நமது உடலே நமக்கு எதிராகச் செயல்பட்டால் ஏற்படும் விளைவுகளை ‘ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர்ஸ்' என்கிறோம். அப்படிப்பட்ட பாதிப்புகளில் ஒன்றுதான் சொரியாசிஸ். இந்தப் பிரச்னையைப் பலர் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. பொடுகு, அரிப்பு, சரும வறட்சி எனத் தவறாகப் புரிந்துகொள்கின்றனர்.
இந்தியாவில் 2.8 சதவிகிதம் பேருக்கு இந்தப் பிரச்னை இருக்கலாம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எப்படி ஏற்படுகிறது?
உடலில் ஏதேனும் தொற்று ஏற்படும்போது அதை எதிர்த்துப் போராட ஆன்டிபாடி உற்பத்தி யாகும். இந்த இயக்கம் மாறுபட்டு உடலிலிருக்கும் திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடி உற்பத்தியாவ தால் ஏற்படும் பிரச்னைகளே ‘ஆட்டோ இம்யூன் நோய்கள்’ (Auto Immune Diseases). சொரியாசிஸும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.
உடலில் வெள்ளை அணுக்களிலுள்ள ‘டி’ செல்கள் சருமத்திலுள்ள செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அவற்றைத் தாக்கும். இதனால் சரும செல்கள் அதீத அளவில் பெருகும். பொதுவாக 28 நாள்களுக்கு ஒரு முறை புதிய செல்கள் உற்பத்தியாகும். சொரி யாசிஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு ஏழு நாள்களுக்கு ஒருமுறைகூட புதிய செல்கள் உருவாகலாம். இதனால் செல்கள் ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து, குவியத்தொடங்கும்.
காரணங்கள்
டைப் 2 சர்க்கரைநோய், வயிறு, குடல் சார்ந்த ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’, இதயநோய், ஆர்த்ரைட்டிஸ், மனப்பதற்றம், மனச்சோர்வு ஆகியவற்றுடன் தொடர்பு டையது. பரம்பரையாகவும் வரலாம்.
சுய பரிசோதனை
சருமம் சிவந்து போதல்
சருமத்தின் மீது சில்வர் நிறத்தில் மீன் செதில்கள் போன்று காணப்படுதல்
செதில்கள் போன்று உருவாவதில் வெடிப்பு ஏற்பட்டு, ரத்தக்கசிவு
அந்த செதில்களைப் பிய்த்தால் அதிலிருந்து ரத்தம் கசிதல்
முழங்கை, கால் மூட்டு, கை, பாதம், நகங்கள், மண்டைப்பகுதி (Scalp), முகம் மற்றும் அந்தரங்கப் பகுதிகளில் இந்த அறிகுறிகள் தோன்றினால் சொரியாசிஸ் பிரச்னையாக இருக்கலாம்.
இவை தவிர, அரிப்பு, மூட்டுகளில் வலியுடன் கூடிய வீக்கமும் இருக்கலாம்.

தூண்டும் காரணிகள்
மன அழுத்தம்
குடிப்பழக்கம்
காயங்கள்
மனநலப் பிரச்னைகளுக்கு எடுக்கும் மருந்துகள்
பிற மருந்துகள்
தொண்டையில் ஏற்படும் தொற்று
எப்படித் தடுக்கலாம்?
உணவில் சர்க்கரையைக் குறைப்பது, உடற் பயிற்சி, உடல் பருமனைக் குறைத்தல், மன அழுத்தத்திலிருந்து விடுபடுதல். சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பால் பொருள்கள், சுத்தரிக்கப்பட்ட சர்க்கரை, மது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் காணப்படும் வால்நட்ஸ், ஆளி விதைகள், மீன், பச்சைக் காய்கறிகள், தானியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட சருமத்திலிருந்து மாதிரியைச் சேகரித்துச் செய்யப்படும் பரிசோதனையின் மூலம் இந்தப் பிரச்னையை மருத்துவர்கள் உறுதிசெய்வார்கள்.
சொரியாசிஸ் உயிரை பாதிக்கும் அளவுக்குத் தீவிரமானது இல்லை என்றாலும், சாதாரண மாக இயங்குவதற்கு, வேலை செய்வதற்குத் தடையை ஏற்படுத்தி வாழ்க்கைத்தரத்தை பாதிக்கும் என்பதால் உடன் சிகிச்சை பெற வேண்டும். வெளிப்புறத்தில் பூசும் களிம்புகள், மருந்து, மாத்திரைகள் மற்றும் லைட் தெரபி மூலம் இந்தப் பிரச்னையைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
தகவல்: செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர், சென்னை