என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 5 - தெறிக்கவிடும் தலைவலி... உங்களுக்கும் இருக்கிறதா?

செக் ஃப்ரம் ஹோம்
பிரீமியம் ஸ்டோரி
News
செக் ஃப்ரம் ஹோம்

ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் விஷயங்களைக் கண்டறிந்து தவிர்த்துவிட்டாலே வலி ஏற்படாமல் தடுக்கலாம்.

வயது, பாலினம், இனம், நாடு என எந்தப் பேதமும் பார்க்காத ஒரு பிரச்னை தலைவலி. உலகம் முழுவதும் 50 சத விகிதத்துக்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் ஒன்று அல்லது அதற்கு அதிகமுறை தலைவலி தாக்கியிருக்கும் என்கின்றன புள்ளிவிவரங்கள். தாங்க முடியாத அளவுக்கு வலிக்கிறது என்றால் அது `மைக்ரேன்' (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி. மைக்ரேன் பாதிப்புள்ளவர்களில் மூன்றில் இருவர் பெண்களாக இருக் கிறார்கள்.

முதன்மை, இரண்டாம் நிலை என தலைவலியை இரண்டாகப் பிரிக்கலாம். நோய், விபத்தினால் காயம் என எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்படுவது முதன்மை நிலை. மூளையில் பிரச்னை, சைனஸ் தொந்தரவு என ஏதாவது காரணத்தால் ஏற்படுவது இரண்டாம் நிலை. மைக்ரேன் என்பது முதன்மை நிலை பட்டியலில் வரும்.

பிரவீனா ஜேசுராஜ்
பிரவீனா ஜேசுராஜ்

பெண்களுக்கு ஏன் அதிகம்?

ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரான் போன்ற ஹார்மோன்களின் தாக்கமே பிரதான காரணம். பூப்பெய்தும் வயதையொட்டி அல்லது 20-30 வயதுக்குள் பெரும்பாலும் இந்தப் பிரச்னை தொடங்கிவிடும். மெனோ பாஸ் நிலையைக் கடந்தவர்களுக்கு அடிக்கடி தலைவலி வருவது குறையும். 50 வயது அல்லது மெனோபாஸுக்குப் பிறகு வரும் தலைவலி, இரண்டாம்நிலை தலைவலியாக இருக்கலாம்.

காரணங்கள்

* மரபியல்

*குடும்பப் பின்னணி

*மன அழுத்தம்

*தூக்கமின்மை

*கருத்தடை மாத்திரைகள்

*காரணம் இல்லாமலும் வரும்

சுயபரிசோதனை

* தலைவலி வருவதற்கு முன்பு ‘ஆரா’ ( Aura) என்பதை உணர்வார்கள். அதாவது, மங்கலான பார்வை, ஒளிரும் வெளிச்சம், ஸிக்-ஸாக் கோடுகள், விதவிதமான உரு வங்கள் போன்றவை பார்வைக்குத் தெரியும்.

* ‘ஆரா’ விலக விலக 2-3 மணி நேரத்துக்குள் தலைவலி மெள்ள அதிகரிக்கத் தொடங்கும்.

* பெரும்பாலும் ஒருபுறம் மட்டுமே தலைவலி இருக்கும், சிலருக்கு இருபுறமும் ஏற்படலாம்.

* ‘விண்’ணெண்று தெறிப்பது போன்ற தீவிர மான தலைவலியாக இருக்கும்.

* வலி 4 முதல் 72 மணி நேரம்கூட நீடிக்கலாம்.

* யாரும் பேசினால் எரிச்சலுணர்வு தோன்றும் `போனோபோபியா’ (Phonophobia) அல்லது வெளிச்சத்தைப் பார்த்தால் எரிச்சலுணர்வு தோன்றும் ‘போட்டோபோபியா’ (Photophobia) ஏற்படும்.

* வாந்தி ஏற்படலாம்.

வேறு மருத்துவ காரணங்கள் எதுவும் இல்லாமல் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றினால் அது ‘மைக்ரேன்’ எனப் படும் ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம்.

தடுப்பது எப்படி?

பூ, பெர்ஃபியூம் போன்ற வாசனைகள், சீஸ், சாக்லேட் போன்ற உணவுகள் என ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் விஷயங்களைக் கண்டறிந்து தவிர்த்துவிட்டாலே வலி ஏற்படாமல் தடுக்கலாம். தூங்கும் முறையை சரிப்படுத்தி, சரிவிகித உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். போதை, புகை, மதுப்பழக்கம் இருந்தால் அவற்றைக் கைவிட வேண்டும். மன அழுத்தத்தை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

செக் ஃப்ரம் ஹோம் - 5 - தெறிக்கவிடும் தலைவலி... உங்களுக்கும் இருக்கிறதா?

சிகிச்சை அவசியமா?

ஒற்றைத் தலைவலி ஏற்படும் நிகழ்வுகளும் அதன் தீவிரமும் நபருக்கு நபர் வேறுபடும். சிலருக்கு வருடத்துக்கு இரண்டு முறை வரலாம். சிலருக்கு வாரத்தில் இரண்டு, மூன்று முறைகூட வரலாம். சிலருக்கு வலி அதிக நேரம் நீடிக்கும். வருடத்துக்கு ஓரிரு முறை வருகிறது என்றால் அவர்களுக்கு வலி மாத்திரை பரிந்துரைக்கப்படும். அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்களுக்கு அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். அதனால், அவர்களுக்குத் தடுப்பு முறை, தெரபி மற்றும் மருந்துகள் கொடுக்க வேண்டியிருக்கும். யாருக்கு, என்ன சிகிச்சை என்பதை மருத்துவர்கள் தீர்மானிப்பார்கள் என்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தகவல்: பிரவீனா ஜேசுராஜ், நரம்பியல் மருத்துவர்