Published:Updated:

செக் ஃப்ரம் ஹோம் - 7 - தோள்பட்டை மூட்டுத் தேய்மானம்... தாமதிக்காமல் கவனிப்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோள்பட்டை மூட்டுத் தேய்மானம்
தோள்பட்டை மூட்டுத் தேய்மானம்

எந்த வகையான தேய்மானம், அதன் தீவிரம், தசைகளின் வலிமை ஆகியவை குறித்து மருத்துவமனையில் பரிசோதனைகளின் அடிப் படையில்தான் அறிந்துகொள்ள முடியும்.

பிரீமியம் ஸ்டோரி

தோள்பட்டை மூட்டுத் தேய் மானம் (Shoulder Arthritis) பொதுவான ஒரு பிரச்னை. ஆண், பெண் வயது என எந்த வரையறையுமின்றி யாருக்கு வேண்டுமானா லும் ஏற்படலாம். ஆனால், இதுபற்றிய விழிப்புணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லை. கால் மூட்டுத் தேய்மானத்துக்கு கொடுக்கப்படும் கவனம் இதற்கு கொடுக்கப் படுவதில்லை.

ராம் சிதம்பரம்
ராம் சிதம்பரம்

தேய்மானம்

உடலிலேயே 360 டிகிரி சுழலும் தன்மை கொண்டது பந்து கிண்ண மூட்டு வகையைச் சேர்ந்த தோள்பட்டை மூட்டுதான். இதில் ஓர் எலும்பு முனை பந்து போலவும், மற்றோர் எலும்பின் முனை கிண்ணம் போலவும் காணப்படும். இரண்டு எலும்புகளையும் இணைத்து வைப்பதற்கு நான்கு பக்கங்களிலும் `ரொடேட்டர் கஃப்' (Rotator cuff) எனப்படும் தசைகள் இருக்கும். இந்தத் தசைகளும் புஜ தசைகளும் இணைந்து தோள்பட்டை மூட்டு இயக்கத்துக்கு உதவுகின்றன. இந்தப் பந்து கிண்ண மூட்டிலிருக்கும் குருத்தெலும்பு தேய்ந்து போவதுதான் ‘ஆர்த்ரைட்டிஸ்’ எனப்படும் தேய்மானம்.

நான்கு விதம்!

1. வயதாவதால் ஏற்படும் எலும்பு தேய்மானம் - கீல்வாதம் (Osteoarthritis).

2. கை கால் விரல்கள் எல்லாம் இறுக்கமாகி இயங்க முடியாமல் போவது, உடலிலுள்ள பல்வேறு மூட்டுகளில் இதே பாதிப்பு ஏற் படுவது - முடக்குவாதம் (Rheumatoid arthritis).

3. தோள்பட்டை மூட்டில் ஏற்படும் பிரத்யேகப் பிரச்னை Cuff tear arthritis. அடிபடுவது, அதிக எடை தூக்கும் வேலைகளைச் செய்வதால் ரொடேட்டர் கஃப் சேத மடைவது. பொதுவாக 40 - 60 வயதினரை பாதிக்கும்.

4. விபத்து, கீழே விழுந்து அடிபடுவதால் பந்து கிண்ண மூட்டு மூன்று, நான்கு துண்டுகளாக உடைந்து போவது `ட்ரமாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்' (Traumatic Arthritis). ஒன்றிரண்டாக உடைந்த துண்டுகள் அதே இடத்தில் இருந்தால் சில நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவை இணைந்துவிடும். ஆனால் பல துண்டுகளாக உடைந்து இடம் மாறியிருந்தால் அறுவை சிகிச்சைதான் தீர்வு. எந்த வயதிலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.

அறிகுறிகள்

ஏதாவது வேலை செய்தால், சிலருக்கு சும்மா இருந்தால்கூட தோள்பட்டையில் வலி ஏற்படும். இரவில் அந்த வலி அதிகரிக்கும். ஒருபுறமாக சாய்ந்துபடுக்க முடியாது. சமைப்பது, காய்கறி வெட்டுவது, பாத்திரங்களைத் தூக்குவது, ஆடை அணிவது, வாகனம் ஓட்டுவது, பொருளை எட்டி எடுப்பது, உயரத்தில் உள்ளவற்றை எடுப்பது, உடற்பயிற்சி என தோள்பட்டையை இயக்கிச் செய்யும் எந்த வேலைகளையும் செய்ய முடியால் போவது.

செக் ஃப்ரம் ஹோம் - 7 - தோள்பட்டை மூட்டுத் தேய்மானம்... தாமதிக்காமல் கவனிப்போம்!

சுய பரிசோதனை

* ஆளுயுர கண்ணாடி முன்பு நேராக நின்று கொள்ள வேண்டும்.

* கையை உடலுக்கு முன்பாகக் கொண்டு வந்து உயர்த்த வேண்டும். அதே போன்று பக்கவாட்டில் கையைக் கொண்டுபோய் மேலே உயர்த்த வேண்டும்.

* அடுத்ததாக, இரண்டு கைகளையும் தலைக்குப் பின்னால் வைத்து முன்னும் பின்னுமாக அசைத்துப் பார்க்க வேண்டும்.

* இப்படிச் செய்யும்போது தோள்பட்டையில் வலி இருந்தாலோ இயக்க முடியாத நிலை இருந்தாலோ அது தோள்பட்டை தேய் மானம் சார்ந்த பிரச்னையாக இருக்கலாம்.

* கைகளைத் தூக்கும்போது அவை தானாக உயராமல் தோள்பட்டையும் சேர்ந்து உயர்ந் தால் அதுவும் தேய்மானமாக இருக்கலாம்.

* இந்த இயக்கங்களை எல்லாம் செய்ய முடிகிறது, வலி இல்லை என்றால் தோள் பட்டையில் பெரிய பிரச்னை எதுவும் இல்லை.

எந்த வகையான தேய்மானம், அதன் தீவிரம், தசைகளின் வலிமை ஆகியவை குறித்து மருத்துவமனையில் பரிசோதனைகளின் அடிப் படையில்தான் அறிந்துகொள்ள முடியும். எனவே, சுய பரிசோதனையில் தேய்மானமாக இருக்கலாம் என்று தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

வேண்டாம் வலி மாத்திரைகள்!

இதுபோன்று மூட்டுகளில் வலி ஏற்படுவதற்கு பலர் வலி நிவாரண மாத்திரைகளை சுயமாக எடுத்துக்கொள்வார்கள். நீண்ட நாள்கள் வலி மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று விட்டால் அறுவை சிகிச்சை இன்றியே தீர்வு கிடைக்கும். தாமதித்தால் அறுவை சிகிச்சையே தீர்வாக அமைந்துவிடும்.

தகவல்: ராம் சிதம்பரம், தோள்பட்டை, முழங்கை, கை மற்றும் விளையாட்டு காயங்கள் அறுவை சிகிச்சை மருத்துவர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு