத்த நான்கரை மணி நேரத்துக்குள் கொடுத்துவிட்டால் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். அதனால் இந்த விஷயத்தில் நேரம் மிக முக்கியம். ஆனால், இந்த மருந்து, ‘ஹெமராஜிக் ஸ்ட்ரோக்’குக்கு பலன் தராது. ஸ்ட்ரோக் பாதித்த எல்லோருக்கும் இதைக் கொடுக்க முடியாது. சில டெஸ்ட் செய்து, அதற்கேற்பவே கொடுக்கப்படும். அப்படிக் கொடுக்கும்போது பக்க வாதத்தின் தீவிரத்தைக் குறைக்கவோ, சிலருக்கு அதை முழுக்கவே ரிவர்ஸ் செய்யவோ முடியும்.

அறுவை சிகிச்சை அவசியமா?

சிலருக்கு அடைப்பு அழுத்தமாகவோ, பெரிதாகவோ இருந்தால் டிபிஏ மருந்தையும் கொடுத்து, இன்டர்வென்ஷனல் நியூராலஜி எனும் முறையில் ரத்தக்குழாயினுள் கதீட்டரை செலுத்தி, அந்த அடைப்பை அகற்றுவோம். இதயத்துக்குள் ஸ்டென்ட் வைப்பது போல மூளையிலும் ஸ்டென்ட்டிங் பண்ணலாம். ‘ஹெமராஜிக் ஸ்ட்ரோக்’ பாதித்தவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சை தேவைப்படும். ஏனென்றால் அந்த அடைப்பானது அதிக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கட்டி போல காட்சியளிக்கும். அறுவை சிகிச்சையின் மூலம் ரத்த அடைப்பை நீக்கிவிட்டு, மண்டை ஓட்டை மீண்டும் பொருத்த மாட்டோம். ஸ்ட்ரோக் பாதித்த உடனே மூளை வீங்கிவிடும். அந்த வீக்கம் வடியும்வரை மண்டையோட்டை பத்திரப்படுத்தி வைப்போம். சம்பந்தப்பட்ட நபர் நார்மலான பிறகு, மண்டையோட்டை மீண்டும் பொருத்துவோம்.

அறிகுறி சிறுசு.... ஆபத்து பெருசு... பிரெயின் அட்டாக் பயங்கரம் அறிவீர்களா?

மீண்டும் தாக்குமா?

டிபிஏ போன்ற மருந்துகளால் இன்று ஸ்ட்ரோக் பாதிப்புக்குப் பிறகான உயிரிழப்புகளைப் பெரிய அளவில் குறைக்க முடியும். ஆனால், ஸ்ட்ரோக் என்பது பெரும்பாலும் உறுப்புகளைச் செயலிழக்க வைத்துவிடுகிறது. நோயாளியை வீட்டுக்கு அனுப்பும்போது மிகக் குறைந்த அளவு மருந்துகளையே பரிந்துரைத்து அனுப்புவோம். ரத்தம் உறையாமலிருப்பதற்கும், கொலஸ்ட் ராலைக் கட்டுப்படுத்தவும் மருந்துகள் கொடுப்பதன் மூலம் இரண்டாவது முறை ஸ்ட்ரோக் வருவதைத்

தடுக்க முடியும். ஹார்ட் அட்டாக் போலவே ஸ்ட்ரோக்கும் மீண்டும் வர வாய்ப்புகள் உண்டு. எனவே, ஒருமுறை வந்ததும் வாழ்வியல் மாற்றங்களில் கவனம் அவசியம். பிசியோதெரபி, ஸ்பீச் தெரபி, உடற்பயிற்சி போன்ற புனர்வாழ்வு சிகிச்சைகள்தான் பிரதானம்.

மூளையில் பாதிக் கப்பட்ட அந்தப் பகுதி யில் தழும்பு ஏற்படும். ஆனால், அதைச் சுற்றியுள்ள நரம்பு செல்கள் அதே வேலைகளைக் கற்றுக்கொள்ளச் செய்யும் அளவுக்கு மூளைக்குத் திறன் உண்டு. பக்கவாதம் பாதித்த சிலர் ஆரம்பத்தில் கைகால்களைக்கூட அசைக்க முடியாத நிலையில் இருப்பார்கள். ஆனால், மூன்றே மாதங்களில் பிடிமானத்துடன் நடப்பார்கள், மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள். எல்லோருக்கும் இப்படியாகும் என்று சொல்ல முடியாது. ஆனால், `ரிஹேபிலி டேஷன்' சிகிச்சைகளால் பாதிப்பின் விளைவுகள் மோசமாவதைத் தடுக்க முடியும். சோம்பேறித் தனத்தால் உடற்பயிற்சிக்கோ, பிசியோ

தெரபிக்கோ ஒத்துழைக்க மறுத்தால், பிறகு அவர்களைக் குணப்படுத்துவது சிரமம். செல்கள் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் செய்தால்தான் இது சாத்தியம்.

ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படும்போது அந்தப் பகுதியின் மையத்திலுள்ள திசுக்கள் இறந்துவிடும். அதைச் சுற்றி திசுக்களின் வளையம் (Penumbra) ஒன்று இறக்கும்தருவாயில் இருக்கும். அதற்கு வெளியில்தான் மூளையின் தற்காலிக வீக்கம் காணப்படும். தாமதிக்காமல் சிகிச்சை கொடுக்கும்போது இந்தத் திசுக்களின் வளையம் சிறியதாகும். அதனால் பாதிப்புக்குள்ளான பகுதியும் சுருங்கும். ஸ்ட்ரோக் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.

மூளை ஆரோக்கியத்துக்கு...

சரிவிகித உணவு, ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை, நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றுக்கு ரெகுலர் மருத்துவப் பரிசோதனை, புகை, ஆல்கஹால் பழக்கங்கள் தவிர்த்தல், போதை மருந்துகள் தவிர்த்தல், உடல் கேட்கும்போது ரெஸ்ட் கொடுப்பது, நல்ல தூக்கம், ஆற்றலுக்கு அப்பாற்பட்ட வேலைகளைச் செய்யா மல் இருத்தல்.

மெசேஜ்

கைகால் மரத்துப்போவது போன்ற சின்ன அறிகுறி யானாலும் அலட்சியம் செய்ய வேண்டாம். உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதில் தவறில்லை.

ஆபத்தை உணர்த்தும் FAST அறிகுறிகள்

FACE ஸ்மைல் ப்ளீஸ்...

சிரிக்கச் சொல்வதன் மூலம் சிரிப்பு

ஒரு பக்கமாகக் கோணிச் செல்கிறதா என்பதை வைத்து முகவாதத்தைக் கண்டு பிடிக்கலாம். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர் களுக்குச் சிரிப்பு இயல்பானதாகவே இருக்கும்.

ARMS

கையைத் தூக்கு... காலைத் தூக்கு...

நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு, கையையும் காலையும் உயர்த்த முடிந்தால் அது பிரெயின் அட்டாக் அல்ல.

SPEECH பெயர் என்ன?

பிரெயின் அட்டாக்கால் பாதிக்கப் பட்டிருந்தால் பெயரை நினைவுபடுத்திச் சொல்வதில் சிரமமும் குழப்பமும் இருக்கும். இல்லாவிட்டால் தன் பெயரைத் தெளிவாகச் சொல்வார்.

TIME டைம்...

இவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் நேரம் பொன்னானது என அவசர சிகிச்சைக்கு விரைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது இது. 4 மணி நேரத்துக்குள் மருத்துவரை அணுகி, சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.

இவை எல்லாம் சுயநினைவை இழக்காதவர்களுக்குத்தான். அரிதாக சிலர் சுயநினைவை இழக்கக்கூடும். அவர்களுக்கு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் செய்தே என்ன பிரச்னை என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருக்கும்.

ஸ்ட்ரெஸ் அதிகரித்தால் பிரெயின் அட்டாக் வருமா?

உங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்வது, ஆக்டிவ்வாக இருப்பது, யோசிப்பது போன்றவை எல்லாம் மூளைக்கான பயிற்சிகளாக இருக்கும். ஆனால், அதே வேலைகளை ஸ்ட்ரெஸ்ஸுடன் செய்யும் போது அது மூளைக்கு நல்லதல்ல.

எந்த வயதில் தாக்கும்?

யாருக்கும் வரலாம். முறையற்ற வாழ்வியல் முக்கிய காரணம். கடந்த வருடங்களில் மிக இள வயதினர் அதிகம் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.