
கோடைக்காலத்தின் மிகப் பரவலான பிரச்னை களில் ஒன்று சிறுநீரகக் கல் உருவாதல். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பிற நாள் களைவிட கோடையில் இரண்டு மடங்கு அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதே இதற்கு காரணம்.
மக்கள்தொகையில் 12% பேருக்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தப் பிரச்னை ஏற்படலாம். இதனால் பாதிக்கப்படும் ஆண், பெண் விகிதம் 60:40.
4 வகைக் கற்கள்
சிஸ்டின் (Cystine) கற்கள் - மரபணு காரணங் களால் குழந்தைப் பருவத்திலிருந்து சிறுநீரில் `சிஸ்டின்' எனப்படும் அமினோ அமிலம் வெளியேறு வதால் ஏற்படும்.
ஸ்ட்ரூவைட் (Struvite) கற்கள் - சிறுநீரகத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதால் உருவாவது.
யூரிக் அமிலக் கற்கள் - நீர்ச்சத்து இழப்பாலும், சர்க்கரை நோயாளி களுக்கு அதிகம் யூரிக் அமிலம் சிறுநீரில் வெளியேறுவதாலும் உருவாகும்.
கால்சியம் கற்கள் - உணவு, வாழ்க்கைமுறை சார்ந்த காரணிகளால் ஏற்படும் கால்சியம் கற்களில் இருவகை உண்டு. அதிக உப்பு பயன்பாடு, குறைவாகத் தண்ணீர் குடிப்பது, அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்வ தால் ஏற்படும் கால்சியம் பாஸ்பேட்
(Phosphate) கற்கள் ஒருவகை. உருளைக்கிழங்கு, கீரை, நிலக்கடலை, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகள், டார்க் சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் கால்சியம் ஆக்ஸலேட் (Oxalate) கற்கள் மற்றொரு வகை.
சுய பரிசோதனை
நெஞ்சுப் பகுதிக்கு பின்பகுதியில் மேல்புற முதுகுவலி
முதுகுப்பகுதியில் ஆரம்பித்து இடுப்புப் பகுதியின் முன்பக்கம் வரை வலி பரவுதல்
சிறுநீர் கழித்து முடிக்கும்போது வலி
சிறுநீரில் ரத்தக்கசிவு
அடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுதல்.

மாறும் அறிகுறிகள்
கல் எந்த இடத்தில் உருவாகியிருக்கிறதோ அதற்கேற்ப அறிகுறிகளும் மாறும். சிறுநீர்ப் பையில் கல் உருவாகியிருந்தால் சிறுநீர் கழித்து முடிக்கும் நிலையில் வலி, சிறுநீரில் ரத்தக்கசிவு ஏற்படும். சிறுநீர்க் குழாயில் இருந்தால் முதுகுவலி இருக்கும். சிறுநீரகத்தில் உருவாகியிருந்தால் பெரும்பாலும் அறிகுறியே வெளியே தெரியாது, சிலருக்கு அடிக்கடி தொற்று ஏற்படலாம்.
வாழ்க்கைமுறை மாற்றம் மற்றும் மரபணு காரணங்களால் ஏற்படும் சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர் களுக்கு மீண்டும் கல் உருவாக 50% வாய்ப்புள்ளது.
உடனடி சிகிச்சை ஏன் அவசியம்?
சிறுநீரகக் கல் உருவாகியிருப்பது தெரிந்தால் உடனடியாக மருத் துவரை அணுகி சிகிச்சையைத் தொடங்க வேண்டும். 8 மிமீ அளவுள்ள சிறிய கல்கூட சிறுநீரகத்தின் செயல்பாட்டைத் தடை செய்யலாம். கல் உருவாகியுள்ள இடம், அதன் அளவு ஆகிய இரண்டின் அடிப்படையில்தான் சிகிச்சை தீர்மானிக்கப்படும். 7 மிமீக்கும் சிறியதாக இருந்தால் மருந்துகள் கொடுத்து சிறுநீரிலேயே கற்களை வெளியேற்றிவிடலாம். 8 மிமீட்டருக்கு மேல் இருந்தால் சிகிச்சை மூலம் நீக்கலாம்.
வாழ்க்கைமுறை மாற்றமே காரணம்!
சிறுநீரகக் கல் பிரச்னையால் பாதிக்கப் படுபவர்களில் 90% பேருக்கு கால்சியம் வகைக் கற்கள்தான் காணப்படும். அசைவ உணவில் உள்ள புரதத்தில் (Animal Protein) அமில அளவு அதிகமாக இருக்கும். இதனால் சிறுநீரில் கால்சியம் அதிகமாக வெளியேறி ஒரு கட்டத்தில் அது கற்களாக மாறும்.
ஒருவருக்கு சிறுநீரில் கால்சியம் அதிகம் வெளியேறினால், அவர் அசைவ உணவுகள் எடுத்துக்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருநாளைக்கு 5 கிராம் உப்பு பயன்பாடு, 3 முதல் 3.5 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது, பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகிய ஆரோக்கிய பழக்கங்கள் கல் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும்.
தகவல்: பிரபு காஞ்சி
சிறுநீரக மருத்துவர், சென்னை