Published:Updated:

`பதற்றம் வேண்டாம்; ஆனால் முன்னெச்சரிக்கையாக இருங்கள்!’ -தமிழகத்தில் கொரோனா குறித்து விஜயபாஸ்கர்

ஆய்வுப் பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்
ஆய்வுப் பணியில் அமைச்சர் விஜயபாஸ்கர்

அரசு மற்றும் சுகாதாரத்துறை கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப்பதிவில், ``டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், ``பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் முதலில் கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர். அவருக்கு உரிய சிகிச்சை அளித்து அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டோம்.

`இதுக்குமா விஐபி அந்தஸ்தைப் பயன்படுத்துவது?’ - இளைஞரை சாடிய முதல்வர் மம்தா

இரண்டாவதாகப் பாதிக்கப்பட்டவர் டெல்லியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர். அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுதான் அவர் மருத்துவமனைக்கு அனுமதியானார். அவருடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. சற்றுமுன்னர் தான் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நோயாளி நல்ல நிலையில் இருக்கிறார். மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளார். கடந்த சில நாள்களாக இவர் யாருடன் தொடர்பில் இருந்தாரோ அவர்களுடைய விவரங்கள் சேகரிப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறோம். இதன்காரணமாகவே ரயில்நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம்.

கொரோனா
கொரோனா

மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்றுங்கள். அரசு மற்றும் சுகாதாரத்துறை கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொதுமக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர் ரயிலில் வந்துள்ளார். அப்போது அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை. தற்போதுதான் அவருக்கு அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இருப்பினும் அவர் நலமுடன் இருக்கிறார். சிகிச்சையைத் தொடங்கிவிட்டோம். முதல் நோயாளி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அவர் எங்கு இருக்கிறார் என்ற கேள்வியைத் தவிர்த்துவிடுங்கள். அவர் கொஞ்சம் நாள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார். உங்களுக்கு ஊடக தர்மம் இருப்பது போல் எங்களுக்கும் மருத்துவ தர்மம் என்று ஒன்று உள்ளது. அதைச் செய்யவிடுங்கள். வதந்திகளைத் தவிர்த்துவிடுங்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு