Published:Updated:

`குடும்ப உறுப்பினர்களால் அதிகம் பரவிய கொரோனா!' - அதிர்ச்சி கொடுத்த ஆய்வு

 Corona
Corona

ஆராய்ச்சியின் முடிவில் பத்தில் ஒரு நபருக்கு குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

மக்களிடம் கொரோனா வைரஸ் பாதிப்பானது வெளித்தொடர்புகளைவிட வீட்டிலிருக்கும் நபர்களிடமிருந்தே அதிகமாகப் பரவுகிறது என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

தென்கொரியாவில் உள்ள தொற்று நோயியல் நிபுணர்கள் ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியானது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) சார்பில் ஜூலை 16 அன்று வெளியிடப்பட்டது.

corona
corona

இந்த ஆராய்ச்சி கொரோனா தொற்று பாதித்த 5,706 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 59,000-க்கும் மேற்பட்ட மக்களிடமும் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்தத் தகவல்கள் எல்லாம் ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை திரட்டப்பட்டன. அப்போதுதான் தென் கொரியாவில் கொரோனா வைரஸ் உச்சத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியின் முடிவில் 100-ல் 2 நபர்கள் மட்டுமே வெளித்தொடர்பிலிருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. அதேநேரம் பத்தில் ஒரு நபருக்கு குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிலும் வீட்டில் முதன்முதலாகக் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் டீன் ஏஜ் வயதினராகவோ, 60-லிருந்து 70 வயதினராகவோ இருக்கும்பட்சத்தில் நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்று... இரண்டாவது முறை ஏற்பட வாய்ப்புள்ளதா?

இதுகுறித்து கொரியன் நோய்த்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் ஜியாங்க் யூன் க்யோங்க் கூறுகையில், 'இதற்கு முக்கியக் காரணம், இந்த வயதுப் பிரிவுகளில் இருப்பவர்களுக்குத்தான் பிற குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பும் உதவியும் அவசியம்' என்றார். குழந்தைகள் பெரியவர்களைவிட அதிக அளவில் நோய்த்தொற்று அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால் இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து ஹாலிம் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் சோ யெங்க் ஜூன் கூறுகையில், 'கொரோனா தொற்று பரவுவதில் வெவ்வேறு வயதுப் பிரிவினருக்கு இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், குழந்தைகள் குறைந்த அளவிலேயே நோய்த்தொற்றை பரப்பக்கூடும் என்றாலும் இதை உறுதிப்படுத்த எங்களிடம் போதிய தகவல்கள் இல்லை" என்றார்.

Corona Tests
Corona Tests
Pixabay

இந்தியாவிலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள், தாங்கள் வெளி ஆட்களுடன் தொடர்பில் இல்லை என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. என்றாலும், கொரோனா பாதிப்பு இந்தியாவில் மீண்டும் உச்சத்திலிருக்கும் நேரத்தில் இந்த ஆய்வு முடிவை அப்படியே நம் நாட்டுடன் பொருத்திப் பார்க்கவும் முடியாது.

அடுத்த கட்டுரைக்கு