Published:Updated:

கொரோனா: அடுத்தடுத்த மரணம்; இறுதிச்சடங்கு அதிர்ச்சி! -அச்சத்தில் சேலம்

கொரோனா
கொரோனா

பண்ணவாடி கிராமத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சேலம் சின்னபுதூர் பகுதியைச் சேர்ந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், நேற்று நள்ளிரவு உயிரிழந்தனர். ஒரே நாளில் கொரோனா தொற்றால் இருவர் பலியான சம்பவம், சேலம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆய்வு
ஆய்வு

தமிழகத்தில் சென்னை, மதுரையை அடுத்து சேலத்தில் மிகத் தீவிரமாக கொரோனா தொற்று பரவிவருகிறது. தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், சேலம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திவருவதோடு, மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் சில சந்தேக மரணங்கள் ஏற்பட்டாலும், அதிகாரபூர்வமாகக் கடந்த மாதம் 14-ம் தேதி, பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளரின் மனைவி உயிரிழந்தார். இதுவே சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதல் மரணமாகப் பதிவுசெய்யப்பட்டது.

கொரோனா தொற்று சேலத்தில் கட்டுக்குள் இருந்த நிலையில், ஜூன் மாத இறுதியிலிருந்து தொற்று அதிகரித்துவருகிறது. கடந்த வாரம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஒன்றியம் பண்ணவாடி கிராமத்தில், செல்வம் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து பண்ணவாடி கிராமத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கொளத்தூர் ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

சேலத்தில் மருத்துவர்கள், சுகாதார மற்றும் தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது.

சேலத்தில், 1030-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருகிறார்கள். இங்கு, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-தாக உயர்ந்துள்ளது.

Corona Live Updates: தமிழகத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - ஒரே நாளில் 4,329 பேருக்கு பாசிட்டிவ்

இதுகுறித்து, சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனை டீன் பாலாஜிநாதனிடம் கேட்டதற்கு, ''சேலத்தில் ஒரு நாளைக்கு 2500 பேருக்கு பரிசோதனை செய்துவருகிறோம். பொதுமக்கள் தடுப்பு நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும். அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது. அதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கை
தடுப்பு நடவடிக்கை

அறிகுறிகள் உள்ளவர்கள், உடனே அரசு மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். ஆரம்ப நிலையில் வந்தால், எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற முடியும். காலதாமதமாக வருவதாலும், உடலில் ஏற்கெனவே பிரச்னை உள்ளவர்களுக்கும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு