கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

ரவிவர்மன், மாரி செல்வராஜ், பாவனா,  கல்யாணி
பிரீமியம் ஸ்டோரி
News
ரவிவர்மன், மாரி செல்வராஜ், பாவனா, கல்யாணி

சாயங்காலம் கொஞ்ச நேர நடையையும் தவறாமப் பண்ணிடுறேன். இரவு உணவை தூங்கறதுக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடியே முடிச்சிடுறேன்.

கொரோனோவை வெல்லும் போரில், நம் உடலுக்கு சக்தி தருபவை நாம் சாப்பிடும் உணவுகள்தான். ‘இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் என்ன சாப்பிடுகிறீர்கள்’, ‘உங்கள் டயட் என்ன’ என இவர்களைக் கேட்டோம்.
சத்தாக சாப்பிட்டால் கெத்து!

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

“காலையில அரை மணி நேரம் யோகா. காலை உணவா ரெண்டு இட்லி. தோசை மாதிரி எண்ணெயில் தயாராகும் உணவைத் தவிர்த்துடுறேன், மதியச் சாப்பாட்டுல சாதம் அளவுதான். ஆனா, காய்கறிகள் அதிகமா இருக்கும். மதியத்துக்கு மேல ஒரு மணி நேரத் தூக்கம். சாயங்காலம் கொஞ்ச நேர நடையையும் தவறாமப் பண்ணிடுறேன். இரவு உணவை தூங்கறதுக்கு மூணு மணி நேரத்துக்கு முன்னாடியே முடிச்சிடுறேன்.

நான் கட்டாயம் மூணு வேளையும் சாப்பிட்டே ஆகணும்னு நினைக்கற ஆள் இல்லை. பசிக்கற நேரங்கள்ல மட்டுமே சாப்பிட்டுப் பழகியிருக்கேன். இதைத் தாண்டி இந்தக் கோவிட் காலத்தை எதிர்கொள்ள ஏத்த விஷயம்னா தண்ணீர் நிறைய குடிக்கறேன். மூச்சை அதிகமா இழுத்து மெதுவா விடுகிறேன்.”

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

இயக்குநர் மாரி செல்வராஜ்

“கிராமத்துல இருந்த நாள்கள்ல நல்ல உடலுழைப்பும் இருந்தது, சாப்பாடும் அதுக்கேத்தபடி எடுத்துக்க முடிஞ்சது. சினிமாவுக்கு வந்தபிறகு ஷூட்டிங், கதைத் தயாரிப்புன்னு பரபரன்னு இயங்கிட்டிருந்ததுல சாப்பாட்டுப் பழக்கத்தைச் சரியானதா வச்சுக்க முடியலை. இப்ப லாக்டௌன் வந்து நிறைய உணர்த்திவிட்டது. எது கிடைக்குதோ, அதை நேரம் கெட்ட நேரத்துல சாப்பிட்டுட்டு இருந்ததெல்லாம் மாறிடுச்சு. இப்பதான் முறையான வீட்டு உணவு கிடைக்குது. இன்னைக்குச் சூழலுக்கு அவசியமான கஷாயம் குடிச்சுட்டு வர்றேன். வீட்டு மாடியிலயே நடக்கறேன். அதுவும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒரு விஷயம்னு புரிஞ்சிருக்கு. குழந்தைகளோடு அதிக நேரம் செலவிடுறேன். நானும் மூன்றாவது குழந்தையாகிவிடுகிறேன். மனம் உற்சாகமடைந்தா, உடலுக்குமே எனர்ஜி கிடைச்ச மாதிரி உணர்வு வருது.”

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

தொகுப்பாளர் பாவனா

“கொரோனா பற்றிப் பொதுவா தெரிய வர்ற ஒரு விஷயம், எந்தவொரு கிருமியுமே வெப்பத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாதுங்கிறதுதான். எல்லாரும் சூடா சாப்பிடணும்னுதான் விரும்புவாங்கன்னாலும், இந்தக் காலத்துல எங்க வீட்டுல அது ஸ்ட்ரிக்ட்டான கண்டிஷன் ஆகிடுச்சு. சாப்பாடோ, இட்லியோ, சப்பாத்தியோ, சுடச்சுட எடுத்துக்கிடுறேன். அதேபோல சம்மரா இருந்தாலும் பரவால்ல, இந்த ஒரு வருஷத்துக்கு எந்த நேரமும் வெதுவெதுப்பான தண்ணீர்தான்.

கஷாயம் மட்டுந்தான் குடிக்கணுமான்னு சிலர் கேக்கலாம். அப்படி இல்ல, காபி, டீ, பால்னு பிடிச்சதை சூடா எடுத்துக்கறேன். சாப்பாட்டைப் பொறுத்தவரை இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல விரும்பறேன். கொஞ்ச காலத்துக்குத் தயவுசெய்து என்ன இருக்கோ அதை வச்சு வீட்டுல சமைச்சுச் சாப்பிடுங்க. அதுதான் உடலுக்கு நல்லது.”

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

நடிகை கல்யாணி

“கணவர் ரோஹித் மருத்துவரா முன்களப் பணியாளரா இருக்கறதால கோவிட் தொடங்கினதுல இருந்தே சாப்பாட்டு விஷயத்துல அவர் சொல்ற மெனுதான். பெரும்பாலும் வீட்டுச் சாப்பாடுதான். எப்பவாவது ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சா அதுவும் சத்தான உணவாதான் இருக்கும். காலையில இட்லி, தோசை, மதியம் பருப்பு சேர்க்கணும்கிறதுக்காக சாம்பார் கண்டிப்பா இருக்கும். கீரைகள், பொரியலுக்குத் தினம் ஒரு காய்னு கலந்துகட்டி எடுத்துட்டு வர்றோம். சாயங்காலம் ஏதாவதொரு சுண்டல், குறிப்பிட்ட இடைவெளியில கபசுரக் குடிநீர், வாரத்துக்கு ரெண்டு முறை கஷாயம். சமையல்ல இஞ்சி, பூண்டு அதிகமாச் சேர்க்கறோம்.

இன்னொரு முக்கியமான விஷயம், அஞ்சு நிமிஷம் வீட்டை விட்டு வெளியில போயிட்டு வந்தாக்கூட நல்லா சோப் போட்டு ஒரு குளியல் போட்டுடுறோம். அவர் டியூட்டி முடிஞ்சதும் மருத்துவமனையிலயே ஒரு குளியல் போட்டுடுவார். வீட்டுக்கு வந்தும் திரும்பக் குளிக்கறார்.

சத்தாக சாப்பிட்டால் கெத்து!
DIXITH

ஓட்டப்பந்தய வீராங்கனை தனலட்சுமி

“பட்டியாலாவில் உள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சில இருக்கேன். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்காக நம்பிக்கையோடு பயிற்சி செய்யறேன். ஸ்போர்ட்ஸ்ல இருக்கறவங்களுக்கு உணவில் கட்டுப்பாடு அவசியம்.

அதிகாலை பயிற்சி முடிந்ததும், பச்சைப் பயிறு சுண்டல், முன்பே ஊறவைத்த பாதாம், திராட்சை ஆகியவற்றுடன் சில முந்திரிகள் சாப்பிடறேன். காலை உணவில் 3 வேகவைத்த முட்டைகள் அவசியம். ஏதாவதொரு ஜூஸ், இட்லி, தோசை, பிரட் ஆகியவை தினமும் மெனுவில் மாறி மாறி இடம்பெறும். மதியம் கொஞ்சம் சாதத்துடன் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றில் அன்று எது கொடுக்கப்படுகிறதோ அது. மாலை தேநீரோடு சாண்ட்விச் போன்ற ஸ்னாக்ஸ். டின்னருக்கு இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி, ஜூஸ் மற்றும் பழங்கள். அனைத்தையும்விட முக்கியமாக பால்!”

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

”பட்டிமன்றப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன்

“மருத்துவமனையில இடமில்லைங்கிறது போய் மயானத்துல வரிசைங்கிற துரதிர்ஷ்டமான நிலை தமிழ்நாட்டுக்கும் வந்துடுச்சோன்னு பயமா இருக்கு. இந்தக் கொரோனாவுக்கு எதிரான போர்ல நம்ம உணவுக்கும் முக்கியப் பங்கு இருக்கு. நான் கடைப்பிடிக்கிற ஒரு வழக்கத்தை மத்தவங்களும் கடைப்பிடிக்கணும்னு அன்போடு கேட்டுக்கறேன். அது வேற ஒண்ணுமில்லீங்க, தினமும் சாப்பாட்டுல ஏதாவதொரு வடிவத்துல நாலு மிளகைச் சேர்த்துக்கங்க. சைவமோ, அசைவமோ, இந்த நேரத்துக்குச் சாப்பாட்டுல தினமும் மிளகு அவசியம். வெண்பொங்கல், மிளகுக் குழம்பு, பெப்பர் சிக்கன், ரசம்னு என்னென்ன வடிவத்துல சேர்த்துக்க முடியுமோ சேர்த்துக்கலாம்.

நான் தொடர்ந்து கேழ்வரகு, கம்பு, சோளக் கூழ் சாப்பிடுறேன். இட்லி சாம்பார் நல்ல உணவு. ஏன்னா அதுல ரெண்டு விதமான பருப்பை எடுத்துக்கறோம். சிம்பிளாச் சொல்லணும்னா, எளிதாச் செரிக்கிற, இந்த வெப்பமான சூழலுக்கு ஏத்த உணவை அளவா, சூடாச் சாப்பிடறது நல்லது.”

இவர்கள் சரி, எல்லோருக்கும் ஆலோசனை தரும் டயட்டீஷியன்கள் இந்தக் கொரோனா நாள்களில் என்ன சாப்பிடுகிறார்கள்? மூன்று பேரிடம் மெனு கேட்டோம்.
சத்தாக சாப்பிட்டால் கெத்து!

டயட்டீஷியன் காயத்ரி

“அதிகாலை முதல் வேலையாக இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பேன். சிறிது நேரம் கழித்து கொஞ்சமாக காபி. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு அல்லது கஷாயம் குடிப்பேன். காலை உணவுக்கு முன்பு கொய்யா, நெல்லிக்காய், மாதுளை, உலர் பழங்கள் எனக் கொஞ்சம் சாப்பிடுவேன். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு காலை உணவு. வீட்டில் மற்றவர்களுக்குக் கம்பு, சோளம், கேழ்வரகு எனச் சிறுதானிய உணவுகளையும், வேக வைத்த உணவுகளையும் சமைத்துத் தருவேன். என்னுடைய காலை உணவு என்பது சோறுதான். அத்துடன் பருப்பு, காய்கறி, கூட்டு இருக்கும். சிறு ஸ்பூன் அளவு நெய்யும் சேர்த்துக்கொள்வேன்.

காலையிலேயே சாப்பாடு சாப்பிடுவதால், மதியம் 3:30 மணியளவில் பயறு, சுண்டல், அவல், பொரிகடலை என ஒன்றைச் சாப்பிடுவேன். மாலை 6:30 மணியளவில் பழ ஜூஸ். இரவு 7:30 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவேன். கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றில் செய்த தோசை அல்லது சப்பாத்தி. அல்லது சத்துமாவுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவேன். முடித்ததும் வெந்நீர் குடிப்பேன். தூங்கச் செல்வதற்கு முன் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வேன்.”

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

டயட்டீஷியன் பத்மினி வெங்கடேஷ்

“காலை எழுந்ததும் ஒரு கப் பால். பிறகு காலை உணவாக ராகி, கம்பு போன்ற சிறுதானிய உணவுகள் வாரத்தில் மூன்று நாள்கள். மற்ற நாள்களில் இட்லி, பொங்கல் சாப்பிடுவேன். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை முட்டை. 11 மணியளவில் கீரை, காய்கறி சூப் அல்லது பாதாம் சாப்பிடுவேன். மதிய உணவாக 2 சப்பாத்தியும் நிறைய காய்கறிகளும் எடுத்துக்கொள்வேன். வாரத்தில் இரண்டு நாள்கள் கீரை கட்டாயம். மாலை 4 மணியளவில் பால் அல்லது காபி. வாரத்தில் 2, 3 நாள்கள் சுண்டல் அல்லது மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவேன். இரவு உணவாக அடை மாவில் செய்த இட்லி அல்லது தோசை, சப்பாத்தி சாப்பிடுவேன்.

புரோட்டீன் உணவுகளை நாம் அதிகம் சாப்பிட வேண்டும் என்றாலும், அவற்றை உடல் உள்வாங்கிக்கொள்ள கார்போஹைட்ரேட் அவசியம். நோய் எதிர்ப்பு சக்திக்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.”

சத்தாக சாப்பிட்டால் கெத்து!

டயட்டீஷியன் தாரணி கிருஷ்ணன்

“தினமும் 7 மணி நேரம் தூக்கம் அவசியம். காலை எழுந்ததும் சுமார் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகா செய்வேன். பிறகு சர்க்கரை சேர்க்காத டீ ஒரு கப். புரதம் நிறைந்த அடை மாவில் செய்த இட்லி, தோசை, கடலை மாவு தோசை, மில்லட் தோசை, சப்பாத்தியுடன் பனீர் என ஒன்றையும், பழங்களையும் காலை உணவாக எடுத்துக்கொள்வேன். 11:30 மணியளவில் 6 பாதாம் சாப்பிடுவேன்.

மதிய உணவில் 2 கப் காய்கறிகளும், ஒரு கப் புரதப் பதார்த்தங்களும்தான் மெயின் மெனு. பருப்பு, சாம்பார், சுண்டல், முளைக்கட்டிய பயறுகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்வேன். கூடவே 200 மி.லி தயிர். மாலை 3:30 மணியளவில் சர்க்கரை இல்லாத டீ ஒரு கப். மதியம் என்ன சாப்பிடுகிறேனோ, அதேபோன்ற அளவில்தான் இரவு உணவும். அடிப்படையில் புரோட்டீனை முதன்மைப்படுத்திய உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். அதுவே ஆரோக்கியம் தரும்.”