கட்டுரைகள்
ஆன்மிகம்
சினிமா
பேட்டிகள்
Published:Updated:

உடலினை உறுதி செய்! - சைலேந்திரபாபு சொல்லும் ரகசியம்

சைலேந்திரபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
சைலேந்திரபாபு

ஃபிட்னெஸ்

“எவ்வளவு மனக் கஷ்டம் இருந்தாலும் சரி... அரை மணி நேரம் உங்க உடம்பு வேர்க்குற அளவுக்கு உடற்பயிற்சி செய்யுங்க. உடம்பை நாம தயார் செஞ்சா போதும், மனசு தானா ரிலாக்ஸ் ஆகிடும்.” உற்சாகம் குறையாமல் சொல்கிறார் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் எளிய உடற்பயிற்சி வீடியோக்களுக்கும், பகிரும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்கும் இளைஞர்கள் லைக்ஸை அள்ளிக்குவிக்கின்றனர்.

சமீபத்தில் இரண்டு இரவு, ஒரு பகல் இடைவிடாமல் சைக்கிளிங் செய்து, சுமார் 600 கி.மீ தூரத்தை அநாயாசமாகக் கடந்திருக்கிறார் சைலேந்திரபாபு. தீபாவளி மலருக்காக ‘மிடுக்’ உடற்கட்டுடன் மிளிரும் இந்த 58 வயது இளைஞரின் ‘சைக்கிளிங்’ பயணத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டோம்.

நொளம்பூரிலுள்ள அவர் வீட்டில் அதிகாலையே ஆஜரானோம். இடுப்பில் துப்பாக்கியுடன்கூடிய பெல்ட் அணிந்தபடி, சைக்கிளிங் உடையில் வெளியே வந்தார் சைலேந்திரபாபு. “குட் மார்னிங்” எனத் தன் கம்பீரக் குரலில் நமது உடலில் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருந்த தூக்கத்தை விரட்டியடித்தார். “இன்னிக்கு மதுரவாயல் பைபாஸ்ல தாம்பரம் வரைக்கும் போயிட்டு ரிட்டர்ன் வரப்போறோம். என்னோட வேகத்துக்கு நீங்களும் வருவீங்கதானே?” என்று கேட்க, “நாங்க பைக்லயே வர்றோம் சார்...” என்று நாம் சொல்ல, கிளம்பினார் சைலேந்திரபாபு.

உடலினை உறுதி செய்! - சைலேந்திரபாபு சொல்லும் ரகசியம்

சைக்கிளிங் பயணம் தொடங்கியது. மெதுவாக ஓட்டியபடி நம்முடன் பேசிக்கொண்டே வந்தார். “சென்னை புறநகர் ரொம்ப அழகான ஏரியாங்க... காலையில 5 மணிக்கு எழுந்து சென்னைக்கு வெளியில ஒரு ரவுண்டு வாங்க. சுத்தமான காற்று, இயற்கையான சூழல், புதுப்புது மனிதர்கள்... உங்களோட அந்த நாளையே உற்சாகமா மாத்திடும்” சொல்லிக்கொண்டே சைக்கிள் வேகத்தைக் கூட்டினார். எங்கள் பைக்கின் ஸ்பீடாமீட்டர் 40 கி.மீ எனக் காட்டியது. இந்தப் பயணத்தின் இடையே சில கேள்விகளையும் சைலேந்திரபாபுவிடம் முன்வைத்தோம்.

“உடற்பயிற்சி செய்யும் பழக்கம் எப்போது உருவானது, இந்த சைக்கிளிங் பயணத்தை எப்போது தொடங்கினீர்கள்?”

“எனக்கு ஸ்விம்மிங்தான் ‘ஹாபி.’ ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்ல இருந்தபோது, ஸ்விம்மிங்ல மெடல் வாங்கினேன். அப்போ, தேசியப் பாதுகாப்புப் படையில பயிற்சி எடுத்தப்போ, தினமும் 10 கி.மீ ஓடும் பயிற்சி கொடுப்பாங்க. அதுலருந்துதான் தினமும் ஓடும் பழக்கம் உருவாச்சு. ஐந்து மாவட்டங்கள்ல நான் எஸ்.பி-யாக பணியாற்றியிருக்கேன். அப்போ, என்னோட வேலைபார்க்கும் ஜூனியர்ஸ்கூட தினமும் ஓடினேன். பிறகு, நான் எந்தத் துறையில பணியாற்றினாலும், என்னோட உடற்பயிற்சியில துறை அதிகாரி களையும் இணைச்சுக்குவேன். என் விளையாட்டு ஆர்வம் 50 வயசுக்கு மேலதான் ஆரம்பமாச்சு. தினமும் மூன்று மணி நேர உடற்பயிற்சி என்பது எனக்குக் கட்டாயம். காவல்துறை, ராணுவத்தினரைவிட தீயணைப்புத்துறையில இருக்குறவங்களுக்கு உடல் வலிமை அதிகம் இருக்கணும். கிணத்துக்குள்ள விழுந்தவங்களைத் தூக்கிட்டு மேல வரும்போது, உடல்பலம் இருந்தாத்தான் அது முடியும். நான் தீயணைப்புத்துறை இயக்குநராகப் பொறுப்பேத்துக்கிட்டதுக்கு அப்புறம் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கரூர், சென்னை ஏரியாக்கள்ல மாராத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினேன். ஏராளமான தீயணைப்புத்துறை காவலர்கள் கலந்துக்கிட்டாங்க.”

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

“இந்த 58 வயதிலும் உடலை எப்படி உறுதியுடன் வைத்திருக்கிறீர்கள்?”

“முதலில் உடற்பயிற்சி. இரண்டாவது உணவுப் பழக்கம். மூன்றாவது மகிழ்ச்சியா இருக்குறது... இதுதான் என்னோட ரகசியம். வாரத்துக்கு மூன்று நாள்கள் சைக்கிளிங். மீதமுள்ள நாள்கள் வீட்டிலேயே மூன்று மணி நேர உடற்பயிற்சி... இதுதான் என் ஃபிட்னெஸ் சீக்ரெட். அதேபோல பசிச்சா மட்டும்தான் சாப்பிடுவேன். பசி எடுக்காம இருக்கும்போது, நாம உடலுக்குள்ள அனுப்புற உணவுகளால இரைப்பை குழப்பமடையும். பழைய உணவுகளோடு இந்த உணவையும் அது சேர்த்து அரைக்கும். உடல் எடை கூடும். உடலைக் கச்சிதமா வெச்சிருக்கணும்னா, பசி எடுக்காம சாப்பிடாதீங்க. அதே மாதிரி, முழு வயிறும் நிறையுற மாதிரி என்னைக்கும் சாப்பிடக் கூடாது. வயித்துல கொஞ்சம் இடம் காலியா இருக்கணும்.

எப்போதும் உங்களை மகிழ்ச்சியா வெச்சுக்கோங்க. நான் சைக்கிளிங் பண்ணும்போது, சிலர் எதிர்த்திசையில, ராங் ரூட்டுல மோதுற மாதிரி வந்து நிறுத்துவாங்க. எதுக்கும் நான் கோபப்படுறது கிடையாது. இந்த நிதானம், மனப்பக்குவம் உடற்பயிற்சி செய்யறது மூலமாத்தான் எனக்கு வந்தது. எவ்வளவு சோகம் தாக்கினாலும் சரி, அரை மணி நேரம் உடம்பு வேர்க்குற அளவுக்கு ஓடுங்க. உடம்பும் மனசும் ரிலாக்ஸ் ஆகிடும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யறவங்களுக்கு ‘ஸ்ட்ரெஸ்’ வரவே வராது.”

ழியில் பொதுமக்கள் சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டு உற்சாகத்துடன் கையாட்டினர். பதிலுக்கு இவரும் கையசைத்து அவர்களைக் குதூகலமாக்கினார். சந்தேகப் பார்வையுடன் பார்த்துக்கொண்டிருந்த ஒரு வேன் ஓட்டுநர் வேகமாக ஓடிவந்து, “சார் நீங்க சைலேந்திரபாபு தானே... உங்ககூட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” என்றார். அந்த ஓட்டுநருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

“நாம முன்னால போய் அவர் வர்றதை ஷூட் பண்ணலாம்” என்று கேமராமேன் சொன்னதும் நான் பைக்கை விரட்டினேன். இரண்டு கிலோமீட்டர்கள் தாண்டிச் சென்று... நின்று கேமராவைப் பையிலிருந்து எடுப்பதற்குள் அவரது சைக்கிள் எங்களைக் கடந்துவிட்டது. 'என்ன இவ்வளவு வேகமா போறாரு...” என்று நினைத்தபடியே மீண்டும் பைக்கை எடுக்க, சிறிது தூரத்தில் சைக்கிளை ஓரமாக வைத்துவிட்டு நமக்காகக் காத்திருந்தார்.

“ஆறு வருஷமாத்தான் சைக்கிளிங் பண்றேன். முதல்ல 3,000 ரூபாய் சைக்கிள்லதான் சைக்கிளிங் பண்ண ஆரம்பிச்சேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளிங் பண்ணலாம்னு நான் முடிவு பண்ணினப்ப, “இந்த சைக்கிள்ல அது முடியாது. ‘சைக்கிளிங்’ பண்றதுக்குனு தனியா சைக்கிள் இருக்கு. அதை வாங்குங்க”னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. அதுக்குப் பிறகுதான், நாலு ‘சைக்கிளிங்’ சைக்கிள்கள் வாங்கினேன். ஒவ்வொண்ணும் 50,000 ரூபாய்ல இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை ஆகுது. ஒரு மாணவி தன்னோட பயிற்சிக்காக சைக்கிள் தேவைப்படுதுனு சொன்னப்போ, அதுல ஒரு சைக்கிளை அவங்களுக்கு கொடுத்துட்டேன். இப்போ மூணு சைக்கிள் இருக்கு. என்கிட்ட சொந்தமா மோட்டார் சைக்கிள், கார் எதுவும் கிடையாது. இந்த சைக்கிள்கள்தான் என்னோட சொத்து.”

“உங்களின் இத்தனை வருடப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?”

“நிறைய தோல்விகளைத் தாண்டித்தான் இந்த இடத்துக்கு நான் வந்திருக்கேன். டாக்டர் ஆகணும்கிறதுதான் என் கனவு. ஆனா, மார்க் பட்டியலோட இன்டர்வியூவெச்சு சீட் கொடுக்கும் முறை அப்போ இருந்ததால என்னால மருத்துவம் படிக்க முடியலை. மதுரை வேளாண் கல்லூரியில சேர்ந்தேன். அங்கே படிச்ச வி.எஸ்.சுப்புராஜ் என்பவர், ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணினார். டாக்டர் கனவு பலிக்காம வேளாண் படிக்கவந்த அவர், பிற்பாடு மருத்துவத்துறைச் செயலாளராக இருந்ததெல்லாம் தனிக்கதை. எனக்கும் அப்படி ஒரு ஆசை ஏற்பட்டு ஐ.பி.எஸ் பாஸ் பண்ணினேன். வாழ்க்கை நிறைவா இருக்கு. எதிர்காலத்துல இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க ஆசைப்படுறேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் படிக்க ஆசைப்படுறவங்களுக்கு பயிற்சியும் கொடுத்துக்கிட்டு வர்றேன்.”

“உங்கள் வீட்டு தீபாவளி பற்றிச் சொல்லுங்களேன்?”

“கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறைதான் என்னோட சொந்த ஊர். எங்க வீட்டுலேயே மொத்தம் எட்டுப் பேர். பக்கத்துல சித்தப்பா வீடு, சொந்தக்காரங்க வீடுனு எப்பவும் இருபது, முப்பது பேர் இருப்போம். குடும்பத்தோட பந்து விளையாடுறது, பேசி சிரிக்குறதுனு தீபாவளி கொண்டாட்டமா இருக்கும். அதுவும் எங்க ஊரோட அழகு... இப்போ நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது. எனக்கு கிராமம்தாங்க ரொம்ப பிடிக்கும். ஆனா இப்போ தீயணைப்புத் துறைங்கறதால சென்னையிலயே இருக்கேன். தீபாவளி அன்னிக்குத்தான் நாங்க பிஸியாவும் எச்சரிக்கையாவும் இருப்போம்.”

நம்மோடு சைலேந்திரபாபு பேசி முடித்தபோது, அவர் வீடும் நெருங்கியிருந்தது. அருகியிலிருந்த இளநீர் கடைக்குச் சென்றவர், “இன்னிக்கு 60 கி.மீ சைக்கிளிங் செஞ்சிருக்கேன். உடம்புல வியர்வை அதிகமா வெளியேறிட்டதால, உப்புச்சத்து குறைவாகியிருக்கும். அதுக்காக இளநீர் குடிக்குறது வழக்கம். இளநீர் வாங்கும்போது, நிறைய பேர் தண்ணியா கொடுங்கனு சொல்லுவாங்க. அது மாதிரி வாங்கக் கூடாது. உள்ளே பருப்பு இருக்குற இளநிதான் சுவையா இருக்கும்” என்று சொல்லிவிட்டு, நமக்கும் இரண்டு இளநீர் வாங்கிக் கொடுத்தார்.

“உங்க உடம்பை நீங்க மரியாதை கொடுத்து, உறுதியாவெச்சிருங்க. உங்க மனசும் உறுதியா, ரிலாக்ஸா இருக்கும்” என்று தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி விடைகொடுத்தார் சைலேந்திரபாபு.