Published:Updated:

கோவிட் 19: `மாத்திரை மருந்துடன் பாசிட்டிவ் எண்ணங்களும்தான் என்னை மீட்டது!' - வெங்கடேஷ் ஆறுமுகம்

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்

மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆறுமுகம், கொரோனாவில் இருந்து மீண்டு, தற்போது பலருக்கு தன் வார்த்தைகளை மருந்தாக அளித்து வருகிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீஸன் 2-வின் சாம்பியன் ஆவார்.

மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆறுமுகம், கொரோனாவில் இருந்து மீண்டு, தற்போது பலருக்கு தன் வார்த்தைகளை மருந்தாக அளித்து வருகிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீஸன் 2-வின் சாம்பியன் ஆவார். மேலும்  சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக வலம் வந்தவர்.

தானும் தன் குடும்பமும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததற்கு  பாசிட்டிவான எண்ணங்களே காரணம். என்னதான் மருந்து மாத்திரை நமது உடல் நிலையை சீராக்க உதவினாலும், நமது எண்ணத்தின் மூலமாகத்தான் இந்த கொரோனாவை வெல்ல முடியும் என்ற நோக்கில்தான் நாங்கள் குணமடைந்தோம் எனக் கூறும் இவர், தற்போது மற்றவர்களுக்கும் தனது பாசிட்டிவான எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார்.

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்

``கடந்த மாதம் என் மனைவியும் மகளும் திருவிழாவுக்காக ஊருக்குச் சென்று வந்தனர். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் காய்ச்சல் வந்தது. பின்பு எனக்கும் காய்ச்சல் வந்தது. மூவரும் மருத்துவரை அணுகினோம். அவர் வெளியே எங்கும் செல்லாதீர்கள், கொடுக்கும் மருந்தை அருந்துங்கள், ஏதேனும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் வாருங்கள் என்று கூறினார்.  திருநெல்வேலிக்கு வேலை சம்பந்தமாகச் சென்று வந்தேன். அப்போது மனைவியைக் கைபேசியில் அழைத்தபோது அதிக மூச்சுத் திணறலால் அவரால் பேச முடியவில்லை.

உடனே வடமலையான் மருத்துவமனையில் அனுமதித்தேன். அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அடுத்த நாள் எனக்கும் என் மகளுக்கும் பரிசோதிக்கையில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால், அப்போதே மதுரையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை.

      பிறகு அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவரிடம் தொடர்பு கொண்டு மருத்துவமனையில் ஏப்ரல் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டோம். எனக்கு 20% கொரோனா பாதிக்கப்பட்டுள்ளாதாக சிகிச்சையில் தெரிய வந்தது. 10 நாள்கள் கழித்து மீண்டும் மதுரை திரும்பினோம். 1 வாரம் தனிமைப்படுத்திக்கொண்டு மீண்டும் பணிக்குச் செல்லும் போது அங்கு கட்டட முதலாளியின் தாய்க்கு கொரோனா இருந்தது. எனவே மே 5 வரை வீட்டில் இருக்க வேண்டிய நிலைமை. பின் மே 7 முதல் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்

நான் மருத்துவமனையில் இருந்தபோதும் குளுக்கோஸ் போடும் போதும் என்னுடைய அனுபவத்தைக் கூறி ஃபேஸ்புக்கில் தினமும் ஒரு நல்ல விதமான கருத்துகளைப் பதிவு செய்து வந்தேன். என் மனைவியைவிட எனக்கு பாதிப்பு அதிகம் இல்லை. இந்நிலையில் பாதிப்பை எண்ணி கவலைப்படாமல் இதிலிருந்து மீள்வதற்கான வழியை யோசிக்கத் தொடங்கினோம். 

கொரோனா பாதிக்கப்பட்ட சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு என்ன செய்வது என்று  ஆலோசனை கேட்டனர். என் நண்பர் ஒருவர் அவருக்கு தெரிந்த நபருக்கு என்னுடைய ஃபேஸ்புக் பதிவு அவருடைய பயத்திலிருந்து காப்பாற்றியதாகக் கூறினார். இவ்வாறு எனக்கு தெரிந்த சிலருக்கு என்னுடைய பாசிட்டிவ் வார்த்தைகள் மிகவும் உதவியதாகக் கூறினர்.

என் பதிவை பார்த்த காய்ச்சல் உள்ளவர்கள், தனக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்தவர்கள் எனப் பலரும் என்னைத் தொடர்புகொண்டு `எனக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துருச்சு! சி.டி ஸ்கேன் எடுக்கணுமா? காய்ச்சல் அறிகுறி இருந்தது இப்போது இல்லை... என்ன செய்வது' போன்ற கேள்விகளைக் கேட்டனர். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என் மருத்துவர் என்ன சொன்னாரோ அதை அவர்களுக்கு சொன்னேன்.     

கொரோனாவுக்கான சிகிச்சை எடுக்கும்போது மலச்சிக்கல் ஏற்படும். இதனால் ஒருவர் மிகவும் பயந்துள்ளார். அந்த நபரின் டாக்டர் என்னைத் தொடர்புகொண்டு அவரிடம் பேசுமாறு சொன்னார். நான் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் பேசினேன். நாம் பதற்றப்படும்போதுதான் மூச்சுத்திணறல் அதிகரிக்கும் எனவே பதற்றப்படாமல் இதைக் கையாண்டால் சீக்கிரம் கொரோனாவில் இருந்து மீண்டுவிடலாம் எனக் கூறினேன். அவரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டார். 

வெங்கடேஷ் ஆறுமுகம்
வெங்கடேஷ் ஆறுமுகம்

ஒவ்வொருவரிடமும், நான் இதையெல்லாம் செய்தேன் உங்களின் உடல் நிலையைப் பொறுத்து நீங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யுங்கள் என்று வலியுறுத்துவேன். மேலும் மருந்து, மாத்திரையைப் பற்றி நான் அவர்களிடம் பேசுவதில்லை. என்ன உணவு சாப்பிடலாம், எப்படித் தைரியமாக இருக்கலாம் எனச் சொல்லி வருகிறேன்.

அவர்களை வேறு விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ள மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறேன். புத்தம் வாசிக்க ஆர்வம் இருந்து நேரம் கிடைக்காமல் இருந்தவர்கள் இப்போது வாசிப்பில் ஈடுபடலாம். எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் கவிதை, கதைகளை எழுதலாம். புத்தகங்கள் வெளியிட தயாராகலாம். இதில் ஆர்வமில்லாதவர்கள் நகைச்சுவை படங்களைப் பார்த்து நேரத்தை செலவிடலாம். ஆனால், பலர் என்ன செய்கிறார்கள் என்றால், இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு; இறப்பு விகிதம் என்ன போன்ற செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகிறேன்.

கொரோனாவால் இறந்தவர்களில் பலர் பயத்தால் இறந்தவர்கள்தாம். மன தைரியத்தைக் கொண்டு எதையும் வெல்லலாம் எனும்போது இந்த நோயை வெல்ல முடியாதா?  

மேலும் நான் சிகிச்சை பெற்றபோது எனக்கு சொல்லிக் கொடுத்த மூச்சுப் பயிற்சியை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தேன். எந்தப் பழங்களை சாப்பிடலாம் என்ன உணவுகளை எடுக்கலாம் எனவும் பகிர்ந்து வந்தேன்" என்றார்.

Spread Positivity
Spread Positivity

மேலும் வெங்கடேஷ் ஆறுமுகம், சமூகவலைதளங்களில் ஆக்சிஜன், படுக்கை குறித்த தகவல் கேட்பவர்களுக்கு எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது, என்பதை உறுதி செய்து உதவி வருகிறார். கடந்த 20 நாள்களில் இவருக்கு தெரிந்த நண்பர்கள் 23 பேருக்கு கொரோனா. அனைவருமே ஏற்கனவே கொரோனா வந்த சீனியரான வெங்கடேஷிடம்  பேசி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டனர்! 

மாத்திரை, மருந்து கொரோனாவுக்கு உதவி வந்தாலும், பாசிட்டிவான எண்ணங்களும் தன்னம்பிக்கையும்தான் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பெரும்பங்கு வகிக்கிறது என்பதற்கு இவர்கள்தாம் எடுத்துக்காட்டு. இதுவும் கடந்து போகும் !

அடுத்த கட்டுரைக்கு