Published:Updated:

`வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர்... 4,248 பேரின் மாதிரிகள்!’ - தமிழக கொரோனா அப்டேட்ஸ்

தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்

ஜனவரி 18-ம் தேதி முதலே விமான நிலையத்தில் சோதனை செய்யும் பணிகளைச் செய்துவந்ததாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

அப்போது, “ தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்றுவரை வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 90,541-ஆக இருக்கிறது. வீட்டுக் கண்காணிப்பில் 28 நாள்களை முடித்தவர்களின் எண்ணிக்கை 5,315 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,248 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில், இன்று 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485-ஆக உள்ளது. சமூகவிலகலை மக்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இந்த நோய் உலகத்துக்கே சவாலாக இருக்கிறது. இதை மருத்துவப் பேரழிவு என்றுதான் கூறவேண்டும்

கொரோனா
கொரோனா

தமிழகத்தில், தற்போது 17 இடங்களில் ஆய்வுக்கூடங்கள் இருக்கின்றன. இந்த வாரத்திற்குள், ஆய்வுப்பணிகள் தமிழகம் முழுவதும் துரிதமாக மேற்கொள்ளப்படும். அந்தந்த மருத்துவக் கல்லூரியின் ஆய்வுக்கூடங்களில் உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. ஜனவரி 18-ம் தேதி முதலே விமான நிலையத்தில் சோதனை செய்யும் பணிகளைச் செய்து வந்தோம். அந்தச் சமயத்தில், எந்தெந்த நாடுகளில் கொரோனா தொற்று இருந்ததோ அங்கிருந்து வந்த பயணிகளைச் சோதனை செய்தோம்.

அந்தத் தகவலின்படி, சிலர் வீட்டில் தனிமையில் வைத்து கண்காணிக்கப்பட்டனர். அவர்களில் பலர், இந்த 28 நாள்களைக் கடந்திருப்பார்கள். வெளிநாட்டு விமான போக்குவரத்து தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 29 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 7,23,491 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

அரசு மருத்துவர்களுடன் தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நோயாளிகளின் தன்மை குறித்தும் யாருக்காவது உடல்நிலை மோசமாக உள்ளதா, நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனரா என்ற தகவலைக் கேட்டுவருகிறோம். இதுவரை யாரும் அந்த நிலைக்குச் செல்லவில்லை என்ற தகவலே கிடைத்துள்ளது. கொரோனா நோய் தாக்கம் காரணமாகத்தான் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் சமூகவிலகலை கடைப்பிடியுங்கள். அவ்வப்போது அரசு கூறும் ஆலோசனைகளைக் கேளுங்கள். இந்த நோயால் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என அரசாங்கம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு