கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாகக் கொரோனா... கொரோனா என்று பயந்து ஓடியதில் நாம் இழந்தவை எத்தனையோ... மருத்துவத்துறைக்கும் மாபெரும் சவாலாக இருந்த கொரோனா தொற்று, ஏராளமான மறைமுக பாதிப்புகளை ஏற்படுத்தியது. மிக முக்கியமாகக் கொரோனாவின் மீது குவிந்த பயத்தில் பலரும் தங்களுக்கு இருக்கும் பிற நோய்களைக் கவனிக்கவும், தொடர்ந்து சிகிச்சை பெறவும் மறந்தார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவற்றுள் முக்கியமானது டிபி எனப்படும் காசநோய். வழக்கமாகப் பதிவாகும் காசநோய் பாதிப்புகளோடு ஒப்பிடும்போது 2019 - 2020-ம் ஆண்டுகளில் 25 சதவிகித பாதிப்புகள் குறைந்து பதிவாகியிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, லட்சக் கணக்கான காசநோயாளிகளைக் கண்டுபிடிக்கத் தவறியிருக்கிறோம் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமல்ல, தேசிய சுகாதார இயக்கத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி, 2020, ஜூன் மாதக் கணக்கின்படி, காசநோய் சிகிச்சைக்காகப் பதிவுசெய்தவர்களில் 45 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டிய காசநோயாளிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காசநோய் ஒழிப்பு பிரசாரத்தை இந்தியா முன்னெடுத்திருக்கும் நிலையில், காசநோய் சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு நோயின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇது குறித்துப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி.
``கொரோனாவின் முதல் அலை ஆரம்பித்தபோது அந்த நோய் குறித்த சரியான பார்வையோ, தெளிவோ நமக்கில்லை. எல்லோரின் ஒட்டுமொத்த கவனமும் கோவிட் நோய்த்தொற்றின் மீது மட்டுமே குவிந்தது. மற்ற சிகிச்சைகளை எல்லாம் மறந்து கொரோனாவுக்கான சிகிச்சையில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். பெரும்பாலான மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றினோம். எமர்ஜென்சி எனப்படும் அவசரகால சிகிச்சைகளைத் தவிர நாள்பட்ட நோய்களுக்கான பெரும்பாலான சிகிச்சைகள் தடைபட்டன.

கொரோனா உச்சத்திலிருந்தபோது மக்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் நேரில் வரத் தயக்கம் இருந்தது. ஊரடங்கு காரணமாக மக்கள் வெளியே வருவதிலும் சிக்கல்கள் இருந்தன. தொற்றுப் பரவாமல் தடுப்பதில் மருத்துவர்களுக்கும் கவலை இருந்தது. ஆன்லைன் கன்சல்ட்டேஷன்கள் அதிகரித்தன. எல்லாம் சேர்ந்து இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தன. அப்படி பாதிக்கப்பட்டவற்றில் மருத்துவச் சேவையும் ஒன்று. அதாவது நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட மற்ற நோய்களுக்கான சிகிச்சைகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது டிபி எனப்படும் காசநோய். இந்தியாவில் காசநோய் பாதிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதை முற்றிலும் ஒழிப்பதற்கான முன்னெடுப்புகள் நடப்பதை நாம் அறிவோம்.
கொரோனாவும் காசநோயும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தன்மை கொண்டவை. எல்லா மருந்துகளுக்கும் கேட்கக்கூடிய காசநோய், குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு மட்டும் கட்டுப்படும் காசநோய் என இரண்டு வகை உண்டு. காசநோய்க்கான மாத்திரைகளின் அளவு சற்றுப் பெரிதாக இருக்கும். பக்கவிளைவுகளும் கொஞ்சம் அதிகம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்காகத்தான் யாராவது உடனிருந்து நோயாளி சரியாக மருந்துகளை எடுத்துக்கொள்கிறாரா என்று பார்க்கும் Directly Observed Therapy (DOT) வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொண்டால் அரசு ஊக்கத்தொகையை அறிவிக்கிறது. ஏனென்றால், மருந்துகளைச் சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் அது மருந்துகளுக்குக் கட்டுப்படாத டிபியாக மாற வாய்ப்புண்டு.
அவுட்ரீச் வொர்க்கர்ஸ் என்போர்தான் காசநோயாளிகளைக் கண்காணிப்பவர்கள். கோவிட் சூழலில் இவர்கள் கொரோனா சிகிச்சைக்கான பணிகளுக்கு மாற்றப்பட்டார்கள். காசநோய் சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட இதுவும் முக்கிய காரணம். காசநோய் சிகிச்சை மட்டுமல்ல, குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் செலுத்துவது உட்பட பல மருத்துவச் சேவைகள் கொரோனா காலத்தில் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியாவைப் பொறுத்தவரை காசநோய் சிகிச்சை பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் காசநோய் பாதித்தவர்கள் அதிகம் வருவதை மருத்துவர்கள் பார்க்கிறோம்.

தவிர, கொரோனா பாதிப்பு வந்து மீண்டவர்களுக்கு முன்பு எப்போதோ பாதித்த காசநோய் திரும்ப வருவதற்கும், கொரோனாவுக்குப் பிறகு குறைந்த எதிர்ப்பு சக்தியால் காசநோய் பாதிப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சில ஆய்வுகள் சொல்கின்றன.
சிகிச்சைகள், தடுப்பூசிகள், மருந்துகள் மூலம் கொரோனா கட்டுக்குள் வர ஆரம்பிக்கும்போது, அதாவது அது சமூக ஆபத்தாகாமல் தடுக்கப்படும்போது இத்தனை நாள்களாக விடுபட்டுப் போன தொற்றுநோய்கள் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சை நிலவரத்தையும், பிற மருத்துவ சேவைகள், அவற்றைத் தொடர இயலாமல் போன நிலையையும் சந்திக்க வேண்டி வரும்'' என்கிறார் டாக்டர் பூங்குழலி.