Published:Updated:

``எங்கள் நாட்டில் கொரோனா இல்லை" - அடித்துச் சொல்லும் வடகொரியா; சந்தேகம் கிளப்பும் உலக நாடுகள்!

கொரோனா
கொரோனா

`எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை, வைரஸால் யாரும் பாதிப்படையவில்லை’ எனத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் கூறிவருகிறது வடகொரியா.

கொரோனா நோய்த் தொற்று இல்லாத நாடே இல்லை எனும் அளவுக்கு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. நோயைக் கட்டுப்படுத்துதல், தடுப்பூசிகள் என உலமே பரபரத்துவரும் நிலையில், ``எங்கள் நாட்டில் கொரோனா இல்லை” என்று கூலாக இருக்கிறது ஒரு நாடு!

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

வட கொரியா: தூண்டிலில் சிக்காத திமிங்கலம்!

கொரிய தீபகற்பத்தின் கம்யூனிச நாடு வடகொரியா. இங்கு கிம் ஜாங் உன் தலைமையில் அதிபர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்து சில ஆண்டுகளில், மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடுமோ எனும் அளவுக்கு உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்ட வட கொரியா, தடையை மீறி அணு ஆயுத சோதனைகள் நடத்தி அமெரிக்க வல்லரசுக்குச் சவால் விடுத்தது. பின்னர், காலம் கனியவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான கிம்மின் சந்திப்பால் நிலைமை சற்றே தணிந்தது. அவ்வப்போது தனது செயல்களால் உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துவந்த வடகொரியா, கொரோனா தொற்றின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் திரைமறைவு வாழ்க்கையை நடத்திவருகிறது.

அதன் அமைதியைக் கண்டு அவ்வப்போது அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டார் என வதந்திகள் கிளம்புவதும், அதை முறியடித்து கிம் தலைகாட்டுவதும் உண்டு.

இந்தநிலையில், கடந்த ஓராண்டாக, `எங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை. வைரஸால் யாரும் பாதிப்படையவில்லை’ எனத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பிடம் கூறிவருகிறது வட கொரியா.

கொரோனா ஆரம்பகால ஆட்டத்தில் வட கொரியா:

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே மிகத் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டது வட கொரியா. சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான தனது எல்லைகளை மூடியது, அரசுமுறைப் பயணங்களுக்குக் கடும் கட்டுப்பாடு விதித்தது, வெளிநாடுகளிலிருந்து வட கொரியா திரும்பிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தனது நாட்டு மக்களை தனிமைப்படுத்தி கண்காணித்தது. இவற்றையெல்லாம் உற்றுநோக்கும்போது வடகொரியா சொல்வதில் உண்மை இருப்பது போன்று தோன்றினாலும் இல்லை என மறுக்கிறார் எட்வின்.

வட கொரியா
வட கொரியா

``டேட்டா இல்லை... அதனால் கொரோனா இல்லை’’ :

உலக சுகாதார அமைப்பின் வட கொரியாவுக்கான பிரதிநிதியாக இருக்கும் எட்வின் சல்வடார் (Edwin Salvador), `தி அசோசியேட் பிரஸ்' (The Associated Press) செய்தி நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ``வட கொரியாவில் 2020-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி 23,121 பேரை தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின் தொற்று இல்லை என்று உறுதியானதும் அரசால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் 2020, மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதிவரை பரிசோதனை செய்யப்பட்ட 732 பேருக்கான சோதனை முடிவுகளை அரசு வெளியிடவில்லை” என்றார். மேலும் ``இதுவரையில் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், எத்தனை பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது போன்ற எந்தத் தகவலையும் எங்களிடம் (உலக சுகாதார அமைப்பிடம்) அரசு கூற மறுக்கிறது” என்று அதில் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் என்ன நடக்கிறது வட கொரியாவில்?

உலகின் மிகப்பெரிய ராணுவத்தில் ஒன்றான கொரிய ராணுவம் கிட்டத்தட்ட பத்து லட்சம் ராணுவ வீரர்களைக்கொண்டிருக்கிறது. இருப்பினும் ``முறையான இருப்பிட வசதிகளோ, சத்தான உணவுப்பழக்க வழக்கங்களோ இல்லாமல் கொரிய ராணுவ வீரர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள். இது போன்று நோய் எதிர்ப்புசக்தி திறன் குறைந்த, எல்லையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருந்தால் அது வட கொரியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். எனவே, வடகொரியா தனது பலவீனத்தை மறைப்பதற்காகவே கொரோனா பரவல் இல்லை என்று கூறுகிறது" என வட கொரிய ராணுவத்திலிருந்து வெளியேறிய ராணுவ வீரர் ஜுங் ஹானேயில், VAO எனும் பத்திரிகைக்கு கொரோனா பரவிய ஆரம்பகாலத்திலே தனது சந்தேகத்தைப் பதிவுசெய்திருந்தார்.

வட கொரியா: கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்களைத் திருட முயன்றதா கிம் ஜாங் உன் தேசம்?!

மேலும், கொரோனா இல்லை என்று சொல்லும் வட கொரியா கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் 19 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஐ.நா-வின் கொரோனா நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் பெற்றிருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக, வருகிற ஜூலை 23-ம் தேதி ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொள்ளப்போவதில்லை என நேற்று தெரிவித்திருக்கிறது வட கொரியா.

போதிய சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத வட கொரியாவில் கொரோனா இல்லை என்று சொல்வதை பெரும்பாலான உலக நாடுகள் நம்பத் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.

அடுத்த கட்டுரைக்கு