Published:Updated:

ஓயாத பணி, உடற்பயிற்சியின்மை, நேரந்தவறிய சாப்பாடு... அலட்சியம் வேண்டாம் மருத்துவர்களே!

chest pain / Representational Image
chest pain / Representational Image ( Photo courtesy: Freepik )

கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன? அதன் அறிகுறிகள்? தவிர்ப்பது எவ்வாறு?

சரும மருத்துவரும் நடிகருமான சேதுராமன், `கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை இணையதளங்களில் வீடியோ பேட்டிகள் மூலம் செய்து வந்தவர்; இந்நிலையில் திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இவரது எதிர்பாராத மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவிட்19 வைரஸ் பாதிப்பால் சீன, இத்தாலி மருத்துவர்கள் மரணம், செவிலியர்களின் மரணம் எனத் தொடர்ந்து உலகம் முழுவதுமிருந்து மருத்துவப் பணியாளர்களின் உயிரிழப்புகள் குறித்த செய்திகளைக் கேள்விப்படுகிறோம். இவற்றுள் திடீரென நிகழும் கார்டியாக் அரெஸ்ட் உயிரிழப்புகளும் அடக்கம்.

மருத்துவர் சேதுராமன்
மருத்துவர் சேதுராமன்

இப்படிப்பட்ட திடீர் மரணங்கள் ஏன் நிகழ்கின்றன? மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படுக்குவது ஏன்? கார்டியாக் அரெஸ்ட் என்றால் என்ன? அதன் அறிகுறிகள்? தவிர்ப்பது எவ்வாறு? - இந்த எல்லாச் சந்தேகங்களையும் பற்றி இதயநோய் மருத்துவர் சிவகடாட்சத்திடம் பேசினோம்.

``ஒரு நியூரோ சர்ஜன். ஞாயிற்றுக்கிழமை காலை கிளினிக் போனாரு. இறந்துட்டாரு. முதல்நாள் முழுக்க சர்ஜரி செஞ்சுட்டு இருந்திருக்கார். கிளினிக்குகளுக்கு மாறி மாறி சர்ஜரிக்குப் போயிருக்கார். ஓய்வில்லாம வேலை பார்க்கிறதைத்தான் டாக்டர்கள் அதிகம் செய்றாங்க. அதுதான் தப்பு.” என்று வருந்துகிறார், சிவகடாட்சம்.

இதயநோய் மருத்துவர் சிவகடாட்சம்
இதயநோய் மருத்துவர் சிவகடாட்சம்

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தவர், ̀ ̀̀̀மருத்துவர்கள் ̀நமக்கென்ன வரப்போகுது’ன்னு அலட்சியமா இருக்கிறாங்க. என்னைக்காவது ஒருநாள் ஒரு டாக்டர் பிபி செக் பண்ணுவாங்களான்னா, மாட்டாங்க. மேற்கத்திய நாட்டவர்களுக்கு 60 வயதுல வர்ற இதய நோய்கள், இந்தியர்களுக்கு 40 வயதிலேயே வருது. ஆனா, டாக்டர்கள் தன்னை சூப்பர் மனிதர்கள் போல நினைச்சுக்கிறாங்க. என்கிட்ட வந்து, ̀எப்படி டாக்டர் இருக்கீங்க’ன்னு கேட்பாங்க. கேட்டுட்டு, ̀சாரி டாக்டர். உங்களைப் போய் கேட்கிறேன், பாருங்க’ன்னு சொல்லுவாங்க. நானும் சக மனுஷன்தானேன்னு சொல்லுவேன். எனக்கும் பசி இருக்கும், நோய் இருக்கும். அதை மருத்துவர்கள் புரிஞ்சுக்கணும்” என்றார்.

வளரும் மருத்துவர்கள் பற்றிப் பேசினார். ``மருத்துவர்கள் நிறைய பேரைப் பார்க்கிறேன். காலையிலிருந்து பேஷன்ட்களைப் பார்ப்பாங்க. மதியம் லேட்டா சாப்பிடுவாங்க. லேட் நைட்வரை வொர்க் பண்ணுவாங்க. இதுபோக அவங்க வீடுகளுக்குச் செய்ய வேண்டியவை. இதெல்லாம் அவங்களை ரொம்பவே பாதிக்குது. தினமும் தூங்குற நேரம் போக இருக்கிற மீதிநேரத்தில ஒருமணிநேரம் உடற்பயிற்சிக்காக ஒதுக்கணும். சனி, ஞாயிறு ஓய்வெடுத்துக்கலாம், அன்னைக்கு மட்டும் வாக்கிங் போய்க்கலாம்ன்னு நினைப்பாங்க. இதெல்லாம் ரொம்பத் தப்பு. கட்டாய உடற்பயிற்சி தேவை. குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கணும். ஒருமணிநேரம் உடற்பயிற்சின்னா, அதுல 45 நிமிடம் உடம்புக்கு, 15 நிமிடம் மனசுக்கு. இப்படி அமைச்சுக்கணும்'' என்கிறார்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

தொடர்ந்து, ``கார்டியாக் அரெஸ்ட்டுங்கிறது இதயம் உடனடியாகச் செயலிழப்பது. மாரடைப்பு ஏற்பட்டதும் கார்டியாக் அரெஸ்ட் நடக்கலாம். தவிர, இதயத்தில கோளாறு உள்ளவங்க சரியா கவனிக்காம விட்டாலும் கார்டியாக் அரெஸ்ட் ஆகும். ஹார்ட் அட்டாக் என்பது இதயத்தில் உள்ள மூன்று ரத்தக் குழாய்களில் ஏதேனும் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் நின்றுவிடுவது. கார்டியாக் அரெஸ்ட் என்பது, இதயத்துடிப்பு திடீரென நின்றுவிடுவது. சீரற்ற இதயத்துடிப்பாலும் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும். ஹார்ட் அட்டாக் இல்லாமலும் கார்டியாக் அரெஸ்ட் வரும்.

கார்டியாக் ஃபெயிலியர் என்பது இதயத் தசைகளின் செயலிழப்பு. ஹார்ட் ஒரு பம்பைப் போல. அதுக்கு 100 சிசி ரத்தம் போச்சுன்னா, 70 சிசி வரையும் ரத்தத்தைப் பாய்ச்சும். அது ஹார்ட் அட்டாக்கினால் குறையலாம். இதயத்தசை நோயால் குறையலாம். பம்பிங் கம்மியாச்சுன்னா பின்னால இருக்கிற சேம்பரில் ரத்தம் சேரும். அங்கே நுரையீரல் இருப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படும். இது இதயச் செயலிழப்பு.

கொரோனா சிகிச்சை
கொரோனா சிகிச்சை

குடும்பத்தைக் கைக்கொள்ள வேண்டியது உள்ளிட்ட பொறுப்புகள் சேர, சேர பயம் உண்டாகுது. அதனாலேயே இளவயதில் இதயப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள், குறிப்பாக கார்டியாக் அரெஸ்ட் போன்றவை நேருது. ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கார்டியாக் அரெஸ்ட் போன்ற இதயப் பிரச்னைகளின் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக மெனோபாஸுக்குப் பிறகு. நீரிழிவு, ரத்த அழுத்தம், புகை, மதுப்பழக்கம், உடல்பருமன், அதீத கொழுப்பு, ஸ்ட்ரெஸ் உள்ளவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வாய்ப்பு அதிகம். காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கும், உப்புச்சத்து அதிகம் சேர்க்காதவர்களுக்கும் இதயநோய்கள், இதயம் சார்ந்த பிரச்னைகள் வருவது குறைவு.

வைரஸ் பாதிப்புகளில் மூச்சுத்திணறல் ஏற்பட்டோ, இதயத் தசை பலவீனமடைந்தோ இறுதியில் கார்டியாக் அரெஸ்ட் நடக்கலாம். மொத்த கேஸ்களிலும் கார்டியாக் அரெஸ்ட் என்பது ஒரு சதவிகிதத்துக்கும் கீழாகத்தான் இருக்கும். பரிசோதனைகளை வழக்கப்படுத்திக் கொண்டால் இதைப் பற்றியெல்லாம் பயப்படத் தேவையில்லை. படபடப்பு, நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது கார்டியாக் அரெஸ்ட்டுக்கும் கொண்டு செல்லும்.

எல்லா அறிகுறிகளையும் ஹார்ட் அட்டாக் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஆனால், இவை புதிதாக நமக்கு ஏற்பட்டால் கவனத்தில் கொண்டு மருத்துவரை அணுகுவது அவசியம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு