Published:Updated:

பரப்ப வந்தது மதத்தையா... மரணத்தையா? படரும் பயம்... தொடரும் கைது நடவடிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொரோனா பாதிப்பையடுத்து சுத்தப்படுத்தப்படும் மசூதி
கொரோனா பாதிப்பையடுத்து சுத்தப்படுத்தப்படும் மசூதி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மதகுருக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை பாயும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடவுளைப் போல கண்ணுக்குத் தெரியாத கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கிறது உலகம். ஆனால், கடவுளின் பெயரைக் கொண்டு, கொரோனாவைப் பரப்பி மரண வரத்தைத் தருவதுதான் மனிதகுலத்தையே ஆட்டம் காண வைத்திருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.

இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் 90 சதவிகிதம் பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தப்லீக் ஜமாஅத் சார்பில் கூட்டம் நடைபெறவில்லையென்றால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் அதிகமாகியிருக்காது என்பதுதான் தற்போதைய நிலை. இவர்கள் தப்லீக் ஜமாஅத்தில் பங்கேற்கச் சென்றது தவறில்லை. ஆனால், நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவத்தொடங்கியிருந்த சூழ்நிலையில், மக்கள் வெளிநாட்டுப் பயணங்கள், உள்நாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதை ஏற்று இந்தப் பயணத்தை இவர்கள் தவிர்க்காமல் தொலைதுார பயணம் மேற்கொண்டு பெரும் திரளான கூட்டத்தில் பங்கேற்றதுதான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணமாகியுள்ளது.

Corona
Corona

இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டும் பங்கேற்றிருந்தால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதில் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வந்திருந்த ஏராளமான மதகுருக்கள் பங்கேற்றுள்ளனர். டெல்லி மாநாட்டில் மட்டுமன்றி, தமிழகத்தில் மதுரை, ஈரோடு, சேலம் போன்ற நகரங்களுக்கும் வந்து இவர்கள் மதப்பிரசங்கம் செய்துள்ளனர். கொரோனா பிடியில் சிக்கியுள்ள இந்த நாட்டிலிருந்து வந்தவர்களை உள்துறை அமைச்சகம் அனுமதித்தது தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர் என்று உள்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

தற்போதைய, சூழ்நிலையில் இவர்களை அனுமதித்ததே உள்துறை செய்த தவறுதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அனுமதித்த காரணத்தால்தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மதகுருக்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று வேகமாகப் பரவிவந்த காலகட்டத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த இவர்களை மசூதிகளுக்கு அழைத்து வந்தது சரியா என்று இஸ்லாமிய மக்களே, தங்களுடைய ஜமாஅத்களில் உள்ள நிர்வாகிகளைப் பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. அதற்குக் காரணம் சர்வதேச விமானங்கள் ஏராளமாக வந்து செல்வதுதான். வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டைச் சேர்ந்த பயணிகளும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் வந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்பதால்தான் சர்வதேச விமான நிலையங்களை அரசு முடக்கியது. அத்தகைய நிலையில், மதகுருக்களை தமிழகத்துக்கு வர அனுமதித்ததன் மூலமாக மாபெரும் தவற்றைச் செய்திருக்கிறார்கள் ஜமாஅத் நிர்வாகிகள் பலர். கடந்த வாரத்தில், சென்னை விமான நிலையத்தில் 10 மலேசியர்கள் பிடிபட்டனர். டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற இவர்கள் மதுரை வந்துள்ளனர். பிறகு, அங்கிருந்து தென்காசி, குற்றாலம் போன்ற பகுதிகளில் 10 நாள்கள் தங்கியிருந்து மதப்பிரசங்கம் செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை குற்றாலம், தென்காசி போன்ற சிறிய நகரங்களுக்கு அழைத்துச் சென்றதன் மூலமாக, ஜமாஅத் நிர்வாகிகளே கொரோனா தொற்று பரவக் காரணமாயிருந்துள்ளனர்

தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்
தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசிய அரசு இந்தியாவில் தங்கியுள்ள தங்கள் நாட்டு பிரஜைகளை மீட்க சிறப்பு விமானம் ஒன்றை சென்னைக்கு அனுப்பியது. இந்த விமானத்தில் ஏற முயன்ற மலேசியர்கள் விசா நடைமுறைகளை மீறியதால், சென்னை விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டனர். அப்போதுதான் டெல்லிக்கும் தமிழகத்துக்கும் வந்த மதகுருக்கள் அனைவருமே சுற்றுலா விசாவில் வந்ததும் உறுதியானது. மதம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பவர்கள், மிஷனரிகள் என்ற பெயரில் விசா வாங்க வேண்டும். ஆனால், டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 90 சதவிகித வெளிநாட்டினர் சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். சாதாரண சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளை மீறினால் பெரிதாகத் தெரியாது. ஆனால், நாடு இப்போது அசாதாரண சூழலில் இருக்கும்போது வெளிநாட்டு மதகுருக்களை அழைத்து வந்ததே கைது நடவடிக்கைக்குக் காரணமாகியுள்ளது. தப்லீக் ஜமாஅத் என்பது சாதாரண ஒரு அமைப்பு இல்லை. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இதன் தலைமையகம் உள்ளது. தலைமையகத்தில் மட்டும் ஒரே சமயத்தில் 5,000 பேர் தங்கிக்கொள்ள முடியும். அமெரிக்கா உள்ளிட்ட 80 நாடுகளில் கிளை பரப்பியுள்ளது இந்த அமைப்பு. மெக்காவுக்கு அடுத்தபடியாக வங்க தேசத்தில் டாகா நகரில் நடைபெறும் தப்லீக் ஜமாஅத்தின் மாநாட்டுக்குத்தான் அதிகப்படியான இஸ்லாமிய மக்கள் கூடுவார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட்டர்கள் இன்ஜமாம், சாகித் அப்ரிடி கூட இந்த அமைப்பை பின்பற்றுபவர்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் மவுலானா சாத். சிறந்த அறிஞர் என்று அறியப்படும், இவருக்கு கொரோனா குறித்து அனைத்தும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால், அலட்சியத்திலும் சட்டத்தை மீறும் வகையிலும் இவர் இந்த மாநாட்டை நடத்தியிருப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இந்த அமைப்பின் மீதுள்ள நம்பிக்கையிலும் மதத்தின் மீதுள்ள பற்றினாலும் இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். இப்போது பங்கேற்றவர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க, இதை நடத்திய தப்லீக் ஜமாஅத்தின் தலைவர் மவுலானா சாத் தலைமறைவாக உள்ளார். இவர் கைது செய்யப்பட்டால், பிரிட்டிஷார் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொற்று நோய் தடுப்புச்சட்டத்தின் கீழ் 6 மாத கால தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படலாம். தேசத்துக்கே அச்சுறுத்தலாகி, பலருடைய உயிர்களைக் காவு வாங்கியுள்ள இந்த நோய்த்தொற்றைப் பரப்பக் காரணமானவருக்கு இந்தத் தண்டனை மிகவும் குறைவாகத் தெரியலாம். ஆனால், நம்முடைய சட்டத்தில் இதற்கு மேல் தண்டனை கொடுக்க வழியில்லை. நம்நாட்டில் சட்டத்தை மீறுவோர் அல்லது மதிக்காதோர் அதிகமாவதற்குக் காரணமும் இதுவே.

chennai airport
chennai airport

வெளிநாட்டினர் மீது என்ன நடவடிக்கை பாயும்?

சுற்றுலா விசாவில் தமிழகம் வந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்ட மதகுருமார்கள் தொற்று நோயைப் பரப்பியதாகத் தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பி மதப்பிரசாரத்தில் ஈடுபட்டதாக, ஈரோட்டில் தாய்லாந்தைச் சேர்ந்த மதகுருமார்கள் 6 பேர், மதுராந்தகத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 8 பேர், சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தில் 11 இந்தோனேசிய மதகுருமார்கள் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மதுரை மலைப்பட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளிட்ட 10 பேர் மீதும், திண்டுக்கல்லில் 11 பேர் எனத் தமிழகம் முழுவதும் 129 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலர் சிகிச்சையில் இருப்பதால், சிகிச்சை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. மயிலாடுதுறை அருகே நிடூரிலுள்ள மசூதியை சோதனையிட்ட தமிழக காவல்துறையினர், டூரிஸ்ட் விசாவில் வந்து தங்கியிருந்த 12 வெளிநாட்டு மதகுருமார்களை கைது செய்துள்ளனர். அவர்களின் பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுமா, தமிழக அரசு என்ன செய்யப்போகிறது எனத் தஞ்சை சரகக் காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

"டூரிஸ்ட் விசாவில் வந்து இங்கு மதப்பிரசாரத்தில் ஈடுபட்டது சட்டப்படி தவறு. மேலும், டெல்லி மத கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் உடல்நிலையை சோதித்துக் கொள்ளும்படி அரசு பலமுறை அறிவித்துவிட்டது. ஆனால், ஒருசிலர் அரசுக்கு ஒத்துழைக்காமல் மறைந்துகொள்கின்றனர். மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டவர்கள்கூட இப்படிப் பதுங்கியவர்கள்தான். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாஸ்போர்ட் முடக்கப்படும். இவர்களின் நாட்டு தூதரகத்துக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். கொரோனா காலம் முடிந்த பிறகு, அரசு ஒருவேளை கருணை காட்டினால், இவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம்.

மசூதிகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். மிகுந்த விழிப்புணர்வுடனே செயல்படுகிறோம்.
போலீஸ் அதிகாரிகள்

இவர்கள் இந்தியாவில் நுழைவதற்கு நிரந்தரத் தடை விதிக்கப்படும்" என்றவரிடம், "உளவுத்துறை மெத்தனமாக செயல்படுகிறதா, இவர்களை கண்டறிய ஏன் இந்த தாமதம்?" எனக் கேட்டோம்.

"உளவுத்துறை தன் சக்திக்கு மீறியே இவ்விவகாரத்தில் விழிப்புடன் செயல்படுகிறது. டெல்லி மாநாடுக்கு சென்று வந்தவர்களின் பட்டியல் எங்களுக்கு சில நாள்களுக்கு முன்னர்தான் முழுவதுமாகக் கிடைத்தது. இன்னும் 250 பேரை தமிழகம் முழுவதும் தேடிக்கொண்டிருக்கிறோம். அவர்களாக முன்வந்து தங்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டுகிறோம். சந்தேகப்படும் ஏரியாக்களில் உள்ள மசூதிகள், தங்கும் விடுதிகளை கண்காணித்து, சாப்பாட்டு பொட்டலங்கள் உள்ளே கொண்டு செல்லப்படுகிறதா, காய்கறிகளைக் கொண்டு செல்கிறார்களா எனக் கண்காணிக்கிறோம். இப்படி உளவு பார்த்துதான் மயிலாடுதுறை, ஈரோடு, மதுரை, சென்னை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தங்களை வெளிக்காட்டாமல் இருந்த கொரோனா நோயாளிகளைக் கண்டறிந்தோம்" என்றார்.

டெல்லியில் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றவர்களை மத்திய உளவுப்பிரிவான 'இண்டெலிஜன்ஸ் பீரோ'வும்(ஐ.பி.) தீவிரமாக கண்காணிக்கிறதாம். ஈரோட்டில் தாய்லாந்தை சேர்ந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். ஏற்கெனவே அவருக்கு பல நோய்த் தாக்குதல் இருந்ததாக தமிழக அரசு பூசி மெழுகியது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அவரோடு தொடர்பில் இருந்த ஆறு பேரை உடனே பாதுகாப்பில் எடுக்குமாறும் தமிழக காவல்துறையை ஐ.பி. உஷார்படுத்தியது. இதைத் தொடர்ந்துதான், தமிழக அரசின் நடவடிக்கையும் பாய்ந்ததாம். மத்திய அரசு முதலில் வெளியிட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஊரடங்கு பின்புலத்தில் ஐ.பி. ரிப்போர்ட் இருந்ததுதான் காரணம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள். தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், டூரிஸ்ட் விசாவில் வந்தவர்கள் ஏன் தமிழக மசூதிகளில் பதுங்கியிருந்தார்கள், இவர்களின் தொழில் பின்புலம் என்ன, தமிழக அரசின் கொரோனா நிவாரண நடவடிக்கைகள் என்னென்ன என தினமும் நான்கு ரிப்போர்ட்டுகளை மத்திய உள்துறைக்கு அனுப்புகிறது ஐ.பி. கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு ஏதாவது மறைக்க முயன்றாலும், மத்திய அரசின் கையில் அனைத்து ரிக்கார்டுகளும் உள்ளதாம்.

கொரோனாவைத் திறம்பட சமாளித்தும் தைவானை உலக நாடுகள் புறக்கணிக்கக் காரணம் என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு