Published:Updated:

கொரோனா இறப்புச் சான்றிதழ் பெற இனி புதிய நிபந்தனைகள்; வெளியிட்ட மத்திய அரசு!

 Covid
Covid ( AP Photo / Channi Anand )

கொரோனா பாதிப்பு இருந்தும் சம்பந்தப்பட்ட நபர் தற்கொலை, கொலை, விபத்துகளால் இறக்க நேர்ந்திருந்தால் அது கொரோனா மரணமாகக் கருதப்படமாட்டாது எனவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின்போது, தொற்றுப் பரவலின் தீவிரத்தால் வீடுகளிலும், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும்போதும் பல மரணங்கள் நிகழ்ந்தன. இதனால் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கான நிதி உதவி குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தொற்றால் மரணமடைந்தவர்களுக்கு, பிற இணை நோய்கள்தான் மரணத்திற்குக் காரணம் என அவர்களது இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவதால், பெற்றோரை இழந்த குழந்தைகள் நிதி உதவியைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

கொரோனா மரணம்
கொரோனா மரணம்
கொரோனா மரணங்களுக்கு இழப்பீடு: 6 வாரங்களுக்குப் பிறகு நல்ல செய்தி தருமா மத்திய அரசு?

இதற்கு தீர்வாக, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடும், கொரோனா இறப்புச் சான்றிதழும் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, பரிந்துக்கப்பட்ட அரசு உதவிகள் சரியானவர்களுக்கு சென்றுசேர, வழிகாட்டு நெறிமுறைகளை எளிமையாக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த 3-ம் தேதி, மத்திய சுகாதார அமைச்சகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன. அதன்படி, ஆர்டி-பிசிஆர், மாலிகுலர் சோதனை, ரேபிட் ஆன்டிஜென் சோதனை போன்ற மருத்துவ பரிசோதனைகளில் ஏதாவது ஒன்றில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 30 நாட்களுக்குள் மரணமடைந்தால் அது கொரோனா இறப்பாகக் கருதப்படும்.

அதேபோல், கோவிட் பரிசோதனையில் தொற்று உறுதியாகி, பின் மருத்துவமனைகளிலோ அல்லது மருத்துவ முகாம்களிலோ அனுமதிக்கப்பட்டு தொடர் கொரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்கள் 30 நாள்களுக்குப் பின் இறந்தாலும் அதுவும் கொரோனா இறப்பாகவே கருதப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

India Covid 19 Outbreak
India Covid 19 Outbreak
இப்படித்தான் மறைக்கப்படுகின்றனவா கொரோனா மரணங்கள்? - அதிர்ச்சி நிலவரம்; அரசின் பதில் என்ன?

ஆனால், கொரோனா பாதிப்பு இருந்து சம்பந்தப்பட்ட நபர் தற்கொலை, கொலை, விபத்துகளால் இறக்க நேர்ந்திருந்தால் அது கொரோனா மரணமாகக் கருதப்படமாட்டாது எனவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, கொரோனா இறப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட அரசு உதவிகள் சரியானவர்களை சென்று சேருவதை உறுதி செய்ய, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர் அல்லது வட்டாட்சியர் அலுவலர்களால் கொரோனா சோதனைகள் மற்றும் சிகிச்சை ஆவணங்கள் முறையாக சோதிக்கப்பட்ட பிறகே கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்பிக்கப்பட்டவுடன், 30 நாள்களுக்குள் சம்பந்தப்பட்டவருக்கு நிவாரண உதவி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு