Published:Updated:

`தாயம் விளையாடியதால் பரவிய கொரோனா?' -தேனிக்கு அதிர்ச்சி கொடுத்த ஓடைப்பட்டி கிராமம்

தேனி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதில், 12 பேர் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

தேனி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களில் மட்டும், 13 நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதில், 12 பேர் ஓடைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு
மாதிரிப் படம்

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர், கோயம்பேடு டிராவல் ஹிஸ்ட்ரி மூலமாக, சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்ததில், நேற்று முன்தினம் 7 நபர்களுக்குக் கொரோனா உறுதியானது. நேற்று 5 நபர்களுக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது. இன்னும் சிலர், சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டுத்தனிமையில் உள்ளனர்.

`70 கிலோமீட்டர் சுற்றி வருகிறோம்!’ - கொரோனா கண்காணிப்பால் அவதிப்படும் தேனி மக்கள்

ஓடைப்பட்டி கிராமத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், லாரி டிரைவர் குடும்பத்தினர், அருகே உள்ள குடும்பத்தினருடன் தாயம் விளையாடியதாகக் கூறப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான 12 பேரில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Representational Image
Representational Image
மாதிரிப் படம்

இதுதொடர்பாகப் பேசிய சுகாதாரத்துறைப் பணியாளர்கள், ``ஓடைப்பட்டி கிராமத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். சந்தேகத்தின் அடிப்படையில், சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் என்றால், மாவட்டம் முழுவதும் வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். சிலர், தேவையில்லாமல் வெளியே சுற்றுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், 7 நபர்கள் மீது அந்தந்த காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு