Published:Updated:

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மெனோபாஸ்

எந்தப் பெண்ணுக்கும் திடீரென பீரியட்ஸ் நின்றுவிடாது. பீரியட்ஸ் சுழற்சி முறைதவறும். பிறகுதான் நிற்கும்.

பூப்பெய்துவது தொடங்கி, கர்ப்பம், பிரசவம் என பெண்ணின் மாதவிடாய் சார்ந்த அத்தனை நிகழ்வுகளும் கொண்டாட்டங்களாகவே பார்க்கப் படுகின்றன. மாதவிடாய் முற்றுப்பெறும் மெனோ பாஸ் மட்டும் வருத்தமான, வேதனையான நிகழ் வாகப் பார்க்கப்படுவது ஏன்?

பருவ வயது தொடங்கி, பல காலம் உழைத்துக் களைத்த, உதிரம் உகுத்த கர்ப்பப்பைக்கு இயற்கையே தரும் ஓய்வுதான் மெனோபாஸ். மெனோபாஸ் என்பதை பெண்மைக்கான முற்றுப் புள்ளியாகவோ, இயல்புவாழ்க்கையின் இறுதி யாகவோ நினைக்கத் தேவையில்லை. மெனோ பாஸின் ஆரம்ப நாள்களைக் கடப்பதில் பெரும் பான்மை பெண்களுக்கு உடல், மன ரீதியான சிக்கல்களும் சவால்களும் இருப்பது சகஜம்தான். பாசிட்டிவ் அணுகுமுறை, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் என வாழ்வியல் மாற்றங்கள் பழகினாலே மெனோபாஸ் மிரட்சியிலிருந்து மீளலாம். மொத்தத்தில் மெனோபாஸ் என்பது மாதாந்தர வலிகள், வேதனைகளற்ற உங்கள் செகண்டு இன்னிங்ஸுக்கான இனிதான ஆரம்பம் என உணருங்கள்.

மெனோபாஸ் என்பது என்ன, அதை எப்படி உறுதிப்படுத்துவது, உடல், மன மாற்றங்களைக் கையாளும் வழிகள், மெனோபாஸுக்கு முன்பும் பிறகுமான வாழ்க்கை என ஏ டு இஸட் தகவல்கள் பகிர்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

  நித்யா ராமச்சந்திரன்
நித்யா ராமச்சந்திரன்

மெனோபாஸ் என்பது என்ன?

மாதவிலக்கு முற்றுப்பெறும் நிலையே மெனோபாஸ். அதாவது மெனோபாஸுக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு பீரியட்ஸ் வராது.

50 ப்ளஸ் வயதிலிருக்கும் பெண்ணுக்கு பீரியட்ஸ் வந்து அதன் பிறகு ஒரு வருடத்துக்கு மீண்டும் பீரியட்ஸ் வரவில்லை என்றால் அதற்கு மெனோபாஸ் என அர்த்தம். இந்தியாவைப் பொறுத்தவரை மெனோபாஸ் நிகழும் சராசரி வயது 50-51. பெரும்பாலும் இது குடும்பப் பின்னணியைப் பொறுத்தே அமையும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸின் நிலைகள்

எந்தப் பெண்ணுக்கும் திடீரென பீரியட்ஸ் நின்றுவிடாது. பீரியட்ஸ் சுழற்சி முறைதவறும். பிறகுதான் நிற்கும். அப்படி பீரியட்ஸ் முறைதவற ஆரம்பிக்கும்போது அது ‘பெரிமெனோபாஸ்’ எனப்படுகிறது. மெனோபாஸ் வயது 50-51 என எடுத்துக்கொண்டால், பெரிமெனோபாஸ் 47 வயதில் ஆரம்பிக்கும். மெனோபாஸ் அறிகுறிகள் அப்போதே ஆரம்பித்துவிடும். சினைப்பைகளின் செயல்திறன் முற்றிலும் நிற்க வில்லை என்பதால் அவ்வப்போது அதிலிருந்து கருமுட்டை வந்து கொண்டுதான் இருக்கும். அதுவரை கர்ப்பத்துக்கான வாய்ப்புகளும் இருக்கும்.

இதற்கடுத்த நிலைதான் மெனோபாஸ். அதாவது பீரியட்ஸ் வந்து, அதன்பிறகு ஒரு வருடத்துக்கு வரவில்லை என்றால் அதுதான் மெனோபாஸ். வெஜைனா வறட்சி, உடல் சூடாவது, தூக்கமின்மை என மெனோபாஸின் அறிகுறிகள் இன்னும் அதிகரிக்கத் தொடங்கும். இந்த நிலையில் சினைப்பைகள் தம் செயல்திறனை இழக்கும். அதாவது அதன்பிறகு கர்ப்பத்துக்கான வாய்ப்புகள் இருக்காது. இதற்கடுத்த நிலை ‘போஸ்ட் மெனோபாஸ்’. அதாவது, பீரியட்ஸ் நின்ற பிறகான காலகட்டம். ஒரு வருடம் பீரியட்ஸே வராமலிருந்து அதன் பிறகு திடீரென ப்ளீடிங் இருந்தால் அது சாதாரணமானதல்ல என எச்சரிக்கையாக வேண்டும். உடனடியாக மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டும்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

முதல் அறிகுறி

பீரியட்ஸ் சுழற்சி முறை தவறுவது. 47-48 வயதில் திடீரென ப்ளீடிங் அதிகமாவது. நிறைய நாள்களுக்கு நீடிப்பது.

தொடர் அறிகுறிகள்

  • முறைதவறிய பீரியட்ஸ்

  • ஏசி அறையில் இருந்தாலும் வியர்ப்பது, உடல் சூடாவது

  • இரவில் வியர்ப்பது

  • தூக்கமின்மை

  • எரிச்சல், கோபம் என மனநிலையில் மாற்றங்கள்

  • உடல் பருமன்

  • முடி உதிர்வு, முடி மெலிவது

  • மார்பகங்கள் தொய்வடைவது

  • வெஜைனாவில் வறட்சி, தாம்பத்ய உறவில் நாட்டமின்மை அல்லது உறவின்போது வலி.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

ப்ரீமெச்சூர் மெனோபாஸ்

அரிதாகச் சில பெண்களுக்கு 40 வயதிலேயே சினைப்பைகளின் செயல்பாடு நின்றுவிடுகிறது. ஈஸ்ட்ரொஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும். அதனால் அவர்களுக்கு பீரியட்ஸ் வராது. இதற்கு `ப்ரைமரி ஓவேரியன் இன்சஃபிஷியன்சி' (Primary Ovarian Insufficiency) அல்லது `ப்ரீமெச்சூர் மெனோபாஸ்' (Premature Menopause) என்று பெயர்.

பரம்பரைத் தன்மை, ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர், தைராய்டு பாதிப்பு என இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்னையை உறுதிப் படுத்த இரண்டுவகையான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் குறிப்பிட்ட ஹார்மோன் அளவுகள் அதிகமாக இருப்பது தெரிந்தால் பாதிப்பு உறுதியாகும். பாதிப்புள்ளவர்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி கொடுக்க வேண்டும். அதாவது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவானது குறிப்பிட்ட வயதுக்கு முன்பே குறைந்துவிடுகிறது. இதய ஆரோக்கியத்துக்கு ஈஸ்ட்ரோஜென் அவசியம். அதற்காகவே அந்தச் சிகிச்சை. இன்னும் சில பெண்கள் ஏதோ காரணங்களுக்காக சினைப்பைகளை அறுவை சிகிச்சையில் அகற்றியிருப்பார்கள். அவர்களுக்கும் மெனோபாஸுக்கான எல்லா அறிகுறிகளும் வந்துவிடும். பீரியட்ஸும் வராது. அடுத்து, புற்றுநோய்க் கான கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சை மேற்கொள்வோருக்கும் சினைப் பையின் செயல்பாடு இன்மை காரணமாக பீரியட்ஸ் வராது.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

அறிகுறிகள் எத்தனை நாள்கள் நீடிக்கும்?

பெரிமெனோபாஸ் அறிகுறிகள் 4-5 வருடங்கள் இருக்கும். வயதாக, ஆக இந்தப் பிரச்னைகளின் தீவிரம் குறையத் தொடங்கும். அதாவது உடல் அவற்றுக்குப் பழக ஆரம்பித்துவிடும். உடல் சூடாகிற ‘ஹாட் ஃபிளஷஸ்’ பிரச்னை மட்டும் சில பெண்களுக்கு 8-9 வருடங்களுக்கு நீடிக்கலாம்.

மெனோபாஸுக்கான டெஸ்ட்

பெரும்பாலும் அறிகுறிகளை வைத்தே மெனோபாஸ் நெருங்கிவிட்டதை உறுதிசெய்யலாம். ஆனால், சில பெண்களுக்கு 50 வயதைக் கடந்தும் முறை தவறிய பீரியட்ஸ் வந்துகொண்டிருந்தால் அவர்களுக்கு

`எஃப்.எஸ்.ஹெச்' (FSH- Follicle stimulating hormone) மற்றும் `ஈஸ்ட்ரோடயால்' (Estradiol) அளவுகளை அறியும் பிளட் டெஸ்ட்டுகளை மேற்கொள்வோம். அந்தப் பரிசோதனைகளில் எஃப்.எஸ்.ஹெச் அதிகமாக வும், ஈஸ்ட்ரோடயால் மிகக் குறைவாகவும் இருப்பதை வைத்து மெனோபாஸை உறுதி செய்யலாம்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

சிகிச்சைகள் தேவையா?

மெனோபாஸ் என்பது நோயல்ல. எனவே எந்தச் சிகிச்சையிலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. மெனோபாஸின்போது ஏற்படுகிற அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தேவைப்படும். கர்ப்பப்பை உள்ள பெண்களுக்கு வெறும் ஈஸ்ட்ரோஜென் மட்டும் உள்ள மாத்திரைகள் கொடுத்தால் அவர்களுக்குப் புற்று நோய் தாக்கும் அபாயம் இருப்பதால் அவர்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனையும் சேர்த்தே கொடுப்போம். மெனோபாஸ் ஆனதுமே இந்தச் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் அவர்கள் ஓரளவு நிம்மதியாக உணர்வார்கள். இந்த மருந்துகளைக் கொடுப்பதால் மாதந்தோறும் பீரியட்ஸ் வராது. எப்போதாவது ஸ்பாட்டிங் எனப்படும் குறைந்த அளவு ரத்தப்போக்கு மட்டும் இருக்கலாம்.

மெனோபாஸுக்குப் பிறகு தாம்பத்ய உறவு சரியாக இல்லை, வெஜைனா வறட்சி அதிகமிருக்கிறது என்பவர்களுக்கு வெஜைனல் ஈஸ்ட்ரோஜென் கொடுப்போம். இது க்ரீம், மாத்திரை அல்லது ரிங் வடிவங்களில் கிடைக்கும். இதை மருத்துவர் குறிப்பிடும் காலகட்டத்துக்கு மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸில் மனநிலையில் தடுமாற்றங்கள் உள்ள பெண்களுக்கு Selective Serotonin Reuptake Inhibitors (SSRIs) எனும் மாத்திரைகள் கொடுப்போம். திடீரென வியர்த்துக்கொட்டுவது, உடல் சூடாவது போன்றவற்றுக்கு இது உதவும். `ஆஸ்டியோபொரோசிஸ்' எனப்படும் எலும்பு மிருதுவாகும் பாதிப்புள்ளவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும்.

அதென்ன ஹெச்ஆர்டி?

ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி என்பதன் சுருக்கமே `ஹெச்ஆர்டி'. இது மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலம். இந்தியாவில் அந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லை. உடல் சூடாவது, வியர்வை, மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, தாம்பத்ய உறவில் ஈடுபாடின்மை போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

இதில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் இருப்பதால் அரிதாகச் சிலருக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம். ஆனால், ரிஸ்க்கைவிட நன்மைகள் அதிகம் என்பதால் பல பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. வழக்கமாக மிகக் குறைந்த அளவில்தான் இந்தச் சிகிச்சை ஆரம்பிக்கப்படும். போகப் போக, பக்கவிளைவுகளைப் பார்த்து டோஸை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

ஹெச்ஆர்டி என்பது மாத்திரை, ஜெல், க்ரீம், ஸ்கின் பேட்ச்சஸ் எனப் பல வடிவங்களில் கொடுக்கப்படுகிறது. சில வருடங்கள் கொடுத்துவிட்டு உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்ததும் நிறுத்திவிடலாம். எந்த வகை ஹெச்ஆர்டி சிகிச்சை என்றாலும் மார்பகப் புற்றுநோய் அபாயம் இருப்பதால் அடிக்கடி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

மாத்திரைகளாக எடுத்துக்கொள்ளும்போது முதல் மூன்று மாதங்களுக்கு வாந்தி உணர்வு இருக்கலாம். இத்தகைய பக்க விளைவுகளைத் தவிர்க்க நினைப்போர் மாத்திரைகளுக்கு பதிலாக பேட்ச்சஸ், இம்பிளான்ட் வடிவில் இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். பேட்ச்சஸ் என்றால் அதிலுள்ள மருந்து முடிந்ததும் மீண்டும் வேறு பேட்ச் மாற்ற வேண்டும்.

மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சையைக் கொடுக்க முடியாது. ரத்தம் தொடர்பான சில பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் கொடுக்கக் கூடாது. பெரிமெனோபாஸ் நிலையில் உள்ளவர்களுக்கும் கவனமாகவே கொடுக்க வேண்டும். இந்தச் சிகிச்சையை திடீரென நிறுத்த முடியாது. படிப்படியாகவே நிறுத்த வேண்டும். அதை மருத்துவரின் ஆலோசனை யோடு செய்வதுதான் பாதுகாப்பானது.

வாழ்வியல் மாற்றங்கள் உதவும்

மெனோபாஸ் அறிகுறிகளின் தீவிரத்திலிருந்து விடுபட வாழ்வியல் மாற்றங்கள் பெரிய அளவில் உதவும். வாரம் 5 நாள்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் `ஹாட் ஃபிளஷஸ்' எனப்படும் உடல் சூடாவதிலிருந்து விடுதலை கிடைக்கும். தூக்கமும் முறைப்படும். படபடப்பு, எரிச்சலுணர்வு போன்றவை மாறி, மனநிலையில் மாற்றம் தெரியும். எலும்புகள் பலமாகும். ஒரு வாரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, ஒரு வாரம் இடைவெளி விடுவதெல்லாம் சரியல்ல. தொடர்ச்சியாகச் செய்தால்தான் பலன் தெரியும். சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ள பேலன்ஸ்டு டயட் அவசியம். தளர்வான உடைகள் அணிந்து, காற்றோட்டமுள்ள அறைகளில் தூங்க வேண்டும். காபி, டீ அளவையும் காரமான, மசாலா கலந்த உணவுகளை யும் குறைத்துவிடுங்கள். ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். யோகா, தியானம் போன்றவை அதற்கு உதவும்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸும் குடும்ப பின்னணியும்

மெனோபாஸை தீர்மானிப்பதில் குடும்ப பின்னணிக்கு மிக முக்கியப் பங்கிருப்பதாகப் பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. உங்கள் அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு எந்த வயதில் பீரியட்ஸ் நின்றதோ, பெரும்பாலும் உங்களுக்கும் அந்த வயதில்தான் நிற்கும். ஒருவேளை அவர்களுக்கு இளவயதில், 40 ப்ளஸ்ஸிலேயே மெனோபாஸ் வந்திருந்தால் உங்களுக்கும் அப்படி வர வாய்ப்புண்டு. மெனோபாஸுக்கான சராசரி வயது 51, 52 என்று சொன்னாலும் நிறைய பெண்கள் 45-46 வயதிலேயே மெனோபாஸை அடைகிறார்கள். காரணம்... அவர்களது குடும்ப பின்னணி.

கர்ப்பப்பை நீக்கமும் பீரியட்ஸ் முடிவும்

ஏதோ காரணத்துக்காக உங்களுக்கு கர்ப்பப்பை மட்டும் நீக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு பீரியட்ஸ் நின்றுவிடும். ஆனால், ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் சேர்த்து நீக்கியிருந்தால்தான் அது மெனோபாஸாக கணக்கில் கொள்ளப்படும். காரணம் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களை சினைப்பைகள்தான் சுரக்கின்றன. ஆக, கர்ப்பப்பையை மட்டும் நீக்கினாலும் உங்களுடைய சினைப்பைகள், இயற்கையான மெனோபாஸ் வயதை எட்டும்வரை இயங்கிக்கொண்டுதான் இருக்கும். எனவே, 40 ப்ளஸ்ஸில் ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பையை நீக்க வேண்டிய தேவை ஏற்படும்போது பெரும்பாலும் சினைப்பைகளை நீக்காமல் விட்டுவிடுவோம். எலும்புகள், இதயம் போன்றவற்றின் ஆரோக்கியத்தில் சினைப்பைகளுக்கும் பங்கிருப்பதே காரணம். ஒருவேளை சினைப்பையில் கட்டி இருந்தாலோ, குடும்ப பின்னணியில் சினைப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்தாலோ, கர்ப்பப்பையோடு சேர்த்து சினைப்பைகளையும் எடுக்க வேண்டி வந்தால் அந்தப் பெண்ணுக்கு மெனோபாஸ் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சினைப்பைகள் இல்லாததால் பெண் ஹார்மோன் சுரப்பு குறையும். இதை ‘சர்ஜிகல் மெனோபாஸ்’ என்கிறோம். இதனால் எலும்புகளின் அடர்த்தி குறையும். ஃபிராக்ச்சர் ஆகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எலும்புகள் மென்மையாகும் `ஆஸ்டியோபொரோசிஸ்' பாதிப்பு வரலாம். இதயநோய் பாதிக்கலாம். பிறப்புறுப்பு வறட்சி அதிகரிக்கும். தாம்பத்ய உறவில் ஈடுபாடு குறையும்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸ்தானா... எப்படி உறுதிப்படுத்துவது?

50-51 வயதில் பீரியட்ஸ் சுழற்சி மாறுகிறது என வைத்துக்கொள்வோம். அதையடுத்து ஒருவருட காலத்துக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் அதை மெனோபாஸ் என உறுதிப்படுத்தலாம்.

மெனோபாஸுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை சாத்தியமா?

நிச்சயம் சாத்தியம். மெனோபாஸால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு, வியர்த்துக்கொட்டுவது, உடல் சூடாவது போன்ற எல்லா மாற்றங்களையும் உங்கள் உடல் 2-3 வருடங்களில் பழகிக்கொள்ளும். அந்த 2-3 வருடங்களை எதிர்கொள்வதுதான் சற்று சிரமமானது. பிள்ளைகள் படிப்பு, வேலை, திருமணம் என வீட்டைவிட்டுப் பிரிவதால் அந்த வயதுப் பெண்களுக்கு தனிமை உணர்வும் அதிகரிக்கும். இனிமேல் என் வாழ்க்கையில் அர்த்தமே இல்லை... நான் யாருக்கும் உபயோகமற்றவள் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறது. இந்தப் பிரச்னைகளுடன் மெனோபாஸும் சேர்ந்துகொள்ளும்போது கூடுதல் அழுத்தம் சேர்கிறது. உங்களுக்கென ஒரு நட்பு வட்டம், அவர்களுடன் பேசுவது, வெளியே போவது என வாழ்க்கைமுறையை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். இளவயதில் உங்களுக்கே உங்களுக் காகச் செய்ய நினைத்து, செய்ய முடியாமல் போன விஷயங் களைச் செய்ய இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள லாம். தாம்பத்ய உறவில் சிக்கல்கள் இருந்தால் உங்கள் கணவருடன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டு.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

குடும்பத்தாரின் ஆதரவு

வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகளுக்கும் பீரியட்ஸ் என்றால் என்ன என்று சொல்லித் தர வேண்டும். பீரியட்ஸின்போது ஒரு பெண் எப்படியெல்லாம் பிரச்னை களை எதிர்கொள்கிறாள் என்பது இந்தத் தலைமுறை ஆண் பிள்ளைகளுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. தெரியாத பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் பீரியட்ஸ் நிற்கும்போது அவர்களின் அம்மாவோ, வீட்டிலுள்ள பெரிய பெண்களோ என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என்பதும் அவர்களுக்குப் புரியும். இதை நாம் சொல்லாமல் அவர் களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. பெண்தான் அந்தக் குடும்பத்தின் தூண், பலம் எல்லாம். அவளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அந்தக் குடும்பத்தாரின் சப்போர்ட் நிச்சயம் தேவை. குறிப்பாக கணவரின் ஆதரவு. அந்த ஆதரவோடு, அந்த நேரத்தில் பெண்ணின் தேவை என்ன எனப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்தாலே அந்தப் பெண் தைரியமாக உணர்வாள்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு
svetikd

உளவியல்ரீதியாக எப்படித் தயாராவது?

மெனோபாஸ் என்பது ஓர் அதிர்ச்சியான அனுபவமாக அமைந்துவிடக் கூடாது. அதாவது அது வருவதற்கு முன்பே அதைப் பற்றிய விஷயங்களில் தெளிவுபெறுங்கள். அறிகுறிகளை உணர ஆரம்பித்ததுமே மருத்துவரை சந்தித்து அடிப்படையான சில டெஸ்ட்டுகளை எடுத்துப் பாருங்கள். கொலஸ்ட்ரால் அளவை சரி பாருங்கள். உங்கள் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையைத் தக்கவைக்கப் பாருங்கள். மெனோபாஸ் வருவதற்கு முன்பே எடையைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். பிறகு அது சாத்தியமாகாமல் போகலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு மாறுங்கள். எலும்புகள் பலவீனமாக இருப்பது தெரிந்தால் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகள் எடுத்துக்கொள்ளலாம். புகை அல்லது மதுப் பழக்கங்கள் இருந்தால் படிப்படியாகக் குறைத்துவிடுங்கள். ஸ்ட்ரெஸ் இருந்தால் அதை எப்படியாவது குறைத்தே ஆக வேண்டும். உங்கள் தோழிகளுடன் ஸும்பா, வாக்கிங் போன்ற குழு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் ஸ்ட்ரெஸ் அளவைக் குறைக்கலாம்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

முறையற்ற மாதவிலக்கு சுழற்சியும் மெனோபாஸும்

முறையற்ற மாதவிலக்கு தொடங்கிதான் மெனோபாஸ் ஆகும். இது 45 வயதிலிருந்து தொடங்கலாம். 2-3 மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வரலாம். வந்தாலும் அளவுக்கதிமான ரத்தப்போக்கு இருக்கலாம். ஹார்மோன் அளவுகளைப் பரிசோதித்து மெனோபாஸை நெருங்கிவிட்டார்களா என்று தெரிந்துகொண்டு சிகிச்சைக்குத் தயாராகலாம். மாதவிலக்கு சுழற்சி முறைதவறி வந்து, ஒரு கட்டத்தில் நின்றுபோய், ஒரு வருடத்துக்கு பீரியட்ஸ் வராது. அதை மெனோபாஸ் என உறுதிப்படுத்தலாம். முறையற்ற மாதவிலக்கு சுழற்சியை சமாளிக்க, அதாவது புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் அளவு குறைவதை ஈடுகட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். வாய்வழி மாத்திரைகளாக, கர்ப்பப்பையினுள் வைக்கும் கருவியாக... இப்படி நிறைய உள்ளன. மருத்துவர் உங்களுக்கு எது தேவை என முடிவுசெய்து பரிந்துரைப்பார்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸும் உடற்பயிற்சிகளும்

மெனோபாஸ் வயதை நெருங்கும்போது இயல்பாகவே பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும். ‘பேசல் மெட்டபாலிக் ரேட்’ எனப்படும் (BMR- Basal Metabolic Rate) அதாவது கலோரிகளை எரிக்கும் ஆற்றல் வயதாக, ஆக குறையத் தொடங்கும். மெனோபாஸை நெருங்கும்போது பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் அதிக பருமன் சேரும். தசைகளின் அடர்த்தி குறைந்து, கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இந்த வயதில் எடையைக் குறைப்பது பெரும்பாலும் சிரமமாக இருக்கும். ஆனாலும் ஏதோ ஓர் உடற்பயிற்சியை அவர்கள் பின்பற்றியே ஆக வேண்டும். வாக்கிங், டிரெட்மில் உபயோகிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால் தொடர்ந்து செய்யவும். வாரத்துக்கு 5 நாள்களாவது செய்ய வேண்டும். யோகா செய்வதன் மூலம் உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். உடலுக்கு இயக்கம் கொடுத்துக்கொண்டே இருங்கள். 2 மணி நேரத்துக்கு மேல் ஓரிடத்தில் உட்கார்ந்திருக்காமல் நடந்துகொண்டே இருங்கள். 50 வயதிலேயே பல பெண்கள் தரையில் சம்மணம் போட்டு உட்கார சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதனால்தான் அவர்களுக்கு மூட்டுவலி வருகிறது. ‘எனக்கு மூட்டுவலி வந்ததால் தான் என்னால் தரையில் உட்கார முடியவில்லை’ என்று சொல்வார்கள். அது தவறு. டைனிங் டேபிள் கலாசாரம் வந்த பிறகு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் மாறிவிட்டது. அதைத் தவிர்த்து தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடுங்கள். டைனிங் டேபிளில்தான் சாப்பிடுவேன் என்றாலும் அந்த இருக்கையில் சம்மணமிட்டு உட்காரலாம். அந்தப் பழக்கம் உங்களுக்கு மூட்டு வலி வருவதை நிச்சயம் தவிர்க்கும், தள்ளிப்போடும்.

சாதமா... சப்பாத்தியா?

வளர்சிதை மாற்றம் குறையத் தொடங்குவதால் டயட் விஷயத்தில் கூடுதல் அக்கறை தேவை. நிறைய பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சர்க்கரை சேர்த்த உணவுகளையும் தவிருங்கள். நெய், முந்திரி, பாதாம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டாம். சாதம் சாப்பிட்டால் எடை கூடும், சப்பாத்திதான் சிறந்தது என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. தென்னிந்தியர் களின் உடல்வாகு அரிசி சாதத்துக்குப் பழகியது. அதைத் தவிர்க்க வேண்டியதில்லை. அதேசமயம், அரிசியை அதிகமாக சேர்த்துக் கொள்ளாமல், எளிதில் செரிக்கக்கூடிய நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளைக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

மெனோபாட் தெரியுமா?

நடுத்தர வயதில் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் சதை போடும். தொப்பை பெரிதாகும். இதையே ‘மெனோபாட்' (Meno-pot) அல்லது `மெனோபட்ஜ்’ (Meno-pudge) என்கிறோம். உங்களை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ளுங்கள். நார்ச் சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள். உடற் பயிற்சியைத் தவறவிடாதீர்கள். இந்தப் பிரச்னையிலிருந்து உங்களை மீட்க அது மிக முக்கியம். களைப்பாக இருக்கிறது, உடம்புக்கு முடியவில்லை என ஏதாவது சாக்கு சொல்லாமல் உங்களால் முடிந்த ஏதோ ஓர் உடற்பயிற்சியோ, யோகாவோ, சைக்கிளிங்கோ செய்யலாம்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

தூக்கத்தை பாதிக்குமா மெனோபாஸ்?

மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண் களுக்கு தூக்கம் பாதிப்பது இயல்பு. அதாவது இரவு 2-3 மணிக்கெல்லாம் விழித்துக் கொள்வார்கள். அதன்பிறகு அவர்களால் தூங்க முடியாது. ஹார் மோன் மாற்றங்கள்தாம் இதற்கும் காரணம். இதற்கு ஹெச்ஆர்டி எனப்படும் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி உதவும். ஆனால், இது நிரந்தர தீர்வில்லை. தவறாமல் உடற்பயிற்சி செய்கிற பெண்களுக்கும் நாள் முழுக்க உடலை வருத்தி வேலை செய்தவர் களுக்கும் உடல் களைப்பாகி இரவில் நல்ல உறக்கம் வரும்.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

மெனோபாஸுக்குப் பிறகு இல்லற வாழ்க்கை

மெனோபாஸுக்குப் பிறகு ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டீரான் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு குறைந்துவிடும். இந்த இரண்டு ஹார்மோன்களுமே பாலியல் தூண்டலுக்கு அவசியமானவை. அதாவது, பாலியல் ஆர்வத்துக்கு அவசியமானவை. இதன் விளைவாக வெஜைனாவில் ஏற்படும் வறட்சியின் காரணமாக தாம்பத்ய உறவு வலி மிகுந்ததாக மாறிவிடும். அதனால் செக்ஸ் உறவையே தவிர்க்க ஆரம்பித்துவிடுவார்கள். வெஜைனல் லூப்ரிகன்ட்ஸ் என்ற பெயரில் மருத்துவரின் பரிந்துரை தேவைப்படாமலேயே மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்னையிலிருந்து வெளியே வரலாம். இந்த விஷயத்தில் கணவரின் சப்போர்ட் மிக முக்கியம். அது இல்லாவிட்டால் இதுவே மிகப்பெரிய ஸ்ட்ரெஸ்ஸாக மாறிவிடும். எனவே மருத்துவரை அணுகி இந்த விஷயத்துக்கு ஆலோசனை பெறுவது சிறந்தது.

*****

உலக அளவில் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 50-51

இதற்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 'பெரிமெனோபாஸ்' அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

மேற்கத்திய நாடுகளில் `ஹெச்ஆர்டி' எனப்படும் ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி ரொம்பவே பிரபலம். இந்தியாவில் அது பிரபலமாகவில்லை. மற்ற நாட்டுப் பெண்களைவிட இந்திய பெண்கள் மெனோபாஸ் அறிகுறிகளையும் அதனால் ஏற்படும் உடல் உபாதைகளையும் சகித்துக்கொள்கிறார்கள் என்று சொல்லப்படுவது தவறு. மெனோபாஸ் விஷயத்துக்கு இந்தியப் பெண்கள் அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்பதுதான் உண்மை.

மெனோபாஸ் - உணவு, உறவு, உணர்வு, உறக்கம் - கவலையின்றி கடக்க கம்ப்ளீட் கைடு

கருத்தடை முறைகளைப் பின்பற்றுவதற்கும் மெனோபாஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேபோல கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களுக்கு தமக்கு சீக்கிரமே மெனோபாஸ் வந்துவிடுமோ என்ற பயம் இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், அது தேவையற்ற பயம். கருத்தடை ஆபரேஷனுக்கும் மெனோபாஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.