Election bannerElection banner
Published:Updated:

புத்தம்புது காலை : கொரோனா காலம், தேர்தல் முடிவுகள்... நாம் சிரிக்கலாமா?! #WorldLaughterDay

சிரிப்பு
சிரிப்பு

சிறு குழந்தையாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 முறை வரை சிரித்த நாம், வயதாக வயதாக, 6 முறை கூட சிரிப்பதில்லை என்பதும் நமது நோய்களுக்கு ஒரு காரணமாக இருக்கிறது

கோவிட் அலையாகட்டும்... தேர்தல் முடிவுகளாகட்டும்... உண்மையிலேயே சிரிக்கும் விஷயங்கள் அல்ல என்றாலும், பல சிக்கல்களை மனிதர்கள் எதிர்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ப்ரிஸ்கிரிப்ஷன்... சிரிப்புதான்!


"வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்" என்றாலும், சிரிப்பதற்கு வாய் மட்டும் போதாது... முகத்தின் 12 தசைகள், தொண்டையின் வோக்கல் கார்டுகள், மார்பு மற்றும் வயிற்றுத் தசைகள், இவற்றை இயங்கச்செய்யும் மூளையின் ஹிப்போகேம்பஸ், அமீக்டலா மற்றும் ஃப்ரான்டல் கார்டக்ஸ் என அனைத்தும் சேர்ந்தால்தான் Motions and Emotions... அதாவது உடலின் இயக்கமும் உணர்வுகளும் இணைந்து ஒரு மனிதனால் சிரிக்கவே முடியுமாம்!

ஒரு ஆரோக்கியமான மனிதன், மகிழ்ச்சியை எப்படி சிரிப்பின் மூலமாக வெளிப்படுத்துகிறானோ அதேபோல, அந்த சிரிப்பே அவனது ஆரோக்கியத்தை கூட்டவும் செய்கிறது என்று கூறும் மருத்துவ அறிவியல், சிரிப்பின் நன்மைகளையும் பட்டியலிடுகிறது.

சிரிப்பு
சிரிப்பு

பொதுவாக நாம் சிரிக்கும்போது மூச்சை ஆழமாக இழுப்பதால், நுரையீரல்கள் விரிவடைந்து, செல்களின் ஆக்சிஜன் அளவு கூடுகிறது என்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. மூளையின் உற்சாக நியூரோ டிரான்ஸ்மிட்டர்களான செரடோனின்களும், டோபமைன்களும். அதேசமயம் வலிநீக்கும் என்டார்ஃபின்களும் அதிகம் சுரப்பதுடன், ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களான கார்டிஸால், அட்ரீனலின் ஆகியன குறைந்து, ஓர் உற்சாக மனநிலையை சிரிப்பு ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியன குறைந்து மன அமைதி கூடுகிறது என்பதுடன் உடல்வலி, மூட்டுவலி, செரிமானமின்மை, இரத்த அழுத்தம், ஏன் மாரடைப்பு ஏற்படுவதைக் கூட சிரிப்பு தடுக்கிறது என்கிறது ஆய்வுகள். அனைத்திற்கும் மேலாக, அரை மணிநேரம் தொடர் உடற்பயிற்சியும், பத்து நிமிடங்கள் சிரிப்பதும் ஒரே பலனைத் தருகிறது என்கிறார்கள் ஃபிட்னஸ் ஆய்வாளர்கள்.

சிறு குழந்தையாக நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 முறை வரை சிரித்த நாம், வயதாக வயதாக, 6 முறை கூட சிரிப்பதில்லை என்பதும் நமது நோய்களுக்கு ஒரு காரணமாக இருக்கிறது என்று கருதிய ஒரு அமெரிக்க மனவியல் நிபுணர்கள் குழு ஒரு ஆய்வினை மேற்கொண்டது. சில அலுவலகங்களைத் தேர்ந்தெடுத்து மனஅழுத்தம் தரும் பல பணிகளைத் தந்து, கூடவே அவர்களை செயற்கையாக சிரிக்க வைத்து மேற்கொண்ட ஆய்வில், அவ்வளவு மன அழுத்தத்திலும் அந்த மனிதர்கள் மன அமைதியுடனும், உற்சாகத்துடனும் இயங்கியதை கவனித்தனர்.

இதன் அடிப்படையில்தான் பலர் ஒன்றுகூடிச் சிரிப்பதை, சிரிப்புப் பயிற்சி (laughing therapy) என பரிந்துரைத்தனர். இந்தியாவில் 'ஹாஸ்ய யோகா' என்ற சிரிப்புடன் கூடிய யோகப் பயிற்சி, laughing therapy-யின் ஓர் அங்கம் என்பதுடன், அதனை ஆதாரமாகக் கொண்டே மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா என்பவர் கடந்த 1998-ம் ஆண்டு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மும்பையில் ஒரே இடத்தில் கூட்டி சிரிக்க வைத்து, உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) உருவாக்கினாராம்.

சிரிப்பு
சிரிப்பு

அவர் தொடங்கி இன்று உலகம் முழுவதும் இயங்கி வரும் 'லாஃப்டர் யோகா' இயக்கம் (Laughter Yoga Movement) 2000-ம் ஆண்டு முதல் மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவுமின்றி உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6000த்திற்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகின்றன.

மனிதர்களிடம் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை சுத்தமாகத் துடைத்து, பாசிட்டிவ் எனர்ஜியைக் கொடுக்கும் இந்தச் சிரிப்புதான் இன்றைய பெருந்தொற்று நாட்களின் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்க நமக்குத் தேவையானதும் கூட.

ஏனெனில் சிரிப்பைக் காட்டிலும் மிகப்பெரிய பெருந்தொற்று வேறெதுவும் இந்த உலகில் இல்லை என்பதே உண்மை! #laughterday

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு