காலையில் எழுந்ததும் மலச்சிக்கலும் இரவில் உறங்கும்போது மனச்சிக்கலும் இல்லாத மனிதனே மகிழ்ச்சியானவன் என்று சொல்லப்படுவதுண்டு. சிறிய பிரச்னையாக ஆரம்பிக்கும் மலச்சிக்கலின் நீட்சிதான் மூலநோய். ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் மூலநோயால் ஏற்படும் வலியால் அவதிப்படுகின்றனர் என்கிறது புள்ளிவிவரம்.
பரிணாம வளர்ச்சியில் மனிதன் செங்குத்தாக நிற்க ஆரம்பித்த பிறகு புவியீர்ப்பு அழுத்தத்தின் காரணமாகவே மலச்சிக்கல் பிரச்னை ஏற்படத் தொடங்கியது எனலாம்.
பெருங்குடலின் அடிப் பகுதியான ஆசன வாய்ப் பகுதியில் ரத்தநாளங்கள் காணப்படும். மலச்சிக்கல் தொடர்கதையாகி மலம் கழிக்க சிரமப்பட்டு, அதிக அழுத்தம் கொடுக்கும் போது அந்த ரத்தநாளங்கள் வீங்குவது தான் மூலநோய்.

யாருக்கெல்லாம் வரலாம்?
நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்களுக்கு வரலாம். வயது முதிர்ச்சியின் காரணமாக முதியோர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு மூலமாக மாறலாம். தைராய்டு, வெயிலில் அதிகம் அலையும் வேலை பார்ப் பவர்களுக்கும் ஏற்படலாம்.
வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள் கலாசாரத்தால் உடல் உழைப்பு மிகவும் குறைந்து, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் அதிகரித்துள்ளது. இந்தப் பழக்கம் மூலநோய் உருவாகும் தன்மை யுடையவர்களுக்கு அதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
3 நிலைகள்
நிலை 1: ஆசனவாயின் உள்பகுதியில் மட்டும் ரத்தநாளங்களில் வீக்கம் இருக்கிறது. வெளியில் எதுவும் அறிகுறிகள் தென்படவில்லை.
நிலை 2: மலம் கழிக்கச் சிரமப்படும்போது வீங்கியிருக்கும் ரத்தநாளம் வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்றுவிடும்.
நிலை 3: வீக்கம் அதிகரித்து சதை ஆசன வாயின் வெளியில் தொங்குவது.

சுய பரிசோதனை
* நாள்பட்ட மலச்சிக்கல்
* ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு உணர்வு அல்லது வலி
* மலம் கழிக்கும்போது வலியில்லாத ரத்தக் கசிவு
*மலம் கழித்த பிறகு சுத்தம் செய்யும்போது சதை அல்லது வீக்கம் ஏதேனும் தென் படுதல்.
சிகிச்சை
* முதல்நிலையிலேயே சிகிச்சை பெற்றால் நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் எடுக்கும் உணவுப்பழக்கம், உடல் இயக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றைப் பின்பற்றினாலே மருந்து, மாத்திரைகள் இல்லாமல் சரி செய்துவிடலாம்.
* 2-ம் நிலையில் சிகிச்சை பெற்றால் மருந்து மாத்திரைகள், உணவு, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றால் சரிசெய்ய முடியும். சிலருக்கு அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவ செயல்முறை தேவைப் படலாம்.
* 3-ம் நிலைக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு.
ரத்தச்சோகை அலெர்ட்!
கண்ணுக்குப் புலப்படாத இடத்திலிருந்து ரத்தம் கசியும்போது அதன் தீவிரத்தை பெரும் பாலானவர்கள் உணர்வதில்லை. `நேத்து காரமா சாப்பிட்டேன். அதான் மோஷன்ல ரத்தம் வருது' என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டு பிரச்னை யைத் தள்ளிப்போடுபவர்கள்தான் அதிகம்.
ஒரு நாளைக்கு 2 மில்லி ரத்தம் வெளி யேறினால்கூட ஒரு மாதத்தில் கணிசமான ரத்தம் வெளியேறி, ரத்தச்சோகை பாதிப்பு ஏற்படலாம்.
மலத்தில் ஒரு துளி ரத்தக்சிவு ஏற்பட்டாலும் அது இயல்பானது இல்லை. மூலம் மட்டுமல்லாமல் ஆசனவாய் வெடிப்பு, குடல் சம்பந்தப்பட்ட புற்றுநோயின் அறிகுறி யாகக்கூட இருக்கலாம். எனவே, ரத்தக்கசிவு தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தகவல்: சூரஜ் சுப்ரமணியம்
பொது அறுவை சிகிச்சை மருத்துவர்
சென்னை