Published:Updated:

``பரவிக்கொண்டிருக்கும் கொரோனா... வழக்கமான உடல்நலக் குறைபாடுகள்!" - மருத்துவமனைக்குச் செல்வது சரியா?

மருத்துவமனை
மருத்துவமனை

பெரும்பாலானோர் மருத்துவமனைக்குச் செல்ல பயந்துகொண்டு சுயமருத்துவமோ மெடிக்கல் ஷாப்பில் தாங்களாகவே மருந்துகளை வாங்கியோ எடுத்துக்கொள்கிறார்கள். அது தவறு.

நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்கெல்லாம் சென்று வந்த நாம் கடந்த ஒரு மாதமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம். காரணம் `கோவிட் -19' கொரோனா வைரஸ்! எனினும் சில அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்கிறது.

கோவிட் -19
கோவிட் -19

குறிப்பாக, நமக்கு ஏற்படும் சாதாரண காய்ச்சல், நீரிழிவு பிரச்னை, இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், "கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றால் நமக்கும் வைரஸ் தொற்றிக்கொள்ளுமோ?" என்ற பயம் கலந்த சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுவது இயல்புதான்.

எனவே 'கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மருத்துவமனைக்குச் செல்லலாமா... அப்படிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் யாவை... மருத்துவமனைக்குச் செல்வதற்கு பதில் வீட்டிலிருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற முடியுமா...' போன்ற கேள்விகளை பொது மருத்துவர் சுந்தர ராமன் முன் வைத்தோம். அவர் கூறிய பதில்கள் இதோ...

இதயப் பிரச்னை
இதயப் பிரச்னை

"சிலருக்குப் பொதுவான உடல்நலக் குறைபாடுகளுக்காக மருத்துவமனை சென்றே ஆக வேண்டிய அவசியம் ஏற்படலாம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மருத்துவமனைக்குச் சென்றால் நமக்கும் நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற பயம் இவர்களை ஆட்கொள்வது இயல்பான ஒன்றுதான் என்றாலும் இது போன்ற காரணங்களுக்காகத் தேவையில்லாமல் பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

"கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை.... இந்தியாவில் குறைவு என்பது சரியா?" - மருத்துவர் விளக்கம்

ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நம் மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகின்றன. முதலில் மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் "காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல்... இருக்கின்றனவா?" என்ற கேள்விகள் அடங்கிய ஒரு படிவம் தரப்படுகிறது. இதனை மருத்துவமனைக்கு வரும் நபர்கள் பூர்த்தி செய்த பிறகு, அவர்களின் உடல் வெப்பநிலை டெஸ்ட் செய்யப்படுகிறது.

பொது மருத்துவர் சுந்தர ராமன்
பொது மருத்துவர் சுந்தர ராமன்

இவற்றைக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளவர்கள் கொரோனாவிற்கான அறிகுறிகளுடன் உள்ளார்களா, இல்லையா? என்பதை உறுதி செய்த பிறகே அவர்கள் மருத்துவமனையில் உள்ள மற்ற பிரிவுகளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா தொற்று அறிகுறியுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குத் தனியாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே நீரிழிவு, இதயப் பிரச்னை, சிறுநீரகக் கோளாறு என்று மருத்துவமனை வருவோர்கள், நோயாளிகளை அழைத்துக்கொண்டு வரும் அவர்களின் உறவினர்கள் என அனைவருக்கும் இதுபோன்ற டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன.

மருத்துவமனை
மருத்துவமனை

இதன் பிறகே அவர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவிரும்பும் பிரிவுகளில் சேர்க்கப்படுகிறார்கள். எனவே, மருத்துவமனைக்குச் சென்றே ஆக வேண்டிய உடல்நல குறைபாடுகளுக்குக் கண்டிப்பாகச் செல்லலாம். அங்கு சென்றால் நம்மை நோய் தொற்றிக்கொள்ளுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை.

ட்ரம்ப் `கேம்-சேஞ்சர்' என்று குறிப்பிட்ட ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உண்மையில் எந்த நோய்க்கான மருந்து? - ஓர் அலசல்

பெரும்பாலானோர் மருத்துவமனைக்குச் செல்ல பயந்துகொண்டு சுயமருத்துவமோ, மெடிக்கல் ஷாப்பில் தாங்களாகவே மருந்துகளை வாங்கியோ எடுத்துக்கொள்கிறார்கள். அது தவறு. உங்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு அது சாதாரண காய்ச்சலாக இருக்குமோ என்று சந்தேகம் வரும் வேளையில் `பாராசிட்டமால்' மாத்திரையை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். இதில் சரியாகிவிட்டால் பிரச்னை இல்லை. காய்ச்சல் நீடித்தாலோ கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

பாராசிட்டமால்
பாராசிட்டமால்

இப்போது பெரும்பாலான மருத்துவர்களும் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தங்களிடம் வழக்கமாகச் சிகிச்சை பெற்று வருவோர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். எனவே, மக்கள் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு வீட்டிலிருந்தபடியே மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

"கொரோனா அச்சம்; மருத்துவர்களின் ஆன்லைன் பரிந்துரைகள்!"- டெலிமெடிசின் சாதகமும் பாதகமும் #FightCovid19

மருத்துவமனைக்குச் சென்றே ஆக வேண்டிய சிகிச்சைக்கு மட்டும் அங்கு செல்லலாம். நீங்கள் சிகிச்சை அல்லது மருத்துவ ஆலோசனை பெற விரும்பும் மருத்துவரைத் தொடர்புகொள்ள எத்தனையோ டெலிமெடிசின் செயலிகள் வந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்தி 'டெலிமெடிசின்' மூலமாகவும் நீங்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறலாம். தற்போது எல்லா மருத்துவமனைகளிலும் உடனடியாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகளை மட்டுமே செய்து வருகிறோம். சில நாள்கள் தள்ளிப்போடுவதால் பிரச்னை இல்லை என்ற அறுவை சிகிச்சைகள் கொஞ்ச நாள்களுக்கு தள்ளிப்போடப்படுகின்றன.

டெலிமெடிசின்
டெலிமெடிசின்

கொரோனா தொற்று, பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடியது என்பதால் சாதாரணமாகவே அனைவரும் தங்களைத் தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, தன் சுத்தம் பேணுவது, மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார் மருத்துவர் சுந்தர ராமன்.

அடுத்த கட்டுரைக்கு