Published:Updated:

கொரோனாவிலிருந்து குணமான பிறகும் இயல்புநிலைக்குத் திரும்பாத உடல்...

காரணங்கள், தீர்வுகள்...
பிரீமியம் ஸ்டோரி
காரணங்கள், தீர்வுகள்...

காரணங்கள், தீர்வுகள்...

கொரோனாவிலிருந்து குணமான பிறகும் இயல்புநிலைக்குத் திரும்பாத உடல்...

காரணங்கள், தீர்வுகள்...

Published:Updated:
காரணங்கள், தீர்வுகள்...
பிரீமியம் ஸ்டோரி
காரணங்கள், தீர்வுகள்...

கொரோனா வந்துவிட்டதை வெளியில் சொல்லவே வெட்கப்பட்ட நிலை மாறி, இன்று ‘ஸ்டேட்டஸ்’ வைக்கும் அளவுக்கான நியூநார்மல் விஷயமாக மாறிவிட்டது. கொரோனாவின் முதல் இரண்டு அலைகளைப் போல தொற்றுக்குள்ளான எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள், பாதிப்புகளை இந்த மூன்றாம் அலையில் பார்க்க முடிவதில்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அறிகுறி என கொஞ்சம் புதிராகத் தான் இருக்கிறது மூன்றாவது அலை பாதிப்பு. நோய் குணமான பிறகும் பலரும் பலவித பிரச்னைகளை எதிர்கொள்வதாகச் சொல் வதைத் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். அந்த அடிப்படையில் பெரும்பாலானவர்கள் நம்மிடம் வைத்த சந்தேகங்களை, சென்னை யைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணனிடம் கேட்டோம். அவர் அளித்த விரிவான பதில்கள் இங்கே...

கொரோனாவின் முதல் அலையைப் போல அல்லாமல் ஒமிக்ரான் தொற்றுக்குள்ளாகி, குண மானவர்களுக்கு அதிக களைப்பும், அசதியும் இருப்பது ஏன்?

குணமானவர்கள் பலரும் சொல்லும் இந்த அசதியை, களைப்பை கொரோனாவின் முந்தைய அலைகளிலும்கூட பார்த்தோம். இந்த மூன்றாம் அலையில் அதிகம் கேள்விப் பட காரணம், அதிக எண்ணிக்கையிலான நபர்கள் தொற்றுக்குள்ளானதுதான். அதிலும் குறிப்பாக இள வயதினரின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் பலருக்கும் நிமோனியா பாதிப்பு பெரிதாக இல்லை. அதற்கு பதிலாக களைப்பு, அசதி, உடல்வலி, மந்த உணர்வு போன்றவை இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த அறிகுறிகள் போகப் போக தானாகச் சரியாகிவிடும். அதையும் தாண்டி சிலருக்கு மூன்று மாதங்கள், ஆறு மாதங்களுக்குக்கூட இந்த அறிகுறிகள் தொடரலாம். அது ‘லாங் கோவிட்’ பாதிப்பு எனப்படும். நீண்டநாள்கள் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனை அவசியம்.

கொரோனாவிலிருந்து குணமான பிறகும் இயல்புநிலைக்குத் திரும்பாத உடல்...

குணமான பிறகு, ஒரு மாதம் வரை இருமலும் பசி உணர்வும் சரியாகாதது ஏன்?

கொரோனா பாதிப்பவர்களுக்குப் பெரும் பாலும் தொண்டையில் வலி, எரிச்சல், எச்சில் விழுங்க முடியாத நிலை இருக்கிறது. சிலருக்கு இருமலும் இருக்கிறது. பெருமபாலும் ஒரு வாரத்தில் இவையெல்லாம் சரியாகி விடுகின்றன.

சிலருக்கு நான்கு வாரங்கள் வரை தொடர்வதையும் பார்க்கிறோம். இந்த வைரஸ் தொற்றானது தொண்டையில் ஒரு வீக்கத்தை உருவாக்குவதால் ஏற்படும் பாதிப்பு இது. இந்த உணர்வானது நுரையீரல் பாதிப்பு போன்ற எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்து வதில்லை. ஆனாலும் ஒருவித அசௌகர்ய உணர்வைத் தருகிறது. அது நாளடைவில் தானாகச் சரியாகிவிடும். பயப்பட வேண்டாம்.

கொரோனாவின் முந்தைய இரண்டு அலைகளிலும் தொற்றுக்குள்ளான வர்கள் எடை குறைந்ததாகச் சொன்னார்கள். ஆனால் இந்த முறை எடை அதிகரிப்பை அதிகம் பார்க்கிறோம். தொற்றுக்குள்ளாகி, நிமோனியா பாதித்தவர்கள், சிலருக்கு கொரோனாவுடன் பேதியை எதிர் கொண்டவர்கள், இணைநோய்கள் உள்ளவர்கள் போன்றோரிடம் மட்டுமே இந்த முறை எடைக் குறைவை பார்க்கிறோம். குறைவான பாதிப்புக் குள்ளான பலரும் களைப்பு, தூக்கம் போன்றவற்றை உணர்கிறார்கள். நிறைய சாப்பிட்டு எடையும் கூடியிருக்கிறார்கள்.

எடைக்குறைவு, எடை அதிகரிப்பு இரண்டுமே நல்லதல்ல. இரண்டுமே நம் உடலை பலவீனமாக்கிவிடும். இந்த நேரத்தில் நோயிலிருந்து முழுமையாக குணமடைவதுதான் நம் இலக்காக இருக்க வேண்டும். அதற்கு நம் உணவு பேலன்ஸ்டாக இருக்க வேண்டும். உடலியக்கம் இருக்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகள், பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும். நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த நட்ஸ், இரும்புச் சத்துள்ள உணவுகள் அவசியம். தூக்கம் சரியாக இருக்க வேண்டும். நோய் பாதித்த முதல் வாரங்களில் நிறைய தூங்கினாலும் நல்லதுதான். தூக்கத்துக்கு உடலை ஆற்றும் தன்மை உண்டு.

குணமானவர்களுக்கு அதீத தூக்கம் அல்லது தூக்கம் இல்லாதது ஏன்?

இந்த முறை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு, அதிலும் குறிப்பாக ஒமிக்ரான் தொற்றுக்குள்ளானவர்களுக்கு, வைரஸ் தொற்றானது தொண்டை யில் தங்கிவிட்டுப் போய்விடுகிறது. அதா வது ஃப்ளூ காய்ச்சல் போல வந்து போகிறது.

கடந்த இரண்டு அலைகளிலும் நிமோனியா பாதிப்பு அதிகமிருந்தது. இவை எல்லாமே நம் உடலின் பிற இயக்கங்களையும் பாதிக்கும். அவற்றில் ஒன்று தூக்க சுழற்சி. தொற்றுக்குள்ளான வர்களில் சிலருக்கு தூக்கமே இருப்பதில்லை.சிலருக்கு அதீத தூக்கம் இருக்கிறது. இந்த இரண்டுமே நாளடைவில் சரியாகும். ஒருவேளை அப்படிச் சரியாகாதபட்சத்தில் இது தூக்கம் தொடர்பான குறைபாடாகவும் மாறக்கூடும்.

தூக்கம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் தூக்க சுழற்சியை முறைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தூங்கு வதையும் குறிப்பிட்ட நேரத்தில் விழிப்பதையும் முறைப்படுத்த வேண்டும். தொற்றிலிருந்து குணமானதும் மெள்ள மெள்ள உடற்பயிற்சி களையும் தொடங்கலாம். உடல் ரொம்பவே களைப்பாக இருக்கும்போது குட்டித்தூக்கம் போடலாம். இந்த இரண்டு பிரச்னைகளுமே கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வரும் லாங் கோவிட் பிரச்னைகளில் ஒன்று தான். காலப்போக்கில் சரியாகும் என்பதால் பயப்படத் தேவை யில்லை.

கொரோனாவிலிருந்து குணமான வர்களுக்கு மாதக் கணக்கில் தலைவலியும், மூக்கில் நீர் வடிதலும் தொடர்வது ஏன்?

கொரோனா வந்த சிலருக்கு தலைவலி இருக்கிறது. அதை சைனஸ் தலைவலியாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்கும் சைனஸுக்கும் தொடர்பில்லாமல்தான் இருக்கிறது. சிலருக்கு தூக்கத் தொந்தரவால் வருகிறது.

`சர்காடியன் ரிதம்' எனப் படும் உடல் கடிகாரம் பழைய நிலையில் இயங்காதது தான் காரணம். இது பயப்பட வேண்டிய விஷயமல்ல. தினசரி நடவடிக்கைகளை முறைப்படுத்தி னாலே போதும். ஒரு சிலருக்கு மட்டும் சிகிச்சை தேவைப்படலாம்.

சிலருக்கு மூக்கடைப்பு, மூக்கிலிருந்து நீர்வடிதல் போன்றவற்றைப் பார்க்கி றோம். தலையில் எலும்புகளுக்கு இடையில் சைனஸ் சுரப்பிகள் இருக்கும்.அவற்றில் நீர்கோத்து மூக்கின் வழியே இறங்கும். அந்த இடங்கள் வீங்கும்போது அவற்றின் துவாரங்கள் அடை பட்டு, அதனால் தலைவலி வரும். நீர்கோத்ததை சரிசெய்ய `ஆன்டிஹிஸ்டமைன்' மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆவி பிடித்தலும் பலன் தரும். மற்றபடி இதுவும் தானாகவே சரியாகி விடும்.

கொரோனாவிலிருந்து குணமானவர்களுக்கு முடி உதிர்வு மிக அதிகமாக இருப்பது ஏன்?

கூந்தலைப் பொறுத்தவரை ஒவ்வொரு முடியும் ஒவ்வொரு காலகட்டத்தில் வளரும், உதிரும். எனவேதான் நமக்கு எப்போதும் சிறிதளவு முடி உதிர்வு இருந்துகொண்டே இருக்கும்.

விஜயலட்சுமி
விஜயலட்சுமி

நமக்கு ஏதேனும் தொற்றோ, நோயோ பாதிக்கும்போதும் முடி உதிர்வு அதிகமிருக்கும். இதை ‘டீலோஜென் எஃப்ளுவியம்’ (Telogen Effluvium) என்கிறோம். கொரோனா போன்ற தொற்றின் காரணமாக மட்டுமன்றி, இதயச் செய லிழப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்றவற்றின் காரணமாகவும் முடி உதிரலாம்.அந்த நேரத்தில் நிறைய முடிகள் உதிர்ந்து, மீண்டும் வளரத் தொடங்கும்.

எனவே இதுபோன்ற தருணங்களில் முடி உதிர்வதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், முடி வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகளைக் குறையாமல் பார்த்துக்கொண்டால் மறுபடி சீக்கிரம் வளர்ந்துவிடும்.