Published:Updated:

14 லிட்டர் தாய்ப்பால்தானம், 100 குழந்தைகள்... உயிர்காக்க உதவிய தாயுள்ளங்கள்!

தாய்ப்பால் தானம்
தாய்ப்பால் தானம்

"தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகள் பற்றி தெரியவந்தபோது, என் குழந்தைகளை நினைத்துப்பார்த்தேன். அப்படித்தானே அந்தக் குழந்தைகளும்..."

"தாய்ப்பாலை Liquid Gold என்பார்கள். அதையும் தாண்டி, குழந்தைக்கான விலைமதிப்பற்ற தூய உணவு அது. அதை நம் குழந்தையைத் தாண்டி, இன்னொரு குழந்தைக்கும் நம்மால் தரமுடிகிறபோது, தாய்மையின் பெருமை இன்னும் கூடிப்போகிறது. அப்படித்தான் இதை நான் செய்துவருகிறேன்'' - உற்சாகத்துடன் பேசுகிறார், மந்தைவெளியைச் சேர்ந்த ப்ரீத்தி. ப்ரீத்திக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. தன் குழந்தைக்குப் பாலூட்டுவதுடன் தாய்ப்பால் தானமும் செய்துவருகிறார்.

`என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை!’ -கொரோனா வார்டில் பணியாற்றும் நர்ஸ் உருக்கம்

சமீபத்தில், சென்னை எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையில் பிறந்த 100 குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு உடனடியாக தாய்ப்பால் தானமாகத் தேவைப்பட்டது. தாய்ப்பால் வங்கியில் தட்டுப்பாடு ஏற்படுகிற சூழல். தன்னார்வலர்கள் குழு, வெளியில் தங்களது தொடர்பிலிருந்த தாய்மார்கள் மூலம் 14 லிட்டர் தாய்ப்பாலை தானமாகச் சேகரித்து, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தனர். குறித்த நேரத்தில் தாய்ப்பால் கிடைத்ததால் குழந்தைகள் நலமுடன் உள்ளனர். இந்த நல்ல முயற்சியை முன்னெடுத்த தன்னார்வலர்களிடம் பேசியபோது, ப்ரீத்தியின் அறிமுகம் கிடைத்தது.

ப்ரெஸ்ட் பம்ப்
ப்ரெஸ்ட் பம்ப்

"இப்போது என் இரண்டாவது குழந்தைக்கு பாலூட்டிவருகிறேன். கடந்த ஆண்டுதான் என் இன்ஸ்டா தோழி மூலமாக, தாய்ப்பால் தானம் பற்றி அறிந்துகொண்டேன். இப்போது நானும் அதில் இணைந்துவிட்டேன்" என்கிற ப்ரீத்தி, தாய்ப்பால் தானமளிக்கும் எண்ணம் தோன்றியதையும், அந்த உணர்வையும் பற்றி பகிர்ந்துகொண்டார். "எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகள் பற்றி தெரியவந்தபோது, என் குழந்தைகளை நினைத்துப்பார்த்தேன். அப்படித்தானே அந்தக் குழந்தைகளும் என்று உணர்ந்த நொடி, தாய்ப்பால் தானத்துக்குத் தயாராகிவிட்டேன். வீட்டிலிருந்தே பால் எடுத்து சேமித்து வைப்பேன். தன்னார்வலர்கள் வந்து பெற்றுச் செல்வார்கள்'' என்றார்.

குழந்தைக்கு வசதியாக தாய்ப்பால் கொடுக்க உதவும் 5 நிலைகள்!  #WorldBreastFeedingWeek

''வழக்கமான சூழ்நிலையில் சரி, கொரோனா லாக்டௌனில் தாய்ப்பால் தானம் எப்படி சாத்தியமாகிறது?'' என்றோம் ப்ரீத்தியிடம்.

''தாய்ப்பாலை பெற்றுச்செல்லும் தன்னார்வலர்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு வந்து பெற்றுச்செல்வார்கள்'' என்றார். ப்ரீத்தியைப் போலவே இன்னும் பல தாய்மார்கள் ஒருங்கிணைப்புக் குழுவினரின்கீழ் தாய்ப்பால் தானம் செய்துவருகின்றனர். நான்குபேர் கொண்ட அந்த ஒருங்கிணைப்புக் குழுவில் ஒருவரும், தாய்ப்பால் ஆலோசகருமான பேபிஸ்ரீயின் அறிமுகமும் கிடைத்தது. "தாய்ப்பால் சுரப்புக்கு எந்த சிறப்பு உணவும் தேவையில்லை. இயல்பாகவே பெண்களுக்கு சுரக்கும். குறிப்பாக, குழந்தையுடனான தாயின் தொடர்பும் மகிழ்வும் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பாலும் அதற்கேற்ப சுரக்கும். தங்கள் குழந்தையின் தேவைக்கும் அதிகமாக தாய்ப்பால் சுரப்பு கொண்டவர்கள், தாய்ப்பால் தானம் தர முன்வரலாம்'' என்றவர்,

பேபிஸ்ரீ, கௌசல்யா, ரம்யா
பேபிஸ்ரீ, கௌசல்யா, ரம்யா

''தாய்ப்பால் தானம் செய்யும்போது, வலியில்லாமல் பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தலாம். இந்த பம்ப்பிங் முறையில் வீட்டிலேயே பால் சேகரித்து வைக்கலாம். வீட்டு ஃபிரிட்ஜில் சேகரித்து 500 மிலி - 1 லிட்டர்வரை கிடைக்கப்பெற்றதும் எங்களை அழைத்தால், நாங்கள் வந்து பெற்றுச்சென்று மருத்துவமனையில் கொடுத்துவிடுவோம். அரசு மருத்துவனைக்கு மட்டுமே நாங்கள் தாய்ப்பால் வழங்கிவருவதால், இந்தப் பால் எக்காரணம் கொண்டும் விற்பனைக்கல்ல. மருத்துவமனையில் பாலை பதப்படுத்தி வைத்துக்கொள்வார்கள். இப்படித்தான் தற்போது 14 லிட்டரை சேகரித்து வந்து கொடுத்தோம்" என்றவரின் வார்த்தைகளில் பூரிப்பு.

தாய்ப்பால் சுரப்புக்குத் தாய்தான் முதல் பொறுப்பு!

தாய்ப்பால் பதப்படுத்துதல் முறை பற்றி தொடர்ந்து பேசினார் பேபிஶ்ரீ. ''தானம் பெறப்படும் தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படாது. ஒருவர் தானம் கொடுக்க முன்வந்தால் அவரது உடல்நிலையைப் பரிசோதிப்போம். ஹெச்ஐவி மற்றும் கல்லீரல் அழற்சி தாக்கப்பட்டவர்கள் தவிர, மற்ற எவரும் தானமளிக்கலாம். குறிப்பாக, இப்போது பரவுகிற கொரோனா வைரஸ் தாய்ப்பாலில் பரவிய சான்றுகள் இதுவரை இல்லை. காரணம், எதிர்ப்புசக்தி நிறைந்தது தாய்ப்பால்" என்றவர், தாய்ப்பாலின்றி அரசு மருத்துவனையில் குழந்தைகள் தவிப்பது குறித்தும், இந்த லாக்டௌனில் தாய்ப்பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவது குறித்தும் வருந்துகிறார்.

Vikatan

"எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள், தாயின் சத்துக்குறைவால் மிகவும் பலவீனமாகவே பிறக்கின்றன. குறிப்பாக, குறைப்பிரசவங்கள் அதிகம். அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. அந்தக் குழந்தைகளின் அம்மாக்களால், உடல்நிலை காரணங்களால் தாய்ப்பால் தர முடியாத நிலையில், அவர்களுக்குத் தாய்ப்பால் தானமாகத் தேவைப்படுகிறது. 5 மில்லி தாய்ப்பால், குழந்தையின் ஒருவேளை உணவு. ஆனால், சென்னையில் 50 சதவிகிதம்தான் இந்த தானம் குறித்த விழிப்புணர்வு உள்ளது. நான் குழந்தை பெற்றபோது தாய்ப்பால் தானம் தர ஆரம்பித்து, தற்போது இந்த ஒருங்கிணைப்புப் பணியிலும் தொடர்கிறேன். தயக்கமின்றி தாய்மார்கள் தாய்ப்பால் தானம் தர முன்வர வேண்டும்" - தவிப்போடு கூறுகிறார், பேபிஸ்ரீ. இவருடன் கௌசல்யா ஜகதீஷ், ரம்யா சங்கரநாராயணன், அசோக் என ஒரு குழுவே இதற்காகப் பணியாற்றிவருகிறது.

மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வதனா
மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வதனா

மகப்பேறு மருத்துவர் விஷ்ணு வதனாவிடம் பேசினோம். "குழந்தை பிறந்தது முதல் தாய்க்கு தினசரி சுரக்கிற தாய்ப்பாலின் அளவு, குழந்தையின் தேவையைவிட அதிகம்தான். எனவே, அடிக்கடி அவற்றை தானம் அளிப்பதனால் தாய்க்கோ, குழந்தைக்கோ தீங்கு ஏதுமில்லை. மாறாக தானம் அளிக்கப்படுகிற தாய்ப்பால், தாயை இழந்த குழந்தைக்கோ, தாய்ப்பால் சுரக்காமலும், வேறு உடல் பிரச்னைகளாலும் பாலூட்ட முடியாத தாயின் குழந்தைக்கோ போய்ச் சேர்கிறது. மேலும், நம் குழந்தைக்குப் பாலூட்டினோம் என்பதையும் தாண்டி இன்னொரு குழந்தைக்கு உயிரூட்டினோம் என்ற மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு தாய்க்கும் கிடைக்கிறது" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு