கொரோனாவின் தாக்கத்தால் அச்சு மாறிச் சுழன்றுகொண்டிருக்கும் பூமிப்பந்தை அதன் இயல்புக்குத் திருப்ப வேண்டுமானால் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும்.

தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. தடுப்பூசியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்பு அது எப்படிச் செயல்படும் என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.

நம் விரலை வைத்து நம் கண்களைக் குத்துவதுபோல வைரஸ் போன்ற கிருமிகள் உடலுக்குள் நுழைந்து நம் செல்களைக் கைப்பற்றி அவற்றின் வளங்களைப் பயன்படுத்தி அதன் ஆயிரம் குட்டிகளைத் தயாரித்து மேலும் ஆயிரம் ஆயிரம் செல்களைத் தொற்றும். ‘ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது’ என்பதுபோல வைரஸ் புகுந்த செல்கள் ஒரு கட்டத்தில் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும். நமது உடலின் ஆற்றலை வைரஸ் உறிஞ்சுவதால் சடசடவென ஆயிரமாயிரம் செல்கள் அழிந்து போவதுதான் கிருமித்தொற்று.

செல்களுக்குள் நுழையத் துடிக்கும் கிருமிகளை இனம்கண்டு அழிப்பதும், வைரஸ் தொழிற்சாலையாக மாறிப்போன தொற்று ஏற்பட்ட செல்களை இனம்கண்டு அழிப்பதும் தான் நோய்த் தடுப்பாற்றல். குருதியணு மூலக் குருத்தணு (hematopoietic stem cell) சுரந்து தைமஸ் சுரப்பியில் முதிர்ச்சியடையும் T செல்களில் முக்கியமாக இரண்டு வகை உள்ளன.

அத்துமீறி நுழையும் கொள்ளையர்களை இனம்கண்டு குரைக்கும் காவல் நாய்போலச் செயல்படுவது ‘ஹெல்பர் T’ எனப்படும் உதவியாளர் T செல்கள். கிருமியின் அங்க அடையாளங்களை இனம் கண்டதும் ‘கில்லர் T’ எனப்படும் கொலைவெறி T செல்களை உருவாக்கி, கிருமி தாக்கிய செல்களை இனம் கண்டு அழிக்க ஏவும். கொலைவெறி T செல்கள் ‘சைடோகின்ஸ்’ எனும் நச்சு வேதிப்பொருளை உமிழ்ந்து வைரஸ் தாக்கிய செல்களை அழித்துவிடும்.

இதற்கு இணையாக நிணநீர் எனப்படும் பி-லிம்போசைட்ஸ் (Lymphocytes) என்கிற B செல்களை விழிப்படையச் செய்யும். ஜாடிக்கு ஏற்ற மூடிபோல ஒவ்வொரு கிருமியின் ஆன்டிஜெனுக்கும் பொருந்தும் வடிவம் கொண்ட ஆன்டிபாடி எனும் புரதத்தை B-செல்கள் சுரக்கும். கிருமியின் ஆன்டிஜெனில் பொருந்தும்படியான ஆன்டிபாடி இணைந்து கொண்டால் தண்ணீர் ஊற்றப்பட்ட நெருப்புபோலக் கிருமி அழிந்துவிடும். எளிமையாகக் கூறினால், செல்களுக்கு வெளியே உடலில் உலாவும் கிருமிகளை இனம் காண்பவை B-செல்கள்.

கிருமித்தொற்று ஏற்பட்ட செல்களை இனம் காண்பவை T-செல்கள். கிருமித்தொற்று ஏற்பட்டால் கிருமியின் ஆன்டிஜென் தூண்டுதலால் உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் T செல் மற்றும் B செல் வினையை ஏற்படுத்தி, கிருமியின் ஆன்டிஜெனுக்குப் பொருந்தும் வகையான ஆன்டிபாடி மற்றும் T செல்களை உருவாக்கி அழிக்கும். நாய் எப்போதும் மறக்காது என்பதுபோல அந்தக் கிருமியின் நினைவு நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தில் பதிந்துவிடும்.

சிவப்புத் துணியைக் காட்டிக் காளையை வெறி கொள்ளச் செய்வது போலத் தந்திரமாக வெறும் கிருமியின் ஆன்டிஜெனை மட்டும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்துக்கு அறிமுகம் செய்து அதற்குப் பொருந்தும் T செல் மற்றும் B செல் வினைகளைத் தோற்றுவிப்பதுதான் தடுப்பூசி. கிருமித்தொற்று நோய் ஏற்படாமல் செயற்கையாகத் தூண்டி நோய்த் தடுப்பாற்றல் நினைவைத் தடுப்பூசி உருவாக்கும்.

வகைவகையான தடுப்பூசிகள்!

வகுப்பறையில் பயிற்சி, களத்தில் பயிற்சி, வேலை செய்யும்போது பயிற்சி எனப் பல்வேறு வகையில் பயிற்சி தரமுடியும். அதுபோல நோய்த் தடுப்பாற்றலைப் பல வகையில் தூண்ட முடியும். பார்மாலின் அல்லது வெப்பம் கொண்டு வைரஸைச் செயலிழக்கச் செய்யலாம். செயலிழந்த வைரஸால் நோய்த்தொற்றை ஏற்படுத்த முடியாது. ஆயினும் தடுப்பூசியாக இந்த வைரஸைச் செலுத்தினால் இதன் ஆன்டிஜெனை இனம் கண்டு கிருமித்தொற்று என அஞ்சி, நோய்த்தடுப்பாற்றல் மண்டலம் சுதாரித்து B செல், T செல் வினைகளை முடுக்கிவிடும். நமக்கு நோய் ஏற்படுத்தாத பிளாஸ்மிடு டி.என்.ஏ அல்லது சளிக்காய்ச்சல் போன்ற ஆபத்தற்ற நோயை ஏற்படுத்தும் அடினோ வைரஸின் மரபணுவில் கிருமியின் குறிப்பிட்ட ஆன்டிஜென் புரதத்தை உருவாக்கும் மரபணுவை மட்டும் பிணைத்து உடலில் செலுத்துவது நவீன மரபணு மாற்றத் தடுப்பூசி. மரபணு மாற்ற பிளாஸ்மிடு டி.என்.ஏ அல்லது அடினோவைரஸ் உடலில் புகும்போது கிருமியின் ஆன்டிஜென் புரதம் உற்பத்தியாகும். அதனை இனம் காணும் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தூண்டப்படும்.

முன்னணியில் உள்ள தடுப்பூசிகள்

சீனாவின் சினோவேக் நிறுவனம் செயலிழந்த வைரஸ் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கரோனாவேக்’ எனப்படும் தடுப்பூசி, சீனாவின் கேன்சினோ பயலாஜிகல் நிறுவனம் தயாரித்துள்ள Ad5 எனும் மரபணுமாற்ற அடினோவைரஸ் தடுப்பூசி, இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் AZD1222 எனும் மரபணு மாற்ற அடினோவைரஸ் தடுப்பூசி ஆகிய மூன்றும் முதல் இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவ ஆய்வுக்கு முன்னேறியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய மருத்துவ கவுன்சில், தேசிய வைராலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் செயலிழந்த வைரஸ் கொண்ட ‘கோவாக்ஸின்’ தடுப்பூசி மற்றும் தேசிய உயிரித்தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து ஸைடஸ் காடில்லா நிறுவனம் தயாரிக்கும் மரபணுமாற்ற பிளாஸ்மிடு டி.என்.ஏ கொண்ட ‘ஸைகோவ்-டி’ என்ற தடுப்பூசி ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் முதல் கட்ட ஆய்வு நிலையை அடைந்துள்ளன. மருத்துவ ஆய்வுக் கட்டங்கள் என்னென்ன?

மருத்துவப் பரிசோதனைகளுக்கு முந்தைய ஆய்வுகளில் முதலில் சோதனைக்குழாய்களில் வளர்க்கப்படும் செல்களில் தடுப்புமருந்து எப்படிப்பட்ட வினைகளை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சி செய்வார்கள். அதன் பின்னர் எலி, முயல், குரங்கு போன்ற விலங்குகளின்மீது செலுத்திப் பரிசோதனை மேற்கொள்வார்கள். தடுப்பு மருந்து ஏதேனும் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்றும் நோய்த் தடுப்பாற்றல் திறனைத் தூண்டுகிறதா எனவும் ஆய்வு செய்வார்கள்.

ஆபத்து இல்லையெனத் தெரிந்தால் மட்டுமே மனித மருத்துவப் பரிசோதனைக்கு ஒப்புதல் தரப்படும். முதல் கட்ட மனித பரிசோதனையில் நூற்றுக்கும் குறைவான நபர்களுக்கு அளித்து மருந்தினால் ஏதேனும் தீய விளைவு உள்ளதா எனப் பரிசோதனை செய்து பாதுகாப்பை உறுதி செய்துகொள்வார்கள். இரண்டாம் கட்ட ஆய்வில் சுமார் ஆயிரம் நபர்கள்மீது பரிசோதனை மேற்கொள்ளப்படும். தீய பக்க விளைவுகள் ஏதுமில்லை என்பதுடன் போதிய அளவு நோய்த் தடுப்பாற்றலை குறிப்பாக T செல் மற்றும் B செல் வினைகளைத் தூண்டுகிறதா எனத் தடுப்பூசியின் நோய்த் தடுப்பாற்றலைத் தூண்டும் திறனை ஆராய்ச்சி செய்வார்கள்.

மூன்றாவது கட்ட மருத்துவப் பரிசோதனையில் பல ஆயிரம் நபர்கள்மீது ஆய்வு மேற்கொள்வார்கள். எல்லா வயதினருக்கும், பல்வேறு இன, சமூக, பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள் அனைவருக்கும் எதிர்பார்க்கும் விளைவைத் தருகிறதா எனத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து மதிப்பீடு செய்வார்கள். இங்கும் நோய்த் தடுப்பாற்றல் தூண்டும் திறன் மற்றும் பக்கவிளைவுகள் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். மூன்றாம் கட்ட ஆய்வில் வெற்றி கண்டால்தான் உற்பத்தி செய்து விற்பனை செய்ய அனுமதி வழங்குவார்கள். விரைவில் தடுப்பூசி தயாராக வேண்டும் என்ற நிலை உள்ளதால், முதல் இரண்டு கட்டங்களை ஒருசேர நடத்தச் சிறப்பு ஒப்புதல் உள்ளது. அதேபோல தடுப்பூசியின் திறன் ஐம்பது சதவிகிதமாக இருந்தாலும் அதனை அவசரகாலத் தடுப்பூசியெனத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளலாமென அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

மருந்தின் பயனை எப்படி ஆய்வு செய்வார்கள்?

தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் சமவாய்ப்புள்ள இரட்டை மறைவு கட்டுப்படுத்தப் பட்ட சோதனை (randomised double-blind control trial) எனும் ஆய்வு முறையில் மேற்கொள்ளப்படும். நோயுள்ள பத்துப் பேருக்குப் புதிய மருந்து கொடுத்து சோதனை செய்யும்போது ஒன்பது பேர் தேறினால் வெகுளியாக நாம் மருந்துச் சோதனை வெற்றியெனக் கொள்வோம். அறிவியல் இதனை ஏற்பதில்லை. குணமானதற்கு அந்தப் புதிய மருந்துதான் காரணம் எனக் கருதுவது ‘காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது’ எனக் கருதுவது போல அறிவீனமாகும். தற்செயலாக வேறு காரணங்களினால் குணமடைந்து மிருக்கலாம். எனவேதான் மருந்து ஆராய்ச்சி உட்பட பல்வேறு அறிவியல் ஆய்வுகளில் பரிசோதனைக் குழுவுடன் எப்போதும் கட்டுப்படுத்தும் குழு (control group) என்ற ஒன்றை ஏற்படுத்தி ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்வார்கள்.

பரிசோதனையில் பங்குபெறும் நபர்களில் பாதிப் பேருக்குப் புதிய மருந்து தருகிறோம்; மீதம் பேருக்குத் தரவில்லை. இப்போது மருந்து கொடுத்தவர்களில் பத்தில் ஒன்பது பேரும், மருந்து அளிக்கப்படாதவர்களில் பத்தில் இருவர்தான் குணம்பெற்றால், மருந்துக்குப் பலன் இருக்கிறது எனக் கருதலாமா? இதிலும் சிக்கல் உள்ளது.

தங்களுக்குப் புதிய நவீன மருந்து தரப்பட்டுள்ளது என்ற மன ஊக்கத்தில் குணம் அடைந்திருக்கலாம். அதேபோல ஆய்வு செய்பவர் குறைவான நோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி மருந்தைக் கொடுப்பதும், தீவிரமான நிலையில் உள்ளவர்களுக்கு மருந்து தராமல் கட்டுப்படுத்தும்குழுவில் ஒதுக்கி மோசடி செய்வதும் நடக்கலாம். மேலும், பரிசோதிக்கும் மருத்துவர் தடுப்பூசி தந்தவர்களை ஒருமாதிரியாகவும் மற்றவர்களை வேறு விதமாகவும் நடத்தக்கூடும். இவையெல்லாம் குளறுபடியை ஏற்படுத்தும்.

எனவேதான் எந்த நபருக்கு சோதனை மருந்து, எவருக்கு வெறும் பாசாங்கு மருந்து என்பது ஆய்வாளர்களுக்கும் நோயாளிக்கும் தெரியாதபடிக்குக் கணினி வழியே சீரற்று-நிகழும்-எதேச்சையான-வழிமுறை (Random Process) கொண்டு, யாருக்கு மெய்யான தடுப்பூசி தரப்படும், யாருக்குப் பாசாங்கு மருந்து தரப்படும் என்பது தேர்வாகும். இதன் அடிப்படையில் எண்கள் இட்டு மருந்து புட்டிகள் தயார் செய்யப்படும். சில புட்டிகளில் உள்ளபடியே சோதனை மருந்து இருக்கும். மற்றதில் வெறும் பாசாங்கு மருந்துதான் இருக்கும். மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கணினிப் பட்டியல்படி குப்பியில் உள்ள மருந்து செலுத்தப்படும். கணினி வழித் தேர்வு அடிப்படையில் எதேச்சையாகத்தான் சோதனையில் பங்குபெறும் குறிப்பிட்ட நோயாளி பரிசோதனைக் குழுவில் இணைவாரா அல்லது கட்டுப்படுத்தும் குழுவில் இருப்பாரா என்பது முடிவாகும்.

எனவே ஆய்வாளரின் இச்சை ஏற்படுத்தகூடிய களங்கத்தை நீக்கிவிடலாம். அதேபோல தனக்கு அளிக்கப்பட்டது மெய்யான நவீன மருந்தா அல்லது பாசாங்கு மருந்தா என நோயாளிக்கும் தெரியாது என்பதால் தன்னுணர்வு ஏற்படுத்தும் களங்கத்தைக் களையலாம். இதுதான் இரட்டை மறைவு பரிசோதனை முறை. பரிசோதனைக் காலம் முழுவதும் இடையிடையே பல்வேறு பரிசோதனைகள் செய்து தரவுகளைச் சேகரிப்பார்கள். ஆய்வுக்காலம் முடிந்த பின்னர் கணினியில் யாருக்கு சோதனை மருந்து தரப்பட்டுள்ளது, யாருக்குப் பாசாங்கு மருந்து அளிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தைத் திரட்டி ஆய்வுத் தரவுகளோடு பொருத்திப் பார்த்து உள்ளபடியே சோதனை மருந்து திறன் கொண்டுள்ளதா என மதிப்பீடு செய்வார்கள்.