Published:Updated:

உலகிற்கு முன்னோடியாக விளங்குமா இங்கிலாந்து? நாளை முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனை

கொரோனா
கொரோனா

ஒருபக்கம் சோதனை செய்யப்பட உள்ள கோவிட்-19 தடுப்பூசி, மறுபக்கம் தட்டுப்பாடாக உள்ள சுய பாதுகாப்பு உபகரணங்கள் என்ற நிலையில் சோதனையில் வெற்றிபெற்று உலகிற்கு முன்னோடியாக விளங்குமா இங்கிலாந்து...

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரனா வைரஸுக்கு எதிராக செயல்படக்கூடிய தடுப்பூசி சோதனை இரண்டு நாள்களில் தொடங்கும் என அந்நாட்டின் சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் கூறினார். மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 20 மில்லியன் டாலர்களும், அதன் தடுப்பூசி ஆராய்ச்சிக்காக லண்டன் இம்பீரியல் கல்லூரிக்கு 22.5 மில்லியன் டாலர்களும் நிதியளிப்பதாக அவர் அறிவித்தார். 21-ம் தேதி மாலை டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஹான்காக், "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி, இந்த வியாழக்கிழமை முதல் மக்களிடையே சோதனை செய்யப்படும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்" என்று கூறினார்.

மேலும் அவர், "சாதாரண சூழலில் தடுப்பு மருந்துகள் சோதனை இந்தக் கட்டத்தை அடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதுவரை பல்கலைக்கழகம் சார்பில் எடுக்கப்பட்ட பணிகள் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதே நேரத்தில், தடுப்பு மருந்துக்கான உற்பத்தியில் நாங்கள் அதிக முதலீடு செய்வோம். இதனால் இந்த தடுப்பூசிகளில் ஒன்று பாதுகாப்பாக வேலை செய்யும் பட்சத்தில், அதை பிரிட்டிஷ் மக்களுக்கும் கூடிய விரைவில் தடுப்பு மருந்துகள் கிடைக்கச் செய்யலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, வெற்றிகரமான தடுப்பூசியை உருவாக்கிய உலகின் முதல் நாடு என்ற உயர்வு மிகவும் பெரியது. இதற்காக இதுவரை நாம் சந்தித்த எல்லாவற்றையும் தூக்கிஎரியலாம்" என்று கூறினார்.

ஹான்காக்
ஹான்காக்

அதேநேரம், ``ஒரு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான செயல்முறையில், சோதனை மற்றும் பிழைகளும் இருக்கும்" என்ற அவர், ``இங்கிலாந்து விஞ்ஞானிகளிடம், அவர்களுக்குத் தேவையான ஒவ்வொரு உதவியும் செய்து கொடுப்பேன்" என்று உறுதியளித்துள்ளார். ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் அணியை வழிநடத்தும் பேராசிரியர் சாரா கில்பர்ட், கடந்த வாரம் "பொது மக்களுக்குப் பயன்படுத்த ஒரு தடுப்பூசி விரைவில் கிடைக்கக்கூடும். தனிப்பட்ட முறையில், எனக்கு இந்த தடுப்பு மருந்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. இது வேலை செய்வதற்கான மிக வலுவான வாய்ப்பைக் கொண்டுள்ளது என்று நம்புகிறேன்" என்று கூறினார். அப்போது, தடுப்பூசி சோதனையின் முதல் டோஸ், முதல் தன்னார்வலருக்கு எப்போது வழங்கப்படலாம் என்ற கேள்விக்கு, "உற்பத்தியில் செய்யப்படும் கடைசிக் கட்ட பரிசோதனை எப்போது முடியும் என்பதைப் பொருத்துதான் கூற இயலும்" என்றார்.

கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சியில் பணிபுரியும் விஞ்ஞானிகளுக்கு கூடுதல் நிதியுதவியை அறிவித்த ஹான்காக், "நீண்ட காலமாக நாம் போராடிவரும் கொரோனா வைரஸை தோற்கடிப்பதற்கான சிறந்த வழி தடுப்பூசி தான். கொரனா வைரஸுக்கு எதிரான உலகளாவிய முயற்சியில் இங்கிலாந்து முன்னணியில் உள்ளது. தடுப்பூசிக்கான உலகளாவிய தேடலில் வேறு எந்த நாட்டையும்விட அதிகமான பணத்தை நாங்கள் முதலீடு செய்துள்ளோம். உலகெங்கிலும் உள்ள அனைத்து முயற்சிகளுக்கும் பலனாக, இரண்டு முன்னணி தடுப்பூசி முன்னேற்றங்கள் ஆக்ஸ்போர்டு மற்றும் இம்பீரியல் கல்லூரியில் நடைபெறுகின்றன" என்று பெருமிதம் கொண்டதுடன், "இந்த நம்பிக்கைக்குரிய இரண்டு தடுப்பூசி திட்டங்களும் விரைவான முன்னேற்றத்தை அடைந்துவருகின்றன. அவற்றை வழிநடத்தும் விஞ்ஞானிகளை ஆதரிக்க எங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வோம்" என்றார்.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் உள்ள இந்தத் திட்டம் மற்றும் அதன் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளை ஆதரிக்க 22.5 மில்லியன் டாலர்களையும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மற்றும் அதன் மருத்துவப் பரிசோதனைகளுக்கு 20 மில்லியன் டாலர்களையும் நிதியளிக்க ஹான்காக் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்புக்குப் பிறகு இம்பீரியல் கல்லூரி என்.எச்.எஸ் (national health service) அறக்கட்டளை செய்துள்ள ட்விட்டர் அறிவிப்பில், "கோவிட்-19 தடுப்பூசி சோதனையில் பங்கேற்க ஆரோக்கியமான நபர்களை நாங்கள் தேடுகிறோம். இதற்காக அவர்களின் நேரம், பயணம் மற்றும் பங்களிப்புக்கான தொகையாக £190- £ 625 செலுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டது. மேலும், "நீங்கள் 18 முதல் 55 வயதுடையவராக இருந்தால், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றீர்கள் என்று நினைத்தால், மேலும் தகவலுக்கு வலைதளத்தைப் பார்வையிடவும்" என்று கூறப்பட்டுள்ளது.

உலகிற்கு முன்னோடியாக விளங்குமா இங்கிலாந்து? நாளை முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சோதனை

இங்கிலாந்தில், ஒரு நாளைக்கு 1,00,000 பேர்களுக்கு கொரனா சோதனை செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய அரசாங்கம் பெரும் போரை எதிர்கொள்கிறது. கோவிட் -19 ல் இருந்து மீண்டு வந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் - சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். ஆனாலும் வைரஸ் பாதிப்பிற்கான சோதனை செய்வதற்கான கருவிகள், சோதனை செய்யும் வேகம் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான முக்கிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பது முதலிய விவகாரங்களில் இங்கிலாந்து அரசாங்கம் பெரும் தட்டுப்பாட்டை சந்தித்துவருகிறது. இதற்கிடையில், திங்கள்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 17,337 நோயாளிகள் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு