Published:Updated:

ஜெர்மனியில் இருந்து சோதனைக் கருவிகள்... மேலும் பல நகரங்களில் சோதனை மையங்கள்..! #Corona

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை

ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளைக் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. ஸ்பெயினில் மட்டும் 9,942 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 342 பேர் பலியாகியிருக்கின்றனர். பிரான்ஸில் 6,643 பேரை இந்த வைரஸ் தொற்றியுள்ளது. 148 பேரை பலி கொண்டுள்ளது.

கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஒருவித அச்சம் பரவி வருகிறது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று மக்கள் ஒருவித பயத்திலேயே வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை, நாட்டில் கொரோனாவுக்கு மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு, இந்தியாவில் விசா மறுக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையான சோதனை செய்த பிறகே, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. ஸ்பெயினில் மட்டும் 9,942 பேர் கொரேனாவால் பாதிக்கப்பப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் 342 பேர் பலியாகியிருக்கின்றனர். பிரான்ஸில் 6,643 பேரை இந்த வைரஸ் தொற்றியுள்ளது. 148 பேரை பலி கொண்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனால் இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று டெல்லி வந்தவர்கள் துவாரகா என்ற இடத்தில் உள்ள போலீஸ் அகாடமியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த அகாடமியில் உள்ள அறைகள் அழுக்கு நிறைந்து சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டுள்ளன. அழுகிய காய்கறிகள் அறைகளுக்குள் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன. துர்நாற்றம் வீசியதோடு எங்கு பார்த்தாலும், ஈக்கள் பறப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். இது குறித்து துவராகா துணை ஆட்சியருக்கு உடனடியாக அவர்கள் புகார் அளித்தனர். `எங்களால் இந்த இடத்தில் தங்க முடியாது, மிகவும் சுகாதாரமற்ற முறையில் அறைகள் இருக்கின்றன. எங்களுக்கு நல்ல சத்து நிறைந்த உணவுகளுடன் தங்குவதற்கு நல்ல அறை வேண்டும்' என்று கடிதம் எழுதினர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூறுகையில், ``நள்ளிரவு 1.30 மணியளவில் நாங்கள் வந்த விமானம் டெல்லி வந்திறங்கியது. ஜன்னல் கண்ணாடிகூட இல்லாத, டெல்லி அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏற்றி இங்கு கொண்டு வந்தனர். பல முறை தண்ணீர் கேட்டபோதுகூட 6 மணி நேரம் கழித்தே தண்ணீர் பாட்டில்கள் தந்தனர். 12 மணி நேரம் கழித்தே உணவு தந்தனர். இப்போதும் எங்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யவில்லை. விமான நிலையத்தில் உடல் வெப்ப நிலையை மட்டுமே பரிசோதித்தனர். நாங்கள் எங்கள் உண்மையான டிராவல் ஹிஸ்ட்ரியை மறைக்காமல் கூறியதுதான் தவறு'' என்று கொந்தளித்துள்ளனர்.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

பயணிகளின் புகாரையடுத்து, டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. ஏரோசிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்ட வசதியுடன்கூடிய 182 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தற்போது அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் குற்றச்சாட்டு குறித்து டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலிடத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். ``குறுகிய காலத்தில் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்ததால் தவறு நிகழ்ந்துவிட்டது. பயணிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் வசதிகளைச் செய்து தர முடியவில்லை'' என்று வருத்தம் தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்தியாவில் 9,000 பேருக்கு மட்டுமே கெரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிக பேருக்கு சோதனை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும் என்றும் சொல்லப்படுகிறது. 6 கோடி மக்கள் தொகை கொண்ட தென்கொரியாவில் 2 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டு 8,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனைக் கருவி
சோதனைக் கருவி

அதேவேளையில், கொரோனாவால் அங்கே 72 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம் அதிகமானோருக்கு சோதனை நடத்தப்பட்டு, நோய்த்தொற்று இருப்பதை முன் கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

ஓமனிலிருந்து திரும்பிய மனைவி; அதே விமானத்தில் சடலமாக வந்த இளைஞர்! - நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்

ஜெர்மனியிலிருந்து 10 லட்சம் கொரோனா சோதனைக் கருவிகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மேலும் 9 நகரங்களில் கொரோனா சோதனை மையங்களை அமைக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்தியா 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. இங்கு, கொரோனா போன்று மருந்து கண்டுபிடிக்கப்படாத வைரஸ் பரவினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுவதே நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த `கியூர்வாக்' என்ற மருந்து ஆராய்ச்சி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் ஜூலை மாதத்திலிருந்து, அந்த மருந்து பயன்பாட்டுக்கு வரப் போவதாகவும் சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு