Published:Updated:

``அடிக்கடி கோபம் வருகிறது என்றார் 9 வயது சிறுமி!''- கவுன்சலிங் மைய அழைப்புகளும் உடனடி தீர்வுகளும்

Covid-19 கவுன்சலிங் மையம்
Covid-19 கவுன்சலிங் மையம்

இளைஞர், முதியோர், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்து தங்கியிருப்பவர்கள் உட்பட பலர் தினமும் இந்த மையத்தை அழைத்துப் பேசுகிறார்கள். இந்த மையத்தின் சேவை சென்னை மக்களுக்கு மட்டும்தான் என்றாலும், தமிழகத்தின் எல்லாப் பகுதி மக்களும் அழைக்கிறார்கள்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், கொரோனா அறிகுறியுடன் இருந்தவர்களுடன் பழகியவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பலர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த 28 நாள்கள் தனிமையில் அவர்களுக்கு ஏற்படும் உடல்நலம், மனநலம், உளவியல் மற்றும் அத்தியாவசியத் தேவைகளை உறுதிசெய்யவும் நம்பிக்கையளிக்கும் வகையிலும், பெருநகர சென்னை மாநகராட்சியும் லயோலா கல்லூரியும் இணைந்து கவுன்சலிங் கொடுத்துவருகின்றன.

Covid-19 கவுன்சலிங் மையம்
Covid-19 கவுன்சலிங் மையம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை கட்டடத்தின் பின்புறம் உள்ள அம்மா அரங்கத்தில் இயங்குகிறது இதற்கான மையம். அதில் உரிய கல்வித் தகுதி மற்றும் அனுபவங்களுடன் கூடிய தன்னார்வலர்கள் ஏராளமானோர் எந்நேரமும் பொதுமக்களிடம் போனில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிகிறார்கள். மக்களுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க 24 மருத்துவர்களும் சுழன்று வேலை செய்கிறார்கள். அரசு அதிகாரிகள் பலர் அடிக்கடி சென்று இந்த மையத்தின் பணிகளைப் பார்வையிடுகிறார்கள்.

தன்னம்பிக்கை, மருத்துவ ஆலோசனைகள் வழங்குவது மட்டுமன்றி, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கும் உடனுக்குடன் உதவி செய்கிறார்கள். லயோலா கல்லூரி சார்பில் இந்த மையப் பணிகளின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் பேராசிரியர் கிளாட்ஸன் சேவியரிடம் பேசினோம்.

Covid-19 கவுன்சலிங் மையம்
Covid-19 கவுன்சலிங் மையம்

``தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆலோசனை கொடுக்க ஏற்கெனவே இந்த மையம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதில் கடந்த 8 தினங்களுக்கு முன்பு எங்கள் கல்லூரியும் இணைந்து, தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உடல்நலம் மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தும் பணிகளைச் செய்ய ஆரம்பித்தோம். லயோலா கல்லூரியின் சமூகப் பணித்துறையின் சார்பில், சைக்காலஜி படித்த முன்னாள் மாணவர்கள், படித்துக்கொண்டிருக்கும் இன்னாள் மாணவர்கள் என 90 தன்னார்வலர்களைத் தேர்வு செய்து போதிய பயிற்சி அளித்த பின்னர் இந்தப் பணியில் ஈடுபடுத்துகிறோம்.

சென்னையில் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 20,000-க்கும் மேற்பட்டோரில் பலர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள். தற்போது 12,000 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களில் தினமும் சராசரியாக 4,000 பேருக்கு போன் செய்வோம். `தற்போதைய தனிமைக் காலம் எப்படி இருக்கிறது? ஏதாவது சிரமங்கள் இருக்கிறதா? உணவு, மருந்து உள்ளிட்ட தேவைகள் உரிய முறையில் கிடைக்கிறதா? உளவியல் சிக்கல்கள் இருக்கிறதா? மீதமுள்ள தனிமைப்படுத்துதல் காலங்களைச் சிரமமின்றி கழிக்க ஏதேனும் உதவிகள் தேவையா?’ என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்போம். அவர்கள் கூறும் பதில்களைப் பொறுத்து மனநல ஆலோசனைக் கொடுப்போம்.

Covid-19 கவுன்சலிங் மையம்
Covid-19 கவுன்சலிங் மையம்

அவர்களுக்கு ஏற்கெனவே மருத்துவப் பிரச்னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களிடம் பேச வைப்போம். அவர்களில் முதியோர்கள் உட்பட மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களாக இருந்தால், அவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி ஆலோசனைகளைக் கொடுப்போம். தேவைப்பட்டால் அவர்களை நேரில் சென்று சந்தித்து அல்லது அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தும் சிகிச்சையளிக்கப்படுகிறது.

இதுதவிர தனிமைப்படுத்துதலில் இருக்கும் நபர்களுக்கான உணவு, சமையலுக்கான மளிகைப் பொருள்கள், மருந்துகளையும் வழங்குகிறோம். இதற்கான செலவுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. இப்படித் தனிமைப்படுத்துதல் காலம் முடியும்வரை அவர்களுடன் தொடர்பில் இருந்து உதவி செய்வோம்” என்பவர் இந்த ஆலோசனை மையத்துக்கு வரும் பொதுமக்கள் அழைப்புகள் குறித்துப் பேசினார்.

பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர்
பேராசிரியர் கிளாட்ஸன் சேவியர்

``தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நாங்களாகவே போன் செய்து பேசுவது மட்டுமல்லாமல், எங்கள் உதவி மைய எண்ணுக்கு எல்லாத் தரப்பு மக்களிலிருந்தும் தினமும் 300 - 500 அழைப்புகள் வருகின்றன. நேற்று காலை ஒன்பது வயது சிறுமி அழைத்து, `வீட்டுக்குள்ளேயே இருப்பதால் எனக்கு அதிகமான கோபம் வருகிறது. அதனால், என்னை அறியாமல் சில பொருள்களைக் கீழே போட்டு உடைக்கத் தோன்றுகிறது’ என்றார். அவருக்கு, ஓவியம் வரைவது, பெற்றொருடன் விளையாடுவது உட்பட பல்வேறு ஆலோசனைக் கொடுத்து ஊக்கப்படுத்தினோம். `சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் போன் செய்கிறேன்’ என்றார்.

இளைஞர், முதியோர், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்து தங்கியிருப்பவர்கள் உட்பட பலர் தினமும் எங்களுக்கு அழைத்துப் பேசுகிறார்கள். இந்த மையத்தின் சேவை சென்னை மக்களுக்கு மட்டும்தான் என்றாலும், தமிழகத்தின் எல்லாப் பகுதி மக்களும் அழைக்கிறார்கள். போன் வாயிலாகத் தன்னம்பிக்கையுடன் பேசுவதைச் செய்தாலும், அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் அந்தந்த மாவட்ட மையத்திடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம்.

Covid-19 கவுன்சலிங் மையம்
Covid-19 கவுன்சலிங் மையம்

மக்கள் கோபப்பட்டு பேசினாலும் எல்லா அழைப்புகளுக்கும் இன்முகத்துடன் பேசி உரிய உதவிகளைச் செய்து கொடுக்கிறோம். அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் தன்னார்வலர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பணியாற்றுகிறார்கள். இந்த மையத்தில் 24 மணிநேரமும் மருத்துவப் பணியாளர்கள் செயல்படுகிறார்கள். அதிகாரிகள் தினமும் நேரில் ஆய்வுசெய்து போதிய உதவிகளை உடனுக்குடன் செய்கிறார்கள்” என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.

இந்த மையத்தின் மருத்துவக் குழு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மருத்துவர் ப்ரதீப் செல்வராஜிடம் பேசினோம். ``தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களுக்குத் தினமும் போன் செய்து உடல்நலம் எப்படி இருக்கிறது என்பதைத் தொடர்ந்து கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குகிறோம். இவர்களில் படித்தவர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், ஏழை மக்கள் உட்பட எல்லாத் தரப்பினரும் இருக்கின்றனர்.

Covid-19 கவுன்சலிங் மையம்
Covid-19 கவுன்சலிங் மையம்

அவர்களில் சர்க்கரை நோயாளிகள் உட்பட அன்றாடம் மருந்து மாத்திரைகள் சாப்பிடக்கூடியவர்கள் இருந்தால், அவர்களுக்கு மருந்துகள் கிடைப்பதற்கும், அதை எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். இதனால் இந்தச் சூழலில் உரிய தேவைகளுக்கு உதவுவதுடன் அக்கறையுடன் பேசுவதால் மக்களுக்குச் சோர்வோ கவலையோ ஏற்படுவதில்லை.

இந்த கவுன்சலிங் மையத்தைத் தொடர்புகொண்டு பயன்பெற விரும்புவோர் 044 - 46122300 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி

கொரோனா பாதிப்பால் தானும் பிறரும் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு காரணங்களுக்காகவே குறிப்பிட்ட மக்கள் அதிகபட்சம் 28 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்தக் காலம் சீக்கிரமே ஓடிவிடும். அதனால், இந்த நிலையிலுள்ள மக்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த மக்களை யாரும் புறக்கணிக்கவும் கூடாது. அவர்களுக்கு உதவ வேண்டியது நம் எல்லோரின் கடமை. எக்காரணம் கொண்டும் தனிமைப்படுத்தப்பட்டவர்களையும், கொரோனா அறிகுறி உள்ளவர்களையும் புறக்கணிக்கவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது. நாம் எதிர்த்துப் போராட வேண்டியது கொரோனாவைக் கட்டுப்படுத்த மட்டுமே! அதற்காக எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார்.

இந்த கவுன்சலிங் மையத்தைத் தொடர்புகொண்டு பயன்பெற விரும்புவோர் 044 - 46122300 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு