Published:Updated:

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தாக்கும்? - நிபுணர்களின் விளக்கம் 

Human body ( freepik )

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவருவதால், இப்போது மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களுக்குப் பதிலாக டயாலிசிஸ் கருவிகளுக்கு அதிக தேவை என்ற நிலை வந்துவிடும்போல!

கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தாக்கும்? - நிபுணர்களின் விளக்கம் 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவருவதால், இப்போது மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களுக்குப் பதிலாக டயாலிசிஸ் கருவிகளுக்கு அதிக தேவை என்ற நிலை வந்துவிடும்போல!

Published:Updated:
Human body ( freepik )

கோவிட்-19 பாதிப்பை முதன்முதலில் கண்டறிந்தபோது, மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும், இது அறியப்படாத நோய்க்கிருமியால் ஏற்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சல் என்றே கருதினர். பிறகு, இதன் முழு விவரம், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டன.

Corona
Corona
pixabay

கோவிட்-19, உண்மையில் நுரையீரலைத் தாக்கி அழிக்கக்கூடிய ஒரு நோயாக இருந்தாலும், அது நம் மூளை, இதயம், குடல் மற்றும் சிறுநீரகங்களையும் பாதித்து செயலிழக்க வைப்பதை சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்குப் பக்கவாதமும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. கொரோனா நோயாளி ஒருவரின் உடலில் ஏற்பட்டிருந்த ரத்த உறைவு சி.டி ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கோவிட்-19 பாதிக்கப்பட்ட ஒருவர், பாதிப்பின் உச்ச நிலைக்குச் செல்லும்போது, தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்வதாக நினைத்திருந்தோம். ஆனால், உடலின் மற்ற உள்ளுறுப்புகள் மீதும் கொரோனாவின் ஆதிக்கம் இருக்குமென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Blood cells
Blood cells

கோவிட்-19 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலில் எந்தெந்த உறுப்புகளை எல்லாம் தாக்கும்... எப்படி மரணம் ஏற்படுகிறது... நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் அருண் பிரசாத்திடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"சுவாசம் வழியே நம் உடலுக்குள் செல்லும் கோவிட்-19 கொரோனா வைரஸ், முதலில் செல்லும் உறுப்பு நுரையீரல் என்றாலும், கல்லீரல், சிறுநீரகங்கள், குடல் பகுதி, மூளை, இதயம் போன்ற இதர உறுப்புகளையும் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவரின் எச்சில் அல்லது வைரஸ் பரவியிருக்கும் காற்று போன்றவற்றின் வழியே நம் வாய் அல்லது சுவாசத்தின் மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ், உடனடியாக நோயை ஏற்படுத்துவதில்லை.

பேராசிரியர் அருண்பிரசாத்
பேராசிரியர் அருண்பிரசாத்

பொதுவாக ஒன்று அல்லது இரண்டு என்ற எண்ணிக்கையில் உடலுக்குள் செல்லும் வைரஸ் நம் உடலில் முதலில் அதன் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு, பிறகே நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

வைரஸ், நம் உடலின் செல்களைத் தாக்கி, தனது எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ளும் காலம் வைரஸின் "இன்குபேஷன் காலம்"(Incubation period) எனப்படும். கோவிட்-19 கொரோனா வைரஸின் இன்குபேஷன் காலம் 14 நாள்கள். இந்த நாள்களுக்குப் பிறகே, தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு முழுமையான அறிகுறிகள் தெரியவரும்.

உடலுக்குள் செல்லும் வைரஸ், உடலின் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தங்கி அதன் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள முடியும். அதாவது, அந்த வைரஸுக்கான ரிசெப்டார்கள் (Receptor) எங்குள்ளனவோ அங்குதான் சென்று இணைய முடியும். கோவிட்-19 கொரோனா வைரஸுக்கான ரிசெப்டார்கள் நம் நுரையீரலின் செல்களில் இருக்கின்றன.

lungs
lungs

இவை, ACE-2 (Angiotensin-converting enzyme 2) ரிசெப்டார்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. சுவாசத்தின் வழியே தொண்டைக்குச் செல்லும் வைரஸ், அங்கிருந்து நேரடியாக நுரையீரலுக்குச் சென்று ACE-2 ரிசெப்டாரில் இணைந்து, அங்குள்ள செல்களைத் தாக்கி தனது எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்கிறது. இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

ஒரு பந்து போன்ற அமைப்பில் வெளியில் முட்கள் நீட்டிக் கொண்டிருப்பது போன்றதோர் உருவத்தை கோவிட்-19 கொரோனா வைரஸுக்கான வடிவமாகப் பார்த்திருப்போம். உண்மையில், அந்த முட்களுக்கு ஸ்பைக்ஸ்(spikes) என்று பெயர். கொரோனா வைரஸில் இரண்டு வகையான ஸ்பைக்ஸ் இருக்கின்றன.

corona virus
corona virus

அவை 'ஹீமக்லுட்டினின்'(Hemagglutinin) மற்றும் 'நியூராமினிடேஸ்'(Neuraminidase). இவற்றில் ஹீமக்லுட்டினின் நம் உடலின் செல்களைத் தாக்கி ரத்தம் உறைதலை ஏற்படுத்துகிறது. நியூராமினிடேஸ் வைரஸ் நம் உடலில் அதன் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொள்ள புரத உற்பத்தியைச் செய்கிறது.

இந்த ஸ்பைக்குகள், ACE-2 ரிசெப்டாரில் சென்று இணைந்து அங்குள்ள ஆல்வியோலி (Alveoli) என்ற காற்றுப்பைகளைத் தாக்குகின்றன. ஆல்வியோலி காற்றுப்பைகள் நம் நுரையீரலின் முக்கியப் பகுதி. ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளை ரத்த ஓட்டத்திற்குப் பரிமாற்றம் செய்வதே இவற்றின் வேலை. இவை வைரஸினால் பாதிப்படையும்போது, தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படுகிறது.

lungs
lungs

இன்குபேஷன் காலம் முடிந்து ஆல்வியோலி காற்றுப்பைகளின் வழியே ரத்த ஓட்டத்தில் கலக்கும் வைரஸ்களால் உடலில் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. ரத்தக் குழல்களில் சிறுசிறு கட்டிகளாக ரத்தம் உறைந்து அடைத்துக்கொள்கிறது. இதனால் மூளை மற்றும் இதயத்திற்குச் செல்லும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் தடைப்படுவதால், மாரடைப்பு ஏற்படலாம்.

நமக்கு ஏற்படும் ஆஸ்துமா, மூட்டுவலி, நிமோனியா காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் கல்லீரலைத்தான் பாதிக்கும். கொரோனா தொற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்து, கூடுதலாக வைரஸின் நேரடித் தாக்கத்தாலும் கல்லீரலை வெகுவாக பாதிக்கலாம்"என்றார் பேராசிரியர் அருண்பிரசாத்.

human body
human body

இதுகுறித்து இரைப்பை, குடல் அறுவைசிகிச்சை மருத்துவர் ஆனந்த்திடம் பேசியபோது,

"கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் நுரையீரல் பாதிப்படைவதுபோல் அவரின் இரைப்பை, குடல் பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன.

மூச்சுக்குழலின் வழியே நுரையீரலுக்கு வைரஸ் செல்வதைப்போல தொண்டையில் தங்கியிருக்கும் வைரஸ் சில நேரங்களில் உணவுக்குழலின் வழியே இரைப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகம் வரை செல்கிறது. நமது வயிற்றுப் பகுதியில் உள்ள இரைப்பை, கல்லீரல், கணையம் போன்ற உறுப்புகளின்மீது 'மியூகோசா' (Mucosa) எனப்படும் வழவழப்பான ஓர் அடுக்கு காணப்படும்.

மருத்துவர் ஆனந்த்
மருத்துவர் ஆனந்த்

உணவுக்குழலின் வழியே செல்லும் வைரஸ்கள், இந்த மியூகோசா அடுக்கின்மீது நன்றாகப் படிந்துகொண்டு நமக்கு உணவு செரிமானப் பிரச்னை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற வயிற்று உபாதைகளை ஏற்படுத்துகின்றன. எனவே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இது தீவிரம் அடையும்போது, சிலர் இறக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரகங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுவருவதால், இப்போது மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களுக்குப் பதிலாக டயாலிசிஸ் கருவிகளுக்கு அதிக தேவை ஏற்படும் நிலை வந்துவிடும்போல! பெரும்பாலான கொரோனா தொற்றாளர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுகிறது. தொண்டையில் இருக்கும் வைரஸ், நேரடியாக இதயத் தசைகளைச் சென்று தாக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்த, ஆய்வுகளும் நடைபெற்றுவருகின்றன" என்றார் அவர்.

சிறுநீரகம்
சிறுநீரகம்

பொது மருத்துவர் சிவராம கண்ணன் இதைப் பற்றிக் கூறும்போது,

"கோவிட்-19 குறித்து பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன. அதில், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உடலில் ரத்தம் உறைதல் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பக்கவாதம், மாரடைப்பு போன்ற காரணங்களால் இறந்தவர்களுக்கும், இறுதியில் கொரோனா தொற்று இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் மூச்சுத்திணறலையும் தாண்டி உடலில் ரத்தம் உறைதல், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. உடலிலுள்ள ரத்தம் உறைய ஆரம்பித்தாலே மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.

பொது மருத்துவர் சிவராம கண்ணன்
பொது மருத்துவர் சிவராம கண்ணன்

கோவிட்-19 கொரோனா வைரஸ் நம் உடலில் சில வேதிப்பொருள்களைத் தூண்டி ரத்தம் உறைதலை(Coagulation) ஊக்கப்படுத்தலாம். எனவே, தற்போது மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோர்களுக்கு 'ஹெபாரின்'(Heparin) என்ற மருந்து வழங்கப்படுகிறது. இது, உடலில் ரத்தம் உறைதலைத் தடுக்கக்கூடிய (Anticoagulant) ஒரு மருந்து" என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு மூச்சுத்திணறலைத் தவிர்த்து ரத்தம் உறைதல், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் பிரச்னை மற்றும் வயிற்றுப்போக்கு முதலியவற்றாலும் மரணம் ஏற்படலாம்.

corona
corona

ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் இவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. நோய் எதிர்ப்புத்திறன் குறைவாக உள்ளவர்களும், தொற்று ஏற்பட்ட பிறகு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதவர்களுமே அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism