Published:Updated:

``கொரோனாவால் லட்சக்கணக்கான மக்களின் மன ஆரோக்கியம் பாதிப்பு!" - WHO

A health worker check the oxygen level in Mumbai
A health worker check the oxygen level in Mumbai ( AP Photo / Rafiq Maqbool )

கொரோனா தொற்று உலக அளவில் லட்சக்கணக்கான மக்களின் மன ஆரோக்கியத்தைப் பாதித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா தொற்று மொத்த மனிதகுலத்தின் இயல்பு வாழ்க்கையையும் வெகுவாக மாற்றியுள்ளது. வைரஸ் பயம், உடல்நலம் தொடர்பான அச்சம், வொர்க் ஃப்ரம் ஹோம், நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு இல்லாதது, சுற்றுலா செல்வதற்குத் தடை, ஊரடங்கு என அசாதாரண வாழ்க்கைக்கு, கடந்த சில மாதங்களாக மக்கள் பழகிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் உடலையும் தாண்டி மனதளவில் பல பிரச்னைகளை உருவாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

நேற்று முன் தினம் ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ், ``உலக அளவில் இருக்கும் கொரோனா தொற்றால் பலருக்கும் சமூகத் தொடர்பு இல்லாமல் போனது அவர்களின் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்றோர் இல்லங்கள், மனநலக் காப்பகங்கள் போன்றவற்றில் உள்ளவர்களுக்கு நோய்த் தொற்றுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

கொரோனா: `சரியான தடுப்பு மருந்து கிடைக்காமலும் போகலாம்!’ - எச்சரிக்கும் WHO

சர்வதேச அளவில் பல மனநல வல்லுநர்களே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல நாடுகளில், மனநல மருத்துவமனைகள் கோவிட் 19-க்கு சிகிச்சையளிக்கும் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. தொற்றுக்கு முன்னதாக உலக அளவில் மனநலம், புறக்கணிக்கப்பட்ட பிரச்னையாக இருந்து வந்தது. உலக அளவில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலப் பிரச்னைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

WHO
WHO

கொரோனா பரவத்தொடங்கிய இந்த ஆறு மாதங்களில் சர்வதேச அளவில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,49,28,895 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,41,691 ஆகவும் உள்ளது. மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 1,73,10,401 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது உலகம் முழுவதும் 67,76,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு