Published:Updated:

`45 சதவிகிதமாக அதிகரித்த கொரோனா தொற்று!' -டெல்டா நிலவரத்தால் கலங்கும் சுகாதாரத்துறை

டெல்டா
டெல்டா

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்களைக் கண்டறிந்து, மேலும் அதிகரிக்காமல் தடுக்க தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 50,000-ஐ கடந்துள்ளது. இதுவரை 500-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாகப் பரவி வருவதால், இந்த நான்கு மாவட்டங்களிலும் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், ஓரளவுக்குக் கொரோனா அச்சமின்றி இருந்து வந்தார்கள்.

தஞ்சை ரயில் நிலையம்
தஞ்சை ரயில் நிலையம்

ஆனால், கடந்த ஒரு வாரமாக, டெல்டா மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது இப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை, தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை133 பேர். கடந்த ஒரு வாரத்தில் இது கிடுகிவென உயர்ந்து 183 பேர் ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 90 பேர் ஆக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 178 ஆகவும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜூன் 12-க்கு முன்பு வரை 98 நபர்களாக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 181 நபர்களாகவும் உயர்ந்துள்ளது. ஒரே வாரத்தில் 45 சதவிகிதம் கொரோனா அதிகரிக்கக் காரணம்தான் என்ன ?

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா! -அதிர்ச்சி கொடுத்த ஆலோசனைக் கூட்டம்

இது குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் நாம் பேசியபோது, ``டெல்டா மாவட்ட மக்களைப் பொறுத்தவரை, பத்து நாள்களுக்கு முன்பு வரை, முகக்கவசம் அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை ஓரளவுக்குக் கடைப்பிடித்து வந்தார்கள்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், டெல்டா மாவட்ட மக்களிடம் அலட்சியப்போக்கு அதிகரித்தது. இதற்கிடையே சென்னை உள்ளிட்ட கொரோனா உச்சநிலை மாவட்டங்களிலிருந்து டெல்டாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. குறிப்பாக, செங்கல்பட்டு சிறப்பு ரயில்கள் மூலம் இங்கு வந்தவர்களால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

`சுடு தண்ணீர்... மாஸ்க் தாங்க!' -போராட்டத்தில் இறங்கிய ராமநாதபுரம் கொரோனா நோயாளிகள்

இதன் அறிகுறி உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம்கூட அணியவில்லை. இதேநிலை தொடர்ந்தால், சென்னையைப் போல், டெல்டா மாவட்டங்களும் மோசமான நிலையை அடைய வாய்ப்புள்ளது.

இதனால், இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், டெல்டா மக்கள், மீண்டும் முன்பு போல், விழிப்புடன் இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல் ஆகியவற்றைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இங்கு ஊரடங்கு நடைமுறையில் இல்லையென்றாலும்கூட, இப்பகுதி மக்கள், தவிர்க்க முடியாத தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்லும் வழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு