Published:Updated:

கொரோனா: தப்பிக்குமா தாராவி... தமிழர்கள் நிலை என்னவாகும்? - எச்சரிக்கையில் மும்பை மாநகராட்சி!

தாராவி
தாராவி

மெக்ஸிகோவின் நெஸா சால்கோ இட்சா மற்றும் கராச்சியின் ஓரங்கி குடிசைப் பகுதிகளுக்குப் பிறகு தாராவிதான் உலகிலேயே மிகப் பெரிய குடிசைப்பகுதி ஆகும். ஒரு சதுர மைல் தொலைவுக்குள் இங்கு 2,70,000 மக்கள் இங்கே வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம் மும்பைதான். இங்கு, 278 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 19 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 33,303 மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில், மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம் மும்பை என்றால், இந்த நகரின் மத்தியில் அமைந்திருக்கும் தாராவி, மும்பையிலேயே அதிக நெருக்கடி மிகுந்த... நெருக்கமான குடிசைகள் நிறைந்த பகுதி. நாயகன், காலா, ஸ்லம்டாக் மில்லியனர், கல்லிபாய் என்று தாராவியைக் காட்சிப்படுத்தியிருக்கும் திரைப்படங்கள் ஏராளம். தாராவியில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இவர்கள் மும்பை சென்று செட்டிலாகி விட்டனர். மும்பையில் மட்டுங்கா, சயான், மாஹிம், பந்த்ரா பகுதிகளுக்கு மத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் தாராவி அமைந்துள்ளது. இந்த 500 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். உலகிலேயே அதிக கல்வியறிவு பெற்ற `ஸ்லம்’ பகுதியாக தாராவி உள்ளது.

தாராவியில் நெருக்கடியாக உள்ள குடிசைகள்
தாராவியில் நெருக்கடியாக உள்ள குடிசைகள்

இங்கு, கிட்டத்தட்ட 69 சதவிகித மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். பிளாஸ்டிக் ரீசைக்ளிங், லெதர், டெக்ஸ்டைல் உள்ளிட்டவை தாராவியின் முக்கிய பிசினஸ். கைத் தொழில் போலவே, இந்தத் தொழில்கள் இங்கே நடைபெறுகின்றன. 1,000 வகையான தொழில்கள் இங்கே 15,000 ஒற்றை அறைகளில் நடக்கின்றன. மெக்ஸிகோவின் நெஸா சால்கோ இட்சா மற்றும் கராச்சியின் ஓரங்கி குடிசைப் பகுதிகளுக்குப் பிறகு தாராவிதான் உலகிலேயே மிகப் பெரிய ஸ்லம் ஆகும். ஒரு சதுர மைல் தொலைவுக்குள் இங்கு 2,70,000 மக்கள் இங்கே வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், எல்லாவிதமான தொற்று நோய்களையும் தாராவி பார்த்துள்ளது. பிளேக் நோயால் இங்கே ஏராளமான மக்கள் இறந்து போயிருக்கிறார்கள். காலரா, டைஃபாய்ட், போலியோ போன்ற நோய்களும் தாராவியைப் பெரிதும் பாதித்துள்ளன. 1986-ம் ஆண்டு காலரா தாக்கியபோது தாராவியில் ஏராளமான குழந்தைகள் பரிதாபமாக இறந்து போனார்கள். இப்போது, கொரோனா வைரஸ் நோயும் தாராவி மக்களை மிரட்டி வருகிறது.

மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுமே, அந்த மாநில அரசு தாராவியை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வந்தது. ஏனென்றால், இங்கே கொரோனா பரவினால் கட்டுப்படுத்துவது கடினம் என்பதை அந்த மாநில அரசு உணர்ந்திருந்தது. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தாராவியில் கொரோனா வைரஸ் முதல் உயிரைப் பலி வாங்கியது. 55 வயதான அந்த நபர் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மும்பை மாநகராட்சி
மும்பை மாநகராட்சி

இறந்த நபருக்கு எந்த டிராவல் ஹிஸ்ட்ரியும் இல்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் காரணமாக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை கொரோனா தாக்கியது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாள்களில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, தாராவியில் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கும் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட டாக்டரால் சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்பதால் அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்புக்குள்ளானவரின் வீட்டின் அக்கம்பக்கத்தினரும் தனிமைப்படுத்தப்படுள்ளனர். கொரோனா விஷயத்தில், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனினும், மக்களிடத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒரே அறையில் 8 முதல் 10 நபர்கள் வரை தாராவியில் வசிக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த என்ன வழி என்று மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தலையைப் பிய்த்துக்கொண்டுள்ளனர்.

தமிழகமே உற்றுநோக்கும் இந்த பீலா ராஜேஷ் யார்?

மும்பை , சயான் - கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ-வும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான கேப்டன் தமிழ்செல்வனிடத்தில் தாராவி பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, ``எங்களால் முடிந்த வரை குடிசைப் பகுதி மக்களிடத்தில் கொரோனா அச்சம் குறித்து எடுத்துரைக்கிறோம். தேவையான வசதிகளையும் செய்து கொடுக்கிறோம். தமிழகத்திலிருந்து மும்பை வந்து தவிப்பவர்களுக்கும் உதவி செய்து வருகிறோம். ஆனால், இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்புதான் முக்கியம். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றால், முன்பு போலவே வெளியே வருகின்றனர், நடமாடுகின்றனர். போலீஸார் சொன்னால் கேட்பதுமில்லை. பொதுமக்கள் கூடுவதைத் தடுப்பதுதான் எங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது'' என்கிறார் வருத்தத்துடன்.

தாராவியில் மட்டுமல்ல, பொதுக்கழிப்பறைகள் எங்கெல்லாம் உள்ளனவோ அதன் வழியாக கொரோனா பரவும் ரிஸ்க் அதிகம்
டாக்டர். ஜி.ஆர். ரவீந்திரநாத்

கொரோனா பொதுக்கழிப்பறை வழியாகவும் பரவுவதாக சொல்லப்படுகிறது. தாராவியில் லட்சக்கணக்கான மக்கள் பொதுக்கழிப்பறையையே பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வேளை, தாராவியில் கொரோனா பரவினால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். இது குறித்து மருத்துவ நிபுணர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, ``கொரோனா வைரஸ் மலம் வழியாகவும் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. பொதுக்கழிப்பறையில் பலரும் வந்து போவதால். பாத்ரூம் பைப் ஹேண்டில்கள், ஜக் போன்றவற்றில் கொரோனா ஒட்டிக் கொள்ளும். அதனால், பொதுக்கழிப்பறைகளுக்குச் செல்வதற்கு முன்பும் பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக சோப்பு போட்டு கையை நன்றாக கழுவ வேண்டும். கழிவறைகளை அடிக்கடி ப்ளீச்சிங் பவுடர் பயன்படுத்தி கழுவ வேண்டும். தாராவி போன்ற ஸ்லம் பகுதியில் கொரோனா வைரஸ், கழிவறைகள் வழியாக பரவும் வாய்ப்பு அதிகம். தாராவி மட்டுமல்ல சென்னையில் உள்ள குடிசைப் பகுதிகளில் உள்ள கழிவறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மக்களிடத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு