Published:Updated:

புத்தம் புது காலை : பொதுவெளியில் தாய்ப்பால் ஊட்டுவதும், சோறூட்டுவது போலத்தான்... தயக்கம் வேண்டாம்!

பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று சொல்லவும், அதை அந்நியமாகப் பார்க்கவும் நம் ஒருவருக்கும் உரிமையில்லை. அதேபோல, பாலூட்டுவதை, பாலியல் ரீதியாகப் பார்ப்பது இழிவான செயல்.

ஸ்பெயின் நாட்டின் நீச்சல் வீராங்கனையான ஓனா கார்போனலை, கோவிட் தொற்றைக் காரணம் காட்டி அவரது ஒருவயது மகனை ஒலிம்பிக் வில்லேஜூக்குள் அனுமதிக்கவில்லை டோக்கியோ ஒலிம்பிக்ஸ். மனவருத்தத்துடன் அவர் தனது தாய்ப்பாலை Breast pump மூலமாக சேமித்து வைத்து போட்டியில் கலந்து கொள்கிறார் என்கிறது ஒரு செய்தி. வெற்றிப் பதக்கத்துடன் மகனுக்கு மீண்டும் தாய்ப்பால் ஊட்டட்டும் இந்த அன்னை என்று வாழ்த்தும் அதேவேளையில் இது உலகத் தாய்ப்பால் வாரம் என்பதால் இதுதொடர்பாக நாம் சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது.

"மேடம், நம்ம கிட்ட டெலிவரியான சுமித்ரா ஞாபகம் இருக்கல்ல உங்களுக்கு... இன்னிக்கு முதல் தடுப்பூசி போடறதுக்காக பாப்பாவை எடுத்துட்டு வந்திருக்கா. நாம அந்தக் குழந்தையை தாய்ப்பால் குடிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்... இன்னிக்கு பாப்பாவுக்கு புட்டியில பால் குடுத்துட்டு இருக்கா மேடம். புடிச்சு நல்லா திட்டிவிட்டுட்டேன்!” என்று படபடவென்று பொரிந்து கொண்டிருந்தார் நர்ஸ் பிரபா.

பிரபாவை ஒரு நர்ஸ் என்றோ, இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்றோ மட்டும் சொல்லிவிட முடியாது. தாய்ப்பாலின் அருமை உணர்ந்தவர் அவர். பிரபாவின் குழந்தைப்பேறுக்குப் பின், பணியில் அவள் இணைந்தபோது, பிரசவித்த எந்தத் தாய், தாய்ப்பால் ஊட்ட முடியாமல் சிரமப்பட்டாலும், தானே அந்தக் குழந்தைகளுக்கு, அந்தத் தாய்களின் அனுமதியுடன் தாய்ப்பால் ஊட்டியவள் அவள். அவள் முன்பாக யாரேனும் புட்டிப்பால் கொடுத்தால் என்ன ஆகும்... அதுவும் இந்த சுமித்ரா?!

தாய்ப்பால் வாரம்
தாய்ப்பால் வாரம்

திருமணமாகி 12 வருடங்கள் கழித்து, தனது 36-வது வயதில் போன மாதம்தான், ஒரு அழகிய ஆண் குழந்தையைப் பெற்றிருந்தாள் சுமித்ரா. கர்ப்ப காலத்தில், ஆறாம் மாதத்திலேயே கர்ப்பகால சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் அதிகம் காணப்பட்டநிலையில், அவளது உடற்பருமனும் சேர்ந்துகொள்ள... தினந்தோறும் இன்சுலின் ஊசி, பிரஷர் மாத்திரைகள், இரத்த ஓட்டத்தை சீராக்கும் மருந்துகள் என ஒன்பது மாதங்களும் மருந்துகளின் துணையுடன்தான், கரு வளர்ந்தது என்றே சொல்லலாம்.

இத்தனைக்குப் பிறகு சுமித்ராவின் எடை கூடியதோடு, வயிற்றில் வளர்ந்த குழந்தையின் எடையும் கூட, சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. நான்கு கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறக்க, குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்க செவிலியர் எடுத்த முயற்சிகளெல்லாம் சாதாரணமானதல்ல. முதல் இரண்டு நாட்களும் சுமித்ராவின் பாலூட்டும் சுரப்பிகள் வேலை செய்யவில்லை என்பதால், Galactogogues எனப்படும் பால்சுரப்பை அதிகரிக்கும் மருந்துகளைக் கொடுத்து சுமித்ராவை பாலூட்ட முயற்சிக்க வைத்தோம். குழந்தையின் Suckling reflex எனும் முலைப்பால் குடிக்கும் உணர்வுகளை ஊக்கப்படுத்தினோம்.

அதேசமயம், பசியுடன் அழும் குழந்தைக்கு வேறு அன்னையிடமிருந்து தாய்ப்பாலைப் பெற்று குழந்தைக்குப் புகட்டி, தொடர்ந்து தங்களால் ஆனதை முயற்சித்தனர் செவிலியர் ஒவ்வொருவரும். இரண்டு நாட்களுக்குப் பிறகு சுமித்ராவுக்கு லேசாகப் பால் சுரக்க ஆரம்பிக்க, குழந்தையை சரியான நிலையில் பிடித்துப் பாலூட்டக் கற்றுத்தந்து அவள் அன்னையை விட சற்று அதிகமாகவே கஷ்டப்பட்டிருந்தார்கள் செவிலியர்கள் அனைவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிக எளிதாக குழந்தைக்குப் பாலூட்டவும், பராமரிக்கவும் கற்றுக்கொண்ட சுமித்ரா, அடுத்து வந்த நாட்களில் எல்லாம் தானே சரியான முறையில் பாலூட்டியதை நானே கவனித்திருந்ததால், இப்போது அந்த சுமித்ராவுக்கு என்னவாயிற்று என்று யோசித்தபடியே சுமித்ராவை அறைக்குள் அனுப்புமாறு சொன்னேன்.

தாய்ப்பால் வாரம்
தாய்ப்பால் வாரம்

உள்ளே நுழைந்த சுமித்ரா சற்று எடை குறைந்திருந்தாள். இறுக்கமான சுடிதார் அணிந்திருந்தாள். "என்னம்மா நல்லா இருக்கயா... குழந்தை எப்படி இருக்கான்... தாய்ப்பால் எல்லாம் ரெகுலரா தர்றியா?" என்றபடி குழந்தையை அவள் கையில் இருந்து வாங்கினேன். "ஆமாம் மேடம். தாய்ப்பால் தான் தர்றேன். நல்லா குடிச்சுக்கறான். குழந்தை வெயிட் கூடியிருக்கான் பாருங்க..." என்றாள் சுமித்ரா மகிழ்ச்சியாக.

"அப்ப இன்னிக்கு மட்டும் ஏன்டா புட்டிப்பால் தந்த?' என்று கேட்டதும், "வெளியே வரும்போது எப்படி தாய்ப்பால் தர்றதுன்னு அம்மாதான் புட்டிப்பாலை எடுத்துக்கச் சொன்னாங்க மேடம்" என்றாள்.

"இந்த மாதிரி டிரெஸ் போட்டா, தாய்ப்பால் தரமுடியாதுதான்'' என்று கூறியபடி, “வேற இடம்னா ஓகே. இங்க ஹாஸ்பிடல்ல பாலூட்ட தனியறை இருக்கறது உனக்குத் தெரியும் தானே?” என்றபடியே குழந்தையைப் பார்க்கத் தொடங்கினேன்.

தாய்ப்பால்தான் குழந்தைகளின் உணவும் மருந்தும். குழந்தைகளுக்கு வந்த நோயை குணப்படுத்தும் தாய்ப்பால்தான், குழந்தைகளை வரப்போகும் நோயிலிருந்தும் பாதுகாக்கிறது. அத்துடன் தாய்ப்பாலூட்டுவது தாய், சேய் இருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது என்பதால்தான், உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகிய அமைப்புகள் உலகெங்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதற்கான விழிப்புணர்வையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. என்றாலும், பெண்களுக்கு பொதுவெளியில் பாலூட்டுவதில் இன்னும் மனதளவில் தடையிருப்பதைக் காணமுடிகிறது.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது குழந்தைக்கு நிம்மதியாகப் பால் கொடுக்க முடியாது என்பதாலேயே குழந்தை வளரும்வரையில் வருடக்கணக்கில் வெளியே செல்வதைத் தவிர்க்கும் தாய்மார்கள் உள்ளனர். வெளியே வரும்போது குழந்தையை சால்வையால் மூடிக்கொண்டு பால் கொடுத்தாலும் எல்லோரும் தன்னையே உற்றுப்பார்ப்பது போல் உணரும் தாய்மார்களும் உள்ளனர்.

சுமித்ராவிடம் மெல்ல பேச ஆரம்பித்தேன். "இரு சுமித்ரா... உனக்கு ரெண்டு படங்களைக் காட்டுறேன்' என்றபடி, எனது மொபைலில் நான் சேமித்து வைத்திருந்த புகைப்படங்களை அவளுக்குக் காட்டினேன்.

பிரேசில் நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைவரான, Manuela d' Avilaவின் புகைப்படம் ஒன்று. ஒரு பாராளுமன்ற பேச்சின்போது, வெகு இயல்பாக தனது இரு கடமைகளை, அதாவது பாராளுமன்றத்தில் தனது உரையை நிகழ்த்தும்போதே, தனது குழந்தைக்கும் தாய்ப்பாலைப் புகட்டுவது போலிருக்கும் அந்த அழகிய புகைப்படத்தில், தனது கவனமனைத்தும் உரையில் இருக்க, தன்னிச்சையாக தனது குழந்தைக்கு தாய்ப்பால் தருவதைப் போலிருக்கும் காட்சி அது.

அடுத்ததாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ஒரு ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில், தனது மூன்று மாதக் குழந்தைக்கு, தாய்ப்பாலை புகட்டும் படம். அந்தப் புகைப்படங்களை அவளிடம் காட்டிவிட்டு, வீட்டில் இருந்தாலும், வெளியே வந்தாலும் தாய்ப்பால் தருவது என்பது இயல்பான செயல், தாய்மையின் இலக்கணம் என்பதை அவளுக்குப் புரியவைத்து, மீண்டும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி சற்று அழுத்திச் சொன்ன பிறகே, சுமித்ராவை அனுப்பிவைத்தேன்.

தாய்ப்பால் வாரம்
தாய்ப்பால் வாரம்

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் உலக தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டுவர, இந்த ஆண்டின் பொருளாக 'தாய்ப்பால் ஊட்டுதலைப் பாதுகாத்தல்... பொறுப்பு எங்கே உள்ளது?" என்பதேயாகும்.

இந்நிலையில், 'பொது இடங்களில் பாலூட்டுதல்' குறித்த சில தகவல்கள் நமக்காகவும்...

* நமது நாட்டில், பல நகரங்களின் பஸ், இரயில் மற்றும் விமான நிலையங்களில் தாய்ப்பால் தருவதற்கான தனி இட வசதி (Breastfeeding room) உள்ளது.

* பொது இடங்களில் பாலூட்டுவதற்கு ஏற்ப உடைகள் அணிவது மிகவும் அவசியம். இந்தியப் பெண்களுக்கு புடவை இதற்கு மிகவும் ஏற்ற ஒன்றாகும்.

* அமெரிக்கா உட்பட பல நாடுகள் பொது இடங்களில் பகிரங்கமாக தாய்ப்பால் தருவதை சட்டரீதியாக பிரகடனப் படுத்தியுள்ளது.

* மடகாஸ்கர், பொலிவியா, எகிப்து, உகாண்டா, எரீட்ரீயா, பெரு, மலாவி, கம்போடியா, ஸ்ரீலங்கா, ருவாண்டா ஆகிய நாடுகள்தான் 90% வரை தாய்ப்பால் தந்திடும் உலகின் முதல் பத்து நாடுகள் என்கிறது 'The Richest' study.

* பிரசவகால விடுப்பு (Maternity Leave) என்பதை ஆறு மாதமாக இந்திய அரசு மாற்றியதின் காரணமே, பணிக்குச் செல்லும் பெண்கள், முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலை மட்டுமே தரவேண்டும் என்பதற்காகத்தான்.

* தாய்ப்பாலைத் தொடர்ந்து தரும் பெண்களுக்கு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை வெகு குறைவாகவே காணப்படுகிறது.

* தொடர்ந்து பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகம் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

* இறைவனின் படைப்புகளிலேயே தாய், தனது சேய்க்குப் பாலூட்டுவதுதான், மிகவும் புனிதமான, உன்னதமான, அழகான நிகழ்வு என்று கூறுகிறது UNICEF.

அது வீடு என்றாலும், வெட்டவெளி என்றாலும், வேறு எந்த இடமென்றாலும் தகும்!

தாய்மை ஒரு வரம் என்றால்... தாய்ப்பால் ஒரு வரப்பிரசாதம். ஒரு தாய் தனது குழந்தைக்கு சோறூட்டுவதைப் போலவே, பாலூட்டுவதும் இயல்பான செயல்தான். பொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது என்று சொல்லவும், அதை அந்நியமாகப் பார்க்கவும் நம் ஒருவருக்கும் உரிமையில்லை. அதேபோல, பாலூட்டுவதை, பாலியல் ரீதியாகப் பார்ப்பது இழிவான செயல்.

ஆம்... தாய்ப்பால் ஊட்டுதலைப் பாதுகாத்தல் எனும் பொறுப்பு, நம் அனைவரிடமும் உள்ளது!

#உலகத்தாய்ப்பால் வாரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு