Published:Updated:

`அந்தச் செய்தியைக் கேட்டதும், உலகமே நின்றதாக உணர்ந்தேன்!’- கொரோனாவிலிருந்து குழந்தைகளை மீட்ட தாய்

கொரோனா
கொரோனா

குழந்தைகள், மனத்தளவில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, தனக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக நஸ்ரத் தன் குழந்தைகளிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு குழந்தைகள், தற்போது வீடு திரும்பியுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், இரண்டு மகள்களையும் கவனித்துவந்த அவரது தாயும் எந்தவித நோய்த் தொற்றும் இன்றி வீடு திரும்பியது மருத்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஸ்ரீநகரைச் சேர்ந்த இர்பான் மஸ்ரத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள். கடந்த மார்ச் மாதம், இவரது மாமனார் சவுதியில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது. சிறுமிகள் இருவரும் தாத்தாவுடன் நெருங்கிப்பழகியதால், அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

மகள்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருக்கிறது என்ற செய்தியை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தைகள் அவரது செவிகளில் இடியாய் வந்து இறங்கியது. என்னவானாலும் சரி, மகள்களுடன் இருப்பது என முடிவு செய்துவிட்டார் மஸ்ரத். மகள்களைப் பிரிவதற்கு மனம் வருமா என்ன... தன்னுடைய விருப்பத்தை மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் என்பதால், மருத்துவர்களும் உரிய பாதுகாப்புடன் மகள்களுடன் இருப்பதற்கு அனுமதி வழங்கினர்.

Representation image
Representation image

குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, தனக்கும் கொரோனா தொற்று இருப்பதாகக் குழந்தைகளிடம் தெரவித்துள்ளார். மருத்துவமனையில் இருந்த நாள்களில், குழந்தைகள் ஏன் நம்மை வீட்டுக்கு அனுப்பவில்லை என கேள்விகளால் துளைத்துள்ளனர். ஒவ்வொரு நாளின் விடியலின்போதும் தன் மகள்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடனே அந்த நாளை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த இரண்டு வாரங்களும் மகள்களுக்குத் தேவையான பணிவிடைகளை அவரே கவனித்துவந்துள்ளார். வீடு திரும்பும் போது நஸ்ரத்துக்கு இரண்டு முறை பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின்னரே அவர்களை வீட்டுக்குச் செல்ல அனுமதித்துள்ளனர். சிறுமிகள் இருவரும் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஒரு தாய், தன் குழந்தைகளுக்கு எப்போதும் அரணாக இருப்பாள். என் மகள்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்ற தகவலை கேட்டவுடன் இந்த உலகமே ஒரு நிமிடம் நின்றதுபோல் இருந்தது. இது என் வாழ்வின் மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவம்” என நஸ்ரத் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Representation image
Representation image

இதுகுறித்துப் பேசியுள்ள மருத்துவர்கள், “இரண்டு சிறுமிகளுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதியானது. அவர்களது நெருங்கிய உறவினர் மூலம் கொரோனா தொற்று பரவியுள்ளது. மார்ச் 26-ம் தேதி சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டனர். இங்கிருக்கும் பொருள்கள் எதையும் தொடக்கூடாது என அவர்களுக்கு அறிவுறுத்தினோம். அவர்களுக்கு மனரீதியிலான பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக பொம்மைகள், சார்ட் பேப்பர்கள், வரைவதற்குத் தேவையான கலர் பென்சில்கள் ஆகியவற்றை வழங்கினோம்.

கடந்த இரண்டு வாரங்களாக அவரது தாய் தான் அருகில் இருந்து கவனித்துவந்தார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, இரண்டு முறை பரிசோதனை செய்தோம். அந்த முடிவுகள் நெகட்டிவ் என வந்ததையடுத்து, சிறுமிகளை வீடுகளுக்குச் செல்ல அனுமதித்தோம். அவரது தாயாருக்கு பரிசோதனை செய்தோம்; நல்லவேளையாக அவருக்கு எந்தத் தொற்றும் இல்லை" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு