புதியவகை கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில், சீனா உட்பட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த புதிய திரிபு, சீனாவில் இருந்து உலக நாடுகளுக்குப் பரவி வருகிறது. பி.எஃப்.7 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய வகை கொரோனா பரவலைத் தடுக்க, நம் நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனா உள்பட ஆறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர், தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகள், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வழங்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் பாதிப்பு இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழை, ஏர் சுவிதா இணையதளத்தில், புறப்படுவதற்கு முன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று இதற்கான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற உறுதிமொழி படிவத்தையும் பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும். புத்தாண்டான ஜனவரி 1-ம் தேதி முதலே இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்ட நிலையில், இது தொடர்பான சுற்றறிக்கையை, அனைத்து வர்த்தக விமான நிறுவனங்கள், விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.