Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: அதிகரிக்கும் கொரோனா... அமலுக்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!

முன்னெச்சரிக்கையுடன் முகக் கவசம்
முன்னெச்சரிக்கையுடன் முகக் கவசம்

மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்திருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் கையில் சீல் வைக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில நாள்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மும்பையில் புறநகர் ரயில்களில் அனைவரும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பிறகு படிப்படியாக கொரோனா தாக்கம் அதிகரித்துவருகிறது. பொதுமக்களும் முகக் கவசம் அணியாமல் விதிகளைச் சரியாகப் பின்பற்றாமல் இருந்தனர். பொதுமக்கள் சரியாக விதிகளைப் பின்பற்றாவிடில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவும் மேயரும் எச்சரித்திருந்தனர். 75 நாள்களுக்குப் பிறகு நேற்று மகாராஷ்டிராவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,427-ஆக அதிகரித்திருக்கிறது. மும்பையில் மட்டும் 736 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து மும்பையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. திருமணம் மற்றும் கோயில் விழாக்களில் 50 பேர் மட்டுமே கூட வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

ஜெயந்த் பாட்டீல்
ஜெயந்த் பாட்டீல்

வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு கையில் சீல் வைக்கப்படும் என்றும், திருமண நிகழ்ச்சிகள், ஹால்கள், கிளப்கள், ரெஸ்டாரன்ட்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா விதிகள் மீறப்படுகின்றனவா என்பதைப் பார்க்க திடீர் ரெய்டு நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் தெரிவித்தார்.

புறநகர் ரயில்களில் பயணிகள் முகக் கவசம் அணியாமல் பயணம் செய்கின்றனர். அவர்களைப் பிடிக்க 300 பீட் மார்ஷல்களை நியமிக்க மும்பை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. முகக் கவசம் அணியாமல் இருக்கும் 25,000 பேரை தினமும் பிடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடியிருப்புக் கட்டடத்தில் ஐந்து பேருக்கு கொரோனா இருந்தால், அந்தக் கட்டடம் சீல் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மேயர் கிஷோரி பட்நாகர் கூறுகையில், ``புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் முகக் கவசம் அணிவதில்லை, முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவில்லையெனில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்” என்று எச்சரித்தார்.

கிஷோரியும் புறநகரில் பயணம் செய்து, பயணிகள் முகக் கவசம் அணிந்து பயணம் செய்கின்றனரா என்பதையும் ஆய்வு செய்தார். மும்பையில் செம்பூர் பகுதியில் புதிதாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதோடு கொரோனா சோதனையையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் யவத்மால், அகோலா, வார்தா, அமராவதி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அங்கும் பொதுமுடக்கத்தின்போது இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அமராவதி உட்பட சில மாவட்டங்களிலும் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அமராவதி, சதாரா, யவத்மால் ஆகிய மாவட்டங்களில் தலா நான்கு மாதிரிகளும், புனேயில் 12 மாதிரிகளும் உருமாறிய கொரோனா சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. அமராவதி மற்றும் யவத்மால் மாவட்டங்களில் உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அகோலா மாவட்டத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிராதான் இதுவரை இருந்துவருவது குறிப்பிடத்தக்கது

மும்பை
மும்பை

இதற்கிடையே மாநில நீர்வளத்துறை அமைச்சரும், மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெயந்த் பாட்டிலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த மாதம் 28-ம் தேதியிலிருந்து கட்சியை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் பரிவார் சம்வாத் யாத்திரையை அவர் மேற்கொண்டிருக்கிறார். அவருக்கு கொரோனா இருப்பதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று உறுதிப்படுத்தியதோடு, சமீபத்தில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தனது சுற்றுப்பயணத்தையும் தள்ளிவைத்திருக்கிறார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரும் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துவருகிறா. முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு