Election bannerElection banner
Published:Updated:

`தீவிர கோவிட் நோய்க்கு எதிராக கோவாக்ஸின் 100% பயனளிக்கிறது!' - பாரத் பயோடெக்

COVAXIN
COVAXIN

பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசியின் புதிய ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவர, நாளொன்றுக்குப் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருந்துவருகிறது. இரண்டாம் கட்ட அலையில் இதுவரையில் மட்டும் 20,000 பேர் இறந்துள்ளனர். கடந்த ஒரே தினத்தில் 3,32,921 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும் 2,263 பேர் உயிரிழந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Bikas Das

ஒருபுறம் கொரோனா தொற்று வேகமெடுத்துவர கொரோனா தடுப்பூசி பணிகளும் மறுபுறம் அதிகரித்து வருகின்றன. கோவாக்ஸின், கோவிஷீல்டு என இதுவரை ஒட்டுமொத்தமாக இந்தியாவில் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட 11 கோடி மக்களில் 0.019% சதவிகிதத்தினருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அளிக்கப்பட்டன. அதன் பின் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன. தற்போது, மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

Covid-19 Vaccination
Covid-19 Vaccination

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசியின் புதிய ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அதில் தீவிர கோவிட் 19 நோய்க்கு எதிராக கோவாக்ஸின் தடுப்பூசி 100 சதவிகித பலனை அளிப்பதாகவும், அறிகுறிகளற்ற கொரோனா தொற்றிற்கு எதிராக 70 சதவிகித பலன் அளிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கோவாக்ஸின் எடுத்துக்கொண்டவர்களுக்கு மிதமான, தீவிரமான கோவிட் 19 நோய் பாதிப்புகளிலிருந்து 78 சதவிகித பலன் அளிப்பதாகவும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது. இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பின் கோவாக்ஸின் தடுப்பூசி கடந்த ஜனவரி 16 முதல் மக்களுக்குச் செலுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு