Published:Updated:

"15 அடிக்கு குழிதோண்டி, அதில் 200 கிலோ சுண்ணாம்பு போடுவோம்!" - கொரோனா தன்னார்வலர்களின் சேவைப் பணி

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

கொரோனா என்ற பெயரை கேட்டாலே அலறுபவர்களுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளை அரவணைத்து குணமடைய ஊக்கமளிக்கும் இந்தத் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு காண்போரை மனம் நெகிழ வைக்கிறது.

இந்தப் புவி எந்த ஒரு பேரிடரை சந்தித்தாலும், உதவிக்கரம் நீட்ட உடனடியாக விரைபவர்கள் இருக்கிறார்கள். சுனாமி ஆழிப்பேரலை, சென்னை பெருவெள்ளம், புயலுக்குப் பிந்தைய மீட்புப் பணிகள் எனத் தமிழகத்தின் பல பேரிடர் நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இக்கட்டான சூழலில், பெரிய நம்பிக்கை வெளிச்சமாகத் துணை நின்றவர்கள். இவர்களின் இந்தத் தன்னலமற்ற சேவை, தற்போதைய கொரோனா சூழலிலும் நம்பிக்கை தருகிறது.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

உயிர்க்கொல்லி கொரோனாவின் பிடியில் சிக்கி ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து நிற்கிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கொரோனாவால் உலகம் சந்தித்து வரும் பாதிப்புகள் விவரிக்க முடியாத அளவுக்கு நீண்டுகொண்டே செல்கின்றன. நோய் பரவலைத் தடுக்கப் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனக் களத்தில் நிற்கும் சேவகர்களுடன், பல்வேறு தன்னார்வலர்களும் கரம் கோத்து உழைக்கின்றனர். அவர்களில் ஒரு குழுவின் சேவை நமக்கு வியப்பையும் நம்பிக்கையையும் ஒருசேர ஏற்படுத்துகின்றன.

சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தக் குழுவினர், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, உணவு, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கிக் கொடுத்து கவனித்துக்கொள்வது முதல் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் உடல்களை நல்லடக்கம் செய்வதுவரை தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி களப்பணியாற்றி வருகின்றனர். ஆவடி மாநகராட்சியுடன் இணைந்து, இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு மத்தியில் கொரோனா நோயாளிகளை அரவணைத்து குணமடைய ஊக்கமளிக்கும் இந்தத் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பு காண்போரை மனம் நெகிழ வைக்கிறது. அந்தத் தன்னம்பிக்கை இளைஞர்களைச் சந்தித்தோம்.

60 நபர்கள் கொண்ட அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரீகன். களப்பணிக்கு இடையே நம்மிடம் பேசினார்.

"இதுக்கு முன்பு சென்னை நகரத்தைப் பசுமை பூமியா மாத்துற முயற்சியில் ஈடுபட்டோம். அந்த முயற்சியில் பல லட்ச மரங்கள் நட்டு அவற்றை இப்ப வரைக்கும் பராமரிச்சிட்டு வர்றோம். மக்களுக்கு எப்போதெல்லாம் இக்கட்டான சூழல் வருதோ, அப்போதெல்லாம் உடனடியா களத்தில் இறங்கிடுவோம். அப்படித்தான் கொரோனா சூழல்லயும் உயிர் பயம் இல்லாம, துணிச்சலா சேவை செய்ய முடிவெடுத்தோம். கொரோனா சூழ் உலகு ரொம்பவுமே வித்தியாசமா இருக்கு. ஆவடி பகுதியில முதன்முதல்ல கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதுமே களத்துல இறங்கினோம். 130-வது நாளா இன்னைக்கு வரை நோய்த்தடுப்புப் பணியில் தொடர்ந்து வேலை செய்றோம்.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

எங்க குழுவிலுள்ள 60 பேரும், தினமும் காலையில 5 மணிக்கே எழுந்திச்சுடுவோம். உடனடியா மாநகராட்சிக்குப் போய் அங்கிருந்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கொரோனா நோயாளிகளைக் கவனிச்சிக்க தனித்தனியே பிரிஞ்சு போவோம். கொரோனா உறுதி செய்யப்பட்டோர் வீட்டைச் சுத்தி தகரம் அடிக்கறதுல இருந்து அவங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரை, உணவு, தண்ணினு அடுத்த 21 நாளைக்கு அவங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்றோம். அத்துடன் அவங்க குணமாகற வரைக்கும் பத்திரமா பாத்துக்குறோம்.

கொரோனா ஸ்டிக்கர் ஒட்டி இருக்குறத பார்த்தாலே எல்லாரும் பயந்து ஓடிடுறாங்க. ஆனா, நாங்க அவங்க வீட்டுக்குள்ளையே போய் தினமும் கிருமி நாசினி தெளிச்சு, அவங்களுக்கு காலையில சரியா 7 மணிக்கெல்லாம் கபசுரக் குடிநீர் கொடுத்துடுவோம். தொடர்ந்து நாள் முழுக்க அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துகொடுத்து பத்திரமா பார்த்துப்போம்" என்கிறார் ரீகன். இந்தக் குழுவிலுள்ள இளைஞர்கள் அனைவருமே இன்னும் திருமணமாகாதவர்கள்.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

"ஆரம்பத்துல எங்களுக்கும் ரொம்ப பயமாத்தான் இருந்துச்சு. 'இந்த வேலையெல்லாம் ரொம்பவே ஆபத்தானது'ன்னு ஆரம்பத்துல எங்க பெற்றோர்களும் சொன்னாங்க. இப்பவும் சொல்றாங்க. 'நமக்கெதுக்கு இந்த வேலை'ன்னு எங்களால ஒதுங்கி இருக்கவோ, கடந்துபோகவோ விருப்பமில்லை. அதனாலதான் துணிச்சலுடன் சேவைப் பணியில் இறங்கிவிட்டோம்.

இப்போ நாங்க அரசாங்கம் சொன்ன மாதிரி கொரோனாவோடு வாழப் பழகிட்டோம். இத்தனை நாள்கள்ல எத்தனையோ நோயாளிகளை நல்லபடியா குணப்படுத்தியிருக்கோம். ஆனா, சிலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்குறதால நம்மள மீறி இறந்து போய்டுறாங்க. 21 நாள்கள் அவங்க கூடவே இருந்ததால அவங்க எங்களுக்குச் சொந்த உறவுபோல பழக்கமாகிடுறாங்க. எனவே, சிகிச்சை பலனில்லாம இறந்துபோனவங்களை நல்லடக்கம் செய்ற பொறுப்பையும் நாங்களே ஏத்துக்கறோம். இதுவரை 9 நோயாளிகளை நல்லபடியா அவங்கவங்க மத முறைப்படியே அடக்கம் செஞ்சிருக்கோம்.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

பொதுவா ஒருவரை அடக்கம் செய்ய, ஆறடிக்குத்தான் குழி வெட்டுவாங்க. ஆனா, கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய 15 அடிக்குக் குழி வெட்டி, அதுல 200 கிலோ அளவுக்குச் சுண்ணாம்பு கொட்டிப் புதைப்போம். கொரோனா நோயாளிகள் கூடவே இருந்து அவங்கள கவனிக்கிற காரணத்தால, பொதுமக்கள் பலரும் ஒதுக்குறாங்க. நாங்க எதிர்ல வந்தாகூட பயந்து ஓடிப் போறாங்க. உணவகத்துல எங்களுக்குச் சாப்பாடு கொடுக்க மறுக்குறாங்க. அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு" என்கிறார் வருத்தத்துடன்.

"என்னோட சொந்த அனுபவத்துல சொல்றேன்... கொரோனா நோயாளிகளுக்குத் தேவை, மருந்தோ மாத்திரையோ இல்ல! நல்ல மன தைரியமும் தன்னம்பிக்கையும்தான். அதைத்தான் நாங்க கொடுத்துட்டு இருக்கோம். இந்த நேரத்துல எங்க பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்துக்கிறோம். கடவுள் புண்ணியத்துல இதுவரைக்கும் எங்க குழுவினர் யாருக்கும் எந்த பிரச்னையும் வரலை. வந்தாலும், எங்க சேவைப் பணியிலிருந்து பின்வாங்க மாட்டோம்.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

மாநகராட்சி சார்பாக எங்களுக்கு ஒரு நாளைக்கு 400 ரூபாய்வரை கொடுக்குறாங்க. ஆனா, எங்களுக்கு அந்த காசு முக்கியமில்லை. ஏன்னா, நாங்க தன்னார்வலர்கள். இந்த வேலையை முழுக்கவே சேவையாதான் செஞ்சுக்கிட்டு இருக்கோம். எங்க குழுவுல எல்லாருமே நல்ல படிச்ச இளைஞர்கள்தாம். அவங்கவங்க சொந்த வேலைகளை விட்டுட்டு முழு ஈடுபாட்டோட களப்பணி செஞ்சுட்டு இருக்கோம்.

நாங்க கவனிச்சு குணமானவங்க பலர் கைகூப்பி நன்றி சொல்லுவாங்க. அந்த நேரம் எங்களுக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும். மத்தவங்க எங்களுக்குக் கொடுக்குற ஊக்கம்தான் எங்களுக்கு மிகப் பெரிய ஆற்றலைத் தருது. கொரோனா பாதிப்பு தணியும்வரை எங்க சேவைப் பணி ஓயாது..." - உறுதியான குரலில் கூறும் ரீகன், நம்மிடமிருந்து விடைபெற்று, கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தைத் தோளில் மாட்டிக்கொண்டு மீண்டும் களப்பணிக்குக் கிளம்பினார்.

கொரோனா தன்னார்வலர்கள்
கொரோனா தன்னார்வலர்கள்

மன தைரியம் ஒன்றையே ஆகச் சிறந்த மருந்தாக நோயாளிகளுக்குக் கொடுத்து அவர்களைத் திடப்படுத்தும் இந்தத் தன்னம்பிக்கை தன்னார்வலர்களின் செயல் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு