கொரோனா வந்ததோ இல்லையோ தினம் தினம் சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்கள் செய்திகள் உலா வரத் தொடங்கிவிட்டன. அப்படி அண்மையில் வந்த ஒரு செய்தி. குஜராத்தில் 'L' வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அது அமெரிக்காவில் பரவியுள்ள வைரஸின் வகை. அதனால்தான் குஜராத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 'S' வகை கொரோனா வைரஸ்தான் பரவுகிறது. அதனால்தான் பாதிப்பு குறைவாகக் காணப்படுகிறது என்பதுதான் அந்தச் செய்தி.

அதென்ன `எல்' வகை `எஸ்' வகை என்று அறிந்துகொள்ள தொற்றுநோய் மருத்துவர் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம்:
வெறும் 103 நோயாளிகளிடம் ஆய்வு நடத்திய சீனா, வைரஸின் வகையை இவ்வாறு வெளியிட்டுள்ளது. வைரஸின் உட்கூறுகளை ஆராயாமல் மொத்தமாக வைரஸ் என்ற நிலையில் வைத்து இந்த வகையை வகுத்துள்ளனர். எல்லாருக்கும் புரியும்படி சொன்னால் `எல்' வகை என்பது புதிய வரவு (Latest) என்று வைத்துக்கொள்ளலாம். `எஸ்' வகை பழையது (Older) என்று புரிந்துகொள்வோம்.
`எல்', `எஸ்' ஆகிய இரண்டு வைரஸ்களுக்கும் சிறிய வித்தியாசம்தான் காணப்படுகிறது. மரபணு ரீதியாக வெறும் 4 சதவிகித வித்தியாசம்தான் உள்ளது. தடுப்பு மருந்து தயாரிப்பதற்குத்தான் இந்த வைரஸின் வகைகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.
ஒருகட்டத்தில் மற்ற நோய்களைப் போலவே இந்த கொரோனா தொற்றுநோயையும் மனித சமுதாயம் எளிதாகக் கடந்து செல்லும்.தொற்றுநோய் மருத்துவர் பாலசுப்ரமணியன்
பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும் நியூயார்க், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் `எல்' வகை வைரஸ் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக இறப்பு விகிதத்தைக் காண்பிக்கும் மாநிலமான குஜராத்தில் `எல்' வகை வைரஸ் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. குஜராத்தில் இறப்பு விகிதம் 4.57 சதவிகிதமாக உள்ளது. அதே போன்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 4.97 சதவிகிதம் உள்ளது. அதனால் இந்த இரண்டு இடங்களில் `எல்' வகை வைரஸ் பரவியிருக்கலாம் என்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 1.2 சதவிகிதம்தான் இறப்பு விகிதம் காண்பிக்கப்படுகிறது. அதனால் இங்கு `எஸ்' வகை பரவியிருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறதே தவிர, தமிழகத்தில் `எஸ்' வகைதான் பரவியிருக்கிறது என்பதை யாரும் இதுவரை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. இந்த வைரஸைப் பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில் வருபவையே (Hypothesis).
முறையான ஆராய்ச்சி செய்து நிரூபித்தால்தான் தெளிவான முடிவுக்கு வர முடியும். தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் 3,600 நோயாளிகளின் பாதிப்பை ஆராய்ந்து இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் முடிவு வெளியானால் இது தொடர்பாக சரியான முடிவுக்கு வர முடியும்" என்றார்.

கொரோனா வைரஸைப் பொறுத்தவரை அது பத்து வகையான மாற்றங்களை (Mutate) அடைந்துள்ளது என்ற ஆய்வு முடிவை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தேசிய உயிரியல் மரபணுவியல் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். 55 நாடுகளைச் சேர்ந்த 3,636 கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ வரிசைகளை ஆய்வுசெய்து இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். அதன்படி, மாற்றமடைந்த A2a எனும் வைரஸ் வகைதான் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகவும் விளக்கமளித்தார் மருத்துவர் பாலசுப்ரமணியன்:
``கொரோனா வைரஸ் என்பது ஆர்.என்.ஏ வைரஸ். இது மனிதனின் உடலிலுள்ள செல்லின் சவ்வைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்கிறது. உள்ளே சென்றதும் செல்லை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தனது ஆர்.என்.ஏவை உற்பத்தி செய்யும்.
இதை ஆர்.என்.ஏ பிரதியெடுத்தல் (RNA Copying) என்றும் சொல்லலாம். அந்தச் செயல்பாடு நடக்கும்போது, சில நேரங்களில் வைரஸின் ஆர்.என்.ஏவை அப்படியே அச்சு அசலாக பிரதியெடுக்க இயலாமல் சில தவறுகள் (Copying Errors) நடக்கும். அதைத்தான் வைரஸ் மாற்றமடைகிறது (Mutation) என்கிறோம்.

அந்த வகையில் முதன்முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய வைரஸ் 'O' என்று வரையறுக்கப்படுகிறது. அதை மூதாதையர் வகை (Ancestral type) என்றும் சொல்கிறார்கள். `ஓ'விலிருந்து மாற்றமடைந்த வைரஸ்களில் இதுவரை பத்து வகைகளைக் கண்டறிந்துள்ளனர். இவற்றில் அனைத்துக்கும் மிகச்சிறிய வித்தியாசங்களே காணப்படும்.
இவற்றில் மிகவும் பொதுவான வகை A2a என்று கண்டறியப்பட்டுள்ளது. இது எளிதில் நுரையீரலைத் தாக்கக்கூடியது. அங்குள்ள செல்களை எளிதாகத் துளைத்துக்கொண்டு உள்ளே சென்று பாதிப்பை ஏற்படுத்திவிடும். பொதுவாக, ஆர்.என்.ஏ வைரஸ்கள் மாற்றம் அடைய அடைய அவற்றின் வீரியம் குறையத் தொடங்கும்.
அப்படிப் பார்த்தால் ஒருகட்டத்தில் மற்ற நோய்களைப் போலவே இந்தக் கொரோனா தொற்றுநோயையும் மனித சமுதாயம் எளிதாதக் கடந்து செல்லும். நோய் சமுதாயத்தில் இருந்தாலும் அதனுடன் வாழ்வதற்குப் பழகிவிடுவோம்" என்றார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மனித சமுதாயம் நிச்சயம் பிழைத்துக்கொள்ளும். ஆனால், கோவிட்-19-க்கு முன்பான உலகமாக நிச்சயமாக அது இருக்காது என்பதுதான் மருத்துவர்களின் கணிப்பாக இருக்கிறது.